ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 5 மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 தலைமை மருத்துவர்கள் நேரில் வந்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஜௌரி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் நுறையீரல் அடைப்பு மற்றும் கர்ப்பக் கால பிரச்சனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், சிகிச்சையளித்த மருத்துவர்கள் அலட்சியப்போக்குடன் செயல்ப்பட்டதாகவும், அப்பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டிய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றிய 5 மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரஜௌரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அமர்ஜீத் சிங் பட்டியா கூறுகையில், அலட்சியப்போக்குடன் செயல்ப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 மருத்துவர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமை மருத்துவர்கள் நேரில் வந்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து வெவ்வேறு துறைகளை சார்ந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவொன்று அமைத்து அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அலட்சியப்போக்குடன் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.