கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம். 
தற்போதைய செய்திகள்

கப்பலூர் சுங்கச்சாவடி போராட்டம்: ஆர்.பி. உதயகுமார், 1000 பேர் கைது!

சுங்கச்சாவடியை முற்றுகையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

DIN

கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், சுங்கச்சாவடியை முற்றுகையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றக் கோரி செவ்வாய்க்கிழமை திருமங்கலம் முழுவதும் கடையடைப்பு மற்றும் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

பெங்களூர் - கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இது சட்ட விதிகளுக்கு மீறி அமைக்கப்பட்டதாகக் கூறி இப்பகுதி பொதுமக்கள் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதையடுத்து திருமங்கலம் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சுங்கச்சாவடியை புதிதாக தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்ததையடுத்து, அனைவரும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்தது. உள்ளூர் வாகனங்கள் கடந்த பத்தாம் தேதி முதல் 50% மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு மற்றும் பொதுமக்கள் கடந்த பத்தாம் தேதி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

சாலையில் மறியல்

இந்த போராட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும், தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களைக் கட்டணம் செலுத்தக் கூறி வலியுறுத்தியதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்தனர்.

இந்த முற்றுகை போராட்டத்தை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை முழுக் கடை அடைப்பு போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

மூடப்பட்டிருந்த கடைகள்

முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் மற்றும் கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை முதலே சுங்கச்சாவடி முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மேலும், திருமங்கலம் நகர்ப் பகுதி முழுவதும் போராட்டம் நடைபெற்றபோது நூற்றுக்கணக்கான மக்களை போலிஸார் ஆங்காங்கே கைது செய்தனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களை விடுவிக்கக் கோரி மேலக்கோட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை - விருதுநகர் நான்கு வழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மறியல் செய்தவர்களைக் கைது செய்து 5 தனியார் திருமண மண்டபங்களில் வைத்தனர்.

தற்போது கப்பலூர் சுங்கச்சாவடி முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு போக்குவரத்து வழக்கமான நிலைக்கு திரும்பி உள்ளது.

போராட்டத்தில் உதயகுமார்

நகர்ப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டாலும் நகர பேருந்துகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல செயல்பட்டு வந்தன.

தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. ஒரு சில தனியார் நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT