நாகப்பட்டினம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, அறிவாளால் வெட்டி மீன் உள்ளிட்ட பொருள்களை அபகரித்துக் கொண்டு விரட்டி அடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் நான்கு பேரும் வியாழக்கிழமை காலையில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இங்கு தங்கி இருந்த மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன் (67 ), செந்தில் (47), ஜெகன் (37 ), சாமுவேல் (35) ஆகிய நான்கு மீனவர்களும் ஒரு படகில் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே புதன்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரண்டு இலங்கைப் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளைர்கள் மூன்று பேர் மீனவர்கள் படகில் ஏறி, மீனவா்களை அரிவாள், கல், கட்டை கொண்டு தாக்கி விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனா்.
இந்த நிலையில், பலத்த காயங்களுடன் கோடியக்கரை படகு துறையை வந்தடைந்த மீனவர்கள், சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் தொடர்வது மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கடலோர காவல் நிலைய போலீஸார், தனிப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.