சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என கோருகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டம் சனிக்கிழமை காலை கூடியதும் இரண்டாவது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள், பேரவைக் கூட்டம் தொடங்கிய உடனேயே கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் குறித்து கேள்வி நேரத்தின் போது பேச அதிமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை.
மேலும் கேள்வி நேரம் முடிந்து, நேரமில்லாத நேரத்தில் எந்த பிரச்னையை எழுப்பினாலும் விவாதிக்க அனுமதி தருகிறேன் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
மக்கள் பிரச்னைகளை பேசும் நேரத்தில் உங்கள் நெருக்கடியை காண்பிக்காதீர்கள் என்றும்,கேள்வி நேரம் முடிந்தவுடன் அனுமதி தரப்படும் என தெரிவித்த பேரவைத் தலைவர், எதிர்க்கட்சியினர் இவ்வாறு செய்வது ஏற்படுயது இல்லை என கூறினார்.
ஆனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டு தொடர்ந்து அமளில் ஈடுபட்ட நிலையில், பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காததால் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் இரண்டாவது நாளாக வெளிநடப்பு செய்தனர்.
மெத்தனத்தால் விளையும் விபரீதம்
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிரிக்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, கள்ளச்சாராயம் அருந்தியவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்தும், சிகிச்சை பெறுபவர்கள் நிலை என்ன என்பது குறித்து அறிய பேரவையில் பேச அனுமதி கேட்டும், பேரவைத் தலைவர் தங்களுக்கு
அனுமதி தரவில்லை. விஷ முறிவு மருந்துகள் அரசு மருத்துவமனையில் இல்லை என குற்றம்சாட்டினார்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி 183 பேர் பாதிக்கப்பட்டு, 55 பேர் இறந்துள்ளதாக செய்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு மெத்தன போக்கை கடைப்பிடிக்கிறது என தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் குடித்து தாமதமாக வந்ததால் உயிரழப்பு என்கிறார்கள். அதற்கு அரசு தான் காரணம் என தெரிவித்த அவர், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்கள் அனைவரையும் வெவ்வேறு காரணங்களால் இறந்ததாக கூறியதால் தான் உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தெரிவித்தார். உயிரிழந்தவர்கள்
கள்ளச்சாராயத்தால் மரணம் இல்லை என ஆட்சியர் தவறான தகவல் தொடுத்ததால்தான், மருத்துவமனைக்கு வருவதற்கு மக்கள் அலட்சியம் காட்டினர்.அதனால்தான் கள்ளச்சாரய மரணம் அதிகரித்தது என கூறினார். அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது. துரிதமாக செயல்பட்டிருந்தால் பல உயிரிகளைக் காப்பாற்றி இருக்கலாம்.
திமுக, கூட்டணி கட்சியினர் கள்ளச்சாராயம் விவகாரம் முதல்வருக்கு தெரியாது என கூறுவது ஏற்க முடியாது என தெரிவித்தார்.
திமுகவினர்க்கும்,காவல்துறையினர்க்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது. ஒரு நபர் விசாரணையில் உண்மை வெளி வராது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என கோருகிறோம். கள்ளச்சாராய விவகாரத்தில் ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஆணைய விசாரணை சரியாக இருக்காது. நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது.
நான் சொன்ன மருந்து வேறு; அமைச்சர் சொன்னது வேறு
நான் மருத்துவமனையில் விஷமுறிவுக்கான மருந்து பற்றாக்குறை குறித்து சொன்னேன்; மருத்துவத்துறை அமைச்சர் அல்சர் மருந்து குறித்து சொல்கிறார்.மருந்து பெயரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றிக் கூறிவிட்டு இருப்பு இருப்பதாகக் கூறுகிறார். சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளியில் வரும்.
கேள்வி நேரம் முடிந்த உடன் அனுமதி தரப்படும் என பேரவைத் தலைவர் கூறினாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, மக்களின் பிரச்னை உயிர் சென்று கொண்டிருக்கிறது இதை விட முக்கிய பிரச்னை என்ன உள்ளது என கேள்வி எழுப்பினார்.
கடந்த காலத்தில் பேரவையில் திமுகவினர் எப்படி நடந்துகொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும் என கூறிய பழனிசாமி, திமுக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருப்பதற்க்கு 25 ஆண்டுகாலம் ஒப்பந்தம் போட்டுவிட்டதால் திமுகவிற்க்கு எதிராக காங்கிரஸ் பேச மறுப்பதாக பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.