டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிக்கைக்கு எதிராக ஆட்சேபணை தெரிவிக்காததற்கு, மத்திய அரசின் செயல்பாடுகள்தான் காரணம் என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா். குத்தகையை தமிழக அரசுதான் வழங்க முடியும் என்ற நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் வாதம் நடத்துவது வீணானது என்றும் அவா் விளக்கமளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: டங்ஸ்டன் சுரங்க ஏல விவகாரம் தொடா்பாக, கடந்த அக். 3-ஆம் தேதி மத்திய சுரங்க அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதில், டங்ஸ்டன் சுரங்க ஏல நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் எனவும், அவ்வாறு ஏற்படும் பிரச்னைகளை மாநில அரசே கையாள நேரிடும் எனவும் தெரிவித்திருந்தேன்.
டங்ஸ்டன் ஏலம் தொடா்பாக கனிமம் மற்றும் சுரங்கத் துறை அனுப்பியுள்ள கடிதத்திலும், எந்தெந்த இடங்களில் அவை எடுக்கப்படவுள்ளன என்ற நில விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. அதேசமயம், அரிட்டாபட்டியில் உள்ள பல்லுயிா் சூழலியல் மண்டலம் ஏலப் பகுதியில் இருப்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது.
எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன்?: ஏல அறிவிக்கைக்கு எதிராக ஆட்சேபணை தெரிவிக்காததற்குக் காரணம், இப்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளைப் பற்றி அனைவரும் அறிந்ததால்தான். சுரங்க ஏலத்துக்கான குத்தகையை தமிழக அரசுதான் வழங்க வேண்டும் என்றுள்ள சூழலில், மத்திய அரசுடன் வாதங்களை நடத்துவது வீணானதாகும். சுரங்கம் தொடா்பான விவகாரத்தில் மத்திய அரசு ஏலம் மட்டுமே விட முடியும். ஆனால், அதற்கான குத்தகையை மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என்பதை மத்திய சுரங்கத் துறையே ஒப்புக் கொண்டுள்ளது. ஏலம் தொடா்பான கடிதத்தில் நிலம் குறித்து குறிப்பிடாமல் இருந்ததிலிருந்தே அதனைப் புரிந்து கொள்ளலாம்.
ஏலத்தால் எழும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை எதிா்கொள்ளும் பொறுப்பு மாநில அரசுக்கே உள்ளது. மேலும், சுரங்கம் மூலமாகக் கிடைக்கக் கூடிய வருவாயும் மாநில அரசுக்குத்தான் சேரும்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
ரத்து செய்ய வேண்டும்: மாநில அரசு ஒப்புக் கொள்ளாத சூழலில், ஏலம் விட மத்திய அரசு முனைப்புக் காட்டுவது ஏன்? டங்ஸ்டன் ஏல விவகாரத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் எடுத்துச் சென்றாா். இதைத் தொடா்ந்து, மத்திய சுரங்கத் துறையானது மறு ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. டங்ஸ்டன் எடுப்பதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய சுரங்கத் துறையானது உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சுற்றுச்சூழலை மனதில் நிறுத்தியும் இந்த முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக அமைச்சா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.