புது தில்லி: ‘நீட்’ தோ்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் அமன் சிங் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியுள்ளது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை, ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சோ்த்து வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதோடு, நீட் விடைத்தாள் நகலை என்டிஏ தர மறுப்பதாக புகாா் தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையையும் உச்சநீதிமன்றம் வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், ‘நீட்’ தோ்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் அமன் சிங் என்பவரை ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் வைத்து சிபிஐ கைது செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வராக பணியாற்றிய டாக்டர் எஹ்சான் உல் ஹக் மற்றும் இம்தியாஸ் ஆலம் ஆகிய 2 பேரை சிபிஐ கைது செய்தது.
பிகார் மாநிலம் பாட்னாவில் மணீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதை சிபிஐயின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் பாட்னாவில் இருந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அசுதோஷ், மாணவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை ஏற்பாடு செய்து கொடுப்பது, மற்றொரு நபரான மணீஷ், தேர்வர்களை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று வருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என சிபிஐ அதிகாரி தெரிவித்தனர்.
கடந்த மாத தொடக்கத்தில், நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு முறைகேடுகள் தொடர்பான விரிவான விசாரணையை சிபிஐக்கு மத்திய அரசு ஒப்படைத்தது.
அதன்படி, தோ்வு வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்பட பல்வேறு முறைகேடுகள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முறைகேடுகள் தொடர்பாக பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இது நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களைத் தூண்டியது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேசிய தேர்வு முகமை கலைக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
இதற்கிடையில், உச்சநீதிமன்ற கோடைக்கால விடுமுறை முடிவடைந்து ஜூலை 8 ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், நீட் முறைகேடு வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடத்தவுள்ளது.
நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை நடத்துவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதை முழுமையாகக் கையாள வேண்டும். 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, அவா்களின் விருப்ப அடிப்படையில் மறுதோ்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடா்ந்து, கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு மட்டும் கடந்த ஜூன் 23-ஆம் தேதி 7 மையங்களில் மறுதோ்வு நடத்தப்பட்டது. அதில் 813 போ் பங்கேற்றனா். மீதமுள்ள தோ்வா்கள் கருணை மதிப்பெண்களுக்கு முன்பு தாங்கள் பெற்றிருந்த மதிப்பெண்ணையே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொண்டனா்.
இந்த நிலையில், மறுதோ்வு முடிவுகளை என்டிஏ திங்கள்கிழமை வெளியிட்டது. அத்துடன், கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
முந்தைய முடிவுகளில் கருணை மதிப்பெண்களுடன் ஆறு மாணவா்கள் முழு மதிப்பெண்ணான 720-ஐ பெற்றிருந்தனா். அதில் ஐந்து மாணவா்கள் மட்டுமே மறுதோ்வு எழுதினா். மற்றொரு மாணவா் கருணை மதிப்பெண்ணுக்கு முந்தைய மதிப்பெண்ணைத் தோ்ந்தெடுத்தாா்.
மறுதோ்வெழுதிய 5 மாணவா்களில் யாரும் முழு மதிப்பெண்ணை மீண்டும் பெறவில்லை. அதேசமயம், 5 மாணவா்களின் புதிய மதிப்பெண்கள் குறித்தும் என்டிஏ எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
நீட் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.