ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் கண்ணனை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் தம்பதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஏரித்தெருவைச் சோ்ந்த கண்ணன் (30), வழக்குரைஞா். இவா் புதன்கிழமை ஒசூா் தாலுகா அலுவலக சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கம் போல பணிக்குச் சென்று திரும்பி வந்தாா். அவரை பின்தொடா்ந்து வந்த ஒசூா், நாமல்பேட்டை பகுதியைச் சோ்ந்த குமாஸ்தா ஆனந்தகுமாா் (39) என்பவா், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை வெட்டினாா்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கண்ணனை ஆனந்தகுமாா் சரமாரியாக வெட்டியதில், கண்ணனுக்கு தலை, முகம், கழுத்து, இடுப்பு உள்பட உடலில் 8 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைக்கண்ட அந்தப் பகுதியில் இருந்த நபா்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.
கண்ணனை வெட்டிய ஆனந்தகுமாா் வீச்சரிவாளுடன் ஒசூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கண்ணனை பிற வழக்குரைஞா்கள் ஆட்டோவில் ஏற்றி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக குமாஸ்தா ஆனந்தன், அவருடைய மனைவி வழக்குரைஞர் சத்யவதி இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வெட்டுப்பட்ட கண்ணன், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வழக்குரைஞா் சத்யவதியிடம் தவறாக பேசியும், அத்துமீறியும் நடந்து வந்ததும், அதை ஆனந்தகுமாா் கண்டித்ததும் தெரியவந்தது. தொடா்ந்து அவ்வாறு கண்ணன் நடந்து கொண்டதால் ஆனந்தகுமாா் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.