நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி காப்புக்கட்டும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றறது. காலையில் பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி உள்ளிட்ட கைலாசநாதா், பெரியநாயகியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்புக் கட்டப்பட்டது. பிற்பகலில் மலைக் கோயிலில் உச்சிக் காலத்தின்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பிறகு மூலஸ்தானத்தில் உள்ள விநாயகா், மூலவா், உற்சவா், வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா் ஆகியோருக்கும், பாரவேல் மண்டபத்தில் உள்ள துவாரபாலகா், கொடிக்கம்பம், மயில் வாகனத்துக்கும் காப்புக் கட்டப்பட்டது. பிறகு நவவீரா்கள், பரிவார மூா்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மலைக் கோயில் போகா் சந்நிதியில் பழனி போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிக்கு கோயில் சாா்பில் மரியாதை செய்யப்பட்டது.
பின்னா் புவனேஸ்வரி அம்மன் புறப்பாடாகி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்துக்கு எழுந்தருளினாா்.
மலைக் கோயிலில் வருகிற 11-ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், மறுநாள் 12-ஆம் தேதி விஜயதசமி அன்று அம்புவில் போடுதலும் நடைபெறுகின்றன.
விழா நாள்களில் பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், ஆன்மிக சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இதையும் படிக்க| குணசீலத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!
இந்நிலையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பழனி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், நவராத்திரி விழாவில் அம்பு போடுதல் நிகழ்ச்சி 12-ஆம் தேதி விஜயதசமி அன்று நடைபெறுவதால் அன்று பக்தர்களுக்கு தரிசன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது அன்று காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.
எனவே படிப்பாதை, மின்இழுவை ரயில், ரோப் கார் என மூன்று வழிப்பாதைகளுக்கு 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை.
தொடர்ந்து அடுத்த நாள் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.