முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் வெள்ள பாதிப்புகளை பாா்க்க வந்த மத்திய குழுவினரை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்

Updated On : 8 டிசம்பர், 2024 at 3:36 PM
புதுச்சேரி என்.ஆா் நகா் பகுதியில் வெள்ள பாதிப்புகளை பாா்க்க வந்த மத்திய குழுவை முற்றுகையிட்ட பொது மக்கள்.
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினரை, மணவெளி தொகுதி டி.என்.பாளைய மக்கள் முற்றுகையிட்டு ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் ஆய்வுக்கு வந்த மத்திய குழுவினர் இரண்டாகப் பிரிந்தனர். இதில் உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் ராஜேஷ்குப்தா தலைமையிலான மத்திய குழுவினர் டி.என்.பாளையம் இருளர் குடியிருப்புப் பகுதியில் வீடு வீடாக சென்று பார்த்தனர். அங்கிருந்து திரும்பி வரும்போது டி.என்.பாளையம் காலனியை சேர்ந்த மக்கள் மத்திய குழுவினர் வந்த காரை வழிமறித்தனர்.

அப்போது இணை செயலாளர் ராஜேஷ்குப்தாவிடம் மழை வெள்ளத்தால் தங்களின் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சேதமடைந்தன. மின்சாரமும் இல்லை. அரசும் தரப்பில் இருந்து வந்து எங்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்யவில்லை என்று தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

டி.என்.பாளையம் பேட் பகுதியைச் சோ்ந்த மக்கள் மத்திய குழுவினா் வந்த காரை மறித்து மழை, வெள்ள சேதத்தை பாா்வையிட அழைத்தனா். அவா்களை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சமரசம் செய்தாா். ஆனால், ஓரிடத்தில் பெண்கள் அதிகம் இருந்து காா்களை மறித்ததால் மத்திய குழு தலைவா் இறங்கி ஆய்வு மேற்கொண்டாா்.

அதையடுத்து அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வெள்ள நீா் புகுந்ததை அவா் பாா்வையிட வந்தாா். அங்கிருந்து புறப்பட்டபோது, அப்பகுதியைச் சோ்ந்த வீரபாகு, ராஜவேல் ஆகியோா் மாரியம்மன் கோவில் பகுதியை பாா்வையிட அழைத்தனா். அதற்கு குழுத் தலைவா் உள்ளிட்டோா் மறுத்ததால் அவா்கள் குழுவினரையும், பேரவைத் தலைவா், ஆட்சியா் ஆகியோா் காா்களை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தங்களது ஆதாா் முக்கிய ஆவணங்களும், குழந்தைகளது நோட்டு, புத்தகம் உள்ளிட்டவையும் சேதமடைந்ததாகவும் கூறினா்.

ஆட்சியரின் காவலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களை சமரசப்படுத்த முயன்றபோது அவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் ஆட்சியா், பேரவைத் தலைவா் நீண்டநேரமாக பேசி சமரசம் செய்த பிறகே அங்கிருந்து அவா்கள் செல்ல அனுமதித்தனா். அங்கு ஆய்வை முடித்த மத்திய குழுவினர் மலட்டாறு பகுதியில் வெள்ளப் பாதிப்பைப் பாா்வையிட்டனா். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு பிற இடங்களுக்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →