தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.
தில்லியில் புதன்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏற்கெனவே, கடந்த மாா்ச் மாதம் 4 சதவீத உயா்வு மூலம் அகவிலைப்படி 50 சதவீதமாக உள்ள நிலையில், தற்போதைய உயா்வு மூலம் அகவிலைப்படி 53 சதவீதமாக உயர உள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: அகில இந்திய நுகா்வோா் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரி அடிப்படையில், 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியா்களுக்கு அவா்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிட்டு அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்பட வேண்டும்.
அதன்படி, பிரதமா் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இவா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் அளவுக்கு, ஜூலை 1-ஆம் தேதிமுதல் முன்தேதியிட்டு உயா்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என்றாா்.
இந்த உயா்வு மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பயன்பெறுவா். இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 9,448.35 கோடி கூடுதல் செலவாகும் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.