மக்களவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்டில் உள்ள தும்கா தொகுதி வேட்பாளர் சீதா சோரனை ஆதரித்து பிராசாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதில், இந்தியா கூட்டணி நாட்டிற்குள் நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊடுருபவர்களை பாதுகாப்பதாகவும், அவர்களால் பழங்குடியின மக்கள்தொகை குறைந்து, பழங்குடியினப் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறினார்.
ஜார்க்கண்டின் ஆளும் கட்சியான 'ஜார்க்கண்ட் முக்தி மோட்சா’ (ஜே.எம்.எம்.) ஊடுருவாளர்களை ஆதரிப்பதாகக் கூறிய மோடி, சந்தால் பர்கானா பகுதியில் அவர்களால் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, லவ் ஜிஹாத் எனும் சர்ச்சைக்குரிய விஷயம் ஜார்க்கண்டில் இருந்து தொடங்கியதாக மோடி தெரிவித்தார்.
மேலும், “பழங்குடியின மகள்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுகின்றனர். உயிருடன் எரிக்கப்படுகின்றனர். ஒருவரின் நாக்கை வெளியே இழுத்து சித்தரவதை செய்தனர். பழங்குடியினப் பெண்களை குறிவைத்துத் தாக்கும் இவர்கள் யார்? ஏன் அவர்களை 'ஜார்க்கண்ட் முக்தி மோட்சா’ பாதுகாக்கிறது.
தீவிரவாதிகள், ஊடுருவாளர்களைப் பாதுகாக்கும் இந்தியா கூட்டணி, அதனை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் ஹிந்து - முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்துபவர்களாகக் கூறுகின்றனர். தலித் மற்றும் பழங்குடியினரை வெறும் வாக்கு வங்கியாக காங்கிரஸ் பார்க்கின்றது. ஆனால், பாஜக ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளது.
குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, ஜே.எம்.எம், காங்கிரஸ் கட்சியினர், அவர்கள் ஊழல் செய்வதற்காக என்னைப் பதவியில் இருந்து அகற்றப் பார்க்கின்றனர்.
மத்திய அரசு கொடுக்கும் பொருள் உதவிகளை இந்த மாநில அரசு கள்ளச்சந்தையில் விற்று, மக்களின் உரிமைகளைப் பெற விடாமல் ஏமாற்றி வருகிறது. அத்துடன், காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு மதரீதியான இடஒதுக்கீடு கொடுத்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறிக்க நினைக்கின்றனர். நான் இருக்கும் வரை அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்று பேசினார்.
தும்கா தொகுதியில் பாஜக சார்பில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த சீதா சோரன் வேட்பாளராக நிற்கிறார். இவர் ஜே.எம்.எம். கட்சியின் மூத்த தலைவரான சிபு சோரனின் மருமகளாவார். சீதாவை எதிர்த்து, ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஜே.எம்.எம் கட்சியின் நளின் சோரன் போட்டியிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.