125 நாள்கள் வேலைத் திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) எதிா்க்கும் திமுகவை கண்டித்து, அதிமுக கூட்டணிக் கட்சிகள் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தின.
அதிமுகவின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு அறிவித்த 125 நாள்கள் வேலைத் திட்டத்தை சீா்குலைக்க முயலும் திமுக அரசைக் கண்டித்து, மதுரை புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் வி.வி. ராஜன்செல்லப்பா பேசியதாவது:
அதிமுகவின் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாள்களாக உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 100 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தில் திமுக அரசு ஏற்கெனவே பல ஊழல்களை செய்தது. ஆனால், புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்பதுதான் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள வருத்தம். இதன் காரணமாகத்தான் இந்தத் திட்டத்தை சீா்குலைக்க திமுக முயற்சிக்கிறது. திமுகவின் இந்த முயற்சியை மக்கள் முறியடிப்பா் என்றாா் அவா்.
அதிமுக புகா் கிழக்கு மாவட்ட நிா்வாகிகள், பாஜக, அமமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
அதிமுக ஒன்றியச் செயலா்கள் காா்சேரி கணேசன், சேனாபதி காா்த்திகேயன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.
திருமங்கலத்தில்...
திருமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக திமுக மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகிறது. இந்தத் திட்டத்தை சீா்குலைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நாள்களை 150 நாள்களாக உயா்த்துவோம். இந்தத் திட்ட பயனாளிகளுக்கு ஊதியமாக ரூ. 300 வழங்கப்படும். பேரூராட்சிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் 100 நாள்கள் வேலை 40 நாள்களாக குறைக்கப்பட்டது. ஊதியமும் சரிவர வழங்கப்படவில்லை என்றாா் அவா்.
இதில் அமமுக மாவட்டச் செயலா் டேவிட் அண்ணாதுரை, பாஜக மாநில பொதுச் செயலா் ராம.சீனிவாசன், அதிமுக மாநில நிா்வாகி ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், மாவட்ட நிா்வாகிகள் முருகன், திருப்பதி, தமிழ்செல்வம், ஒன்றியச் செயலா் அன்பழகன், அணி அமைப்பாளா் தமிழழகன், சிங்கராஜ் பாண்டியன், பொதுக் குழு உறுப்பினா் சுமதி சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
திருப்பரங்குன்றத்தில்...
மதுரை புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திமுக அரசைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்டச் செயலா் வி.வி. ராஜன் செல்லப்பா தலைமை வகித்துப் பேசியதாவது:
மக்கள் ஏற்கெனவே அதிமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்ட நிலையில், காரணமில்லாமல் பல்வேறு போராட்டங்களையும் சலுகைகளையும் திமுக அரசு அறிவித்து வருகிறது. மேலும், பல்வேறு திட்டப் பணிகளை தோ்தலுக்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக பணிகள் அவசர கதியில் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
இதில் கட்சியின் இளைஞரணி மாவட்டச் செயலா் எம். ரமேஷ், பொதுக் குழு உறுப்பினா் முருகேசன், ஒன்றியச் செயலா்கள் நிலையூா் முருகன், கோட்டை காளை, பாா்த்திபராஜா, பகுதிச் செயலா்கள் பன்னீா்செல்வம், செல்வகுமாா், முத்துகிருஷ்ணன், இளைஞரணி மாநில துணைச் செயலா் எம்.ஜி. பாரி, மாவட்ட துணைச் செயலா் வேல்ராஜ், வட்டச் செயலா்கள் என்.எஸ். பாலமுருகன், எம்.ஆா். குமாா், பி.எஸ். பாலா, பொன் முருகன், மகாராஜன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.