பல்கேரியா நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி 5 இஸ்ரேலியர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளரின் உடல் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பல்கேரியாவில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி, லெபனான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் குடியுரிமைப் பெற்ற முஹம்மது ஹஸன் எல்-ஹுசைனி (வயது 23) என்ற நபர் தனது உடலில் கட்டிக்கொண்ட வெடிகுண்டுகளை இயக்கி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்.
அந்நாட்டின் புர்காஸ் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஹுசைனியுடன் சேர்த்து, தனி விமானம் மூலம் அங்கு வந்த 5 இஸ்ரேலியர்கள் மற்றும் பல்கேரியாவைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், இதில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் ஆதரவுப்பெற்ற ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர்தான் காரணமென இஸ்ரேல் மற்றும் பல்கேரியா அதிகாரிகள் குற்றம்சாட்டிய நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் ஹுசைனி இந்த தாக்குதலுக்கு காரணமென அடையாளம் காணப்பட்டார்.
இந்நிலையில், லெபனான் நாட்டின் பொது பாதுகாப்புப் புலனாய்வு துறையின் முன்னாள் தலைமை இயக்குநரான அப்பாஸ் இப்ராஹிம் என்பவர் ஹுசைனியின் குடும்பத்தினர் சார்பில் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஹுசைனியின் உடல் அவரது தாயகத்திற்கு நேற்று (ஏப்.11) திருப்பி அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் பலியான நபர்களை அடக்கம் செய்வதற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் கல்லறையில் ஹுசைனியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2012-ல் தாக்குதலுக்கு சில நாள்கள் முன்பு, போலியான அடையாள அட்டை மூலமாக ஆஸ்திரேலிய-லெபனான் நாட்டு குடியுரிமை பெற்ற மெலியாத் ஃபரா என்பவரையும் கனடா-லெபனான் குடியுரிமை பெற்றிருந்த ஹசன் எல் ஹஜ் ஹஸன் ஆகியோருடன் இணைந்து பல்கேரியாவினுள் ஹுசைனி நுழைந்துள்ளார்.
மேலும், ஹுசைனியின் கூட்டாளிகளான இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சர்வதேச அளவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரில் சிக்கும் குழந்தைகள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.