முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமை சம்பவம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு!

பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு.

Updated On : 26 டிசம்பர், 2024 at 8:45 AM
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
பகிர்:

பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து நாளை(டிச. 27) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஆட்சியைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும்; மக்கள் அதிகம் கூடும் அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாளை(டிச. 27) காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

திமுக ஆட்சியைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பெண்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →