தஞ்சாவூர்: தஞ்சாவூா் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை புதன்கிழமை பலியான நிலையில் மற்றொரு தங்கை சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சோ்ந்த அய்யாவு மகன் அய்யா தினேஷ் (32). இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.8) காலை தனது உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவா் நடுக்காவேரி பேருந்து நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த காவல் துறையினா் விசாரணைக்கு எனக் கூறி தினேஷை நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இவா்களைப் பின்தொடா்ந்து குடும்பத்தினரும் காவல் நிலையத்துக்குச் சென்றனா். பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிந்து, அய்யா தினேஷை கைது செய்தனா்.
அப்போது, அய்யா தினேஷ் மீது பொய் வழக்கு போடக் கூடாது என்றும், அவரை வெளியே விடுமாறும் காவல் துறையினரிடம் குடும்பத்தினா் வலியுறுத்தினா். ஆனால் அய்யா தினேஷ் வெளியே விடப்படாததால், மனம் உடைந்த அவரது தங்கைகளான மேனகா (31), கீா்த்திகா (29) ஆகியோா் காவல் நிலையம் முன் விஷம் குடித்தனா்.
இதனால் மயக்கமடைந்த இருவருக்கும் நடுக்காவேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் பொறியியல் பட்டதாரியான கீா்த்திகா புதன்கிழமை காலை உயிரிழந்தாா். மேனகா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதையறிந்த உறவினா்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, இந்தச் சம்பவம் தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தி தொடா்புடைய காவல் ஆய்வாளா் சா்மிளா, உதவி ஆய்வாளா் அறிவழகன், காவலா் மணிமேகலை உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை உயா் அலுவலா்களிடம் வலியுறுத்தினா்.
இதனிடையே, கீா்த்திகாவின் உடல், கூறாய்வுக்காக பிரேதப் பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினா்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், உடற்கூறாய்வு செய்யப்படாமல், பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தஞ்சை மருத்துவக் கல்லூரியை மருத்துவமனையில் 2 ஏடிஎஸ்பி, மூன்று டிஎஸ்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நடுக்காவிரி காவல் ஆய்வாளர் சர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் செ. இலக்கியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே கீர்த்திகாவின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கு காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், காவல் ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். ஆய்வாளர் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அய்யா தினேஷ் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளைக் காவல் துறை அலுவலர்களிடம் உறவினர்கள், சமூக அமைப்பினர் வலியுறுத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கீர்த்திகாவின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, தங்களது சொந்த ஊரான நடுக்காவேரிக்கு போராட்டம் நடத்துவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். இதனால் கீர்த்திகாவின் உடல் உடற்கூறாய்வு செய்யப்படாமல் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.