கனமழை எச்சரிக்கை: பிரதமர் மோடியின் புணே பயணம் ரத்து
கனமழை எச்சரிக்கை காரணமாக, மகாராஷ்டிரம் மாநிலம் புணேவுக்கு வியாழக்கிழமை செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் ரத்து
புது தில்லி: கனமழை எச்சரிக்கை காரணமாக, மகாராஷ்டிரம் மாநிலம் புணேவுக்கு வியாழக்கிழமை செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில், மாவட்ட நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ரூ.20,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதாகவும், புணேவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஸ்வர்கேட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக மகாராஷ்டிரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை மற்றும் புணேயில் ரயில், பேருந்து மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், பல பகுதிகளில் மழைநீர் குறைந்ததால் வியாழக்கிழமை காலை முதல் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியது.
அனைத்து உள்ளூர் ரயில்களும் வழக்கம் போல் இயங்குவதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பல இடங்களில் பலத்த மழை பெய்து வந்தாலும் ரயில் நிலையங்களில் மழைநீர் குறைந்துள்ளதால், புறநகர் ரயில் சேவைகளும் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.
இருப்பினும், மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புணே மாவட்ட நிர்வாகமும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. புணே நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, புணேவுக்கு வியாழக்கிழமை(செப்.26) வருவதாக திட்டமிடப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புணே நகருக்கு மோடியின் வருகைக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.