சுற்றுலா என்றால் என்ன? நம்முடைய மனது மகழ்ச்சியடையவும், புத்துணர்வு பெறவும் நாம் செல்வது ஆகும். ஆன்மிகச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா என பல்வேறு வகையான சுற்றுலாக்கள் உள்ளன. ஆனாலும் நாம் செல்ல வேண்டிய இடம் வெளிநாடாவோ, வெளி மாநிலமாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் சென்னையில் இருந்துகொண்டே இங்குள்ள இடங்களை சுற்றிப்பார்க்கலாம். அந்த வகையில் நாம் செல்லப்போவது ஒரு நாள் கிழக்கு கடற்கரைச் சாலை பயணம். பொதுவாக அனைவரும் இசிஆர் ரைட் என்றால் பைக்கில் பறப்பார்கள். ஆனால் அப்பயணம் பாதுகாப்பானது அல்ல. நாம் குடும்பத்துடன் செல்கிறோம் என்றால் கார்தான் சிறந்த தேர்வு. சரி வாருங்கள்! இசிஆர் பயணத்துக்கு தயாராகலாம்.
முட்டுக்காடு படகு இல்லம்
இங்கு மக்கள் படகில் பயணம் செய்யும் வகையில் மிதவை படகு, இயந்திர படகு உள்ளிட்டவை தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. தனியாக படகில் செல்வதற்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செல்வதற்கும் தனித்தனி படகுகள் உள்ளன. இங்குள்ள முத்துதுவாரம் வழியாக தண்ணீரானது கடலில் கலக்கும் காட்சி பிரம்மிப்பாக இருக்கும். இக்காட்சியைப் பார்ப்பதற்காகவே இங்கு வருவோரும் உண்டு. இங்கு மிதக்கும் கப்பல் உணவகம் விரைவில் திறக்கப்படவுள்ளது.
மாமல்லபுரம்
மாமல்லபுரம் குறித்து அறியாதோர் யாரும் இல்லை. பள்ளிக்காலம் தொட்டு நாம் சென்றுவந்த இடம். இங்குள்ள கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, பஞ்ச பாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி குகை உள்ளிட்டவைகளைக் காண்பதற்கே ஒரு நாள் போதாது. இங்குள்ள சிற்பங்கள், கோயில்கள், சிலைகள் பார்த்தே பல்லவ மன்னர்களின் கலை ஆர்வத்தை தெரிந்து கொள்ளலாம்.
முதலியார் குப்பம் படகு குழாம்
கிழக்கு கடற்கரை சாலையில் செய்யூருக்கு அருகே அமைந்துள்ளது முதலியார் குப்பம். இங்குள்ள படகு குழாமில் இயந்திரப் படகு, குரூசர் படகு, வாட்டர் ஸ்கூட்டர் என சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்தும் சாகச விளையாட்டுகள் உள்ளன. பயணிகள் அருகில் உள்ள தீவுகளுக்கு படகு சவாரி மூலம் சென்று கடற்கரை அழகைக் கண்டுகளிக்கின்றனர். இங்கு சென்னை மட்டுமல்லாமல் புதுவையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து இளைப்பாறிச் செல்கின்றனர்.
வடநெம்மேலி முதலைப் பண்ணை
மாமல்லபுரத்துக்கு அருகே அமைந்துள்ளது வடநெம்மேலி முதலைப் பண்ணை. இங்கு 3,000-க்கும் அதிகமான முதலைகள் காணப்படுகின்றன. உலகில் உள்ள 23 வகையான முதலைகளில் 17 வகையான முதலைகள் இங்கு இருப்பதாகத் தகவல். முதலைகளைத் தவிர மலைப்பாம்புகள், உடும்புகள், ஆமைகள், பல்லி இனங்கள் உள்ளன. சிறார்கள் வந்து கண்டுகளிக்கும் இடமாக இவ்விடம் உள்ளது.
ஆன்மிகப் பயணம்
ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்வோர் அக்கரை இஸ்கான் கோயில், உத்தண்டி மட்சிய நாராயண பெருமாள் கோயில், கோவளம் நித்திய கல்யாண பெருமாள் கோயில், மருந்தீஸ்வரர் கோயில், சென் ஆண்டனி சர்ச், கோவளம் தர்கா, ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோயில், ப்ரித்யுங்கரா தேவி கோயில், புரி ஜகன்நாதர் கோயில், ஜெயின் கோயில் என கிழக்கு கடற்கரை சாலையில் வழிபட ஏராளமான வழிபாட்டுத் தளங்கள் உள்ளன.
இதைத் தவிர கிழக்கு கடற்கரை சாலையில் தீம் பார்க் மற்றும் கடற்கரை ரெசார்ட்கள் உள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த இசிஆர்-ல் ஒரு நாள் பயணம் செய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம்.
சுற்றுலாப் பயணத்தின்போது பாதுகாப்பு மிகவும் அவசியம். பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு, சந்தோஷமாக இசிஆரைச் சுற்றி வருவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.