குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதா்சன் ரெட்டிக்கு திருவள்ளுவா் சிலையை நினைவுப் பரிசாக வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.  
தற்போதைய செய்திகள்

அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் காக்க, மக்களாட்சியைக் காக்க, அரசியலமைப்பைக் காக்க, குடியரசுத் துணைத் தலைவராக சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும்...

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் காக்க, மக்களாட்சியைக் காக்க, அரசியலமைப்பைக் காக்க, குடியரசுத் துணைத் தலைவராக சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளா் சுதா்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தாா். சென்னை வந்த சுதர்சன் ரெட்டியை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்றனர். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு ஆதரவு திரட்டினாா்.

இந்தியா கூட்டணி குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியுடனான சந்திப்பு கூட்டத்தில் அவரை ஆதரித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது, நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய மரியாதைக்குரிய சுதர்சன் ரெட்டியை தமிழ்நாட்டுக்கு வருக, வருக, வருக என வரவேற்கிறேன்! திமுக தலைவராக மட்டுமல்ல மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பிலும் முதலில் அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மரியாதைக்குரிய சுதர்சன் ரெட்டி அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசராக பணியாற்றிய நீங்கள், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுதிவாய்ந்தவர்! அதனால்தான், இந்தியா கூட்டணி சார்பில், உங்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்.

உங்களை ஒருமனதாக தேர்ந்தெடுத்து அறிவித்த இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்தியா கூட்டணியினர் மட்டுமில்லை, ஜனநாயகத்தின் மீது மக்களாட்சித் தத்துவத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அத்தனை பேரும் உங்களைத்தான் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

தென் மாநிலத்தைச் சேர்ந்த இவருடைய தகுதியை, வளர்ச்சியை எல்லோரும் கவனிக்கவேண்டும். உஸ்மானியா யூனிவர்சிட்டியில் சட்டம் பயின்று, 1971-ல் வழக்குரைஞராக பயிற்சி செய்ய தொடங்கினார். பின்னர், ஆந்திரம் மாநில அரசு வழக்குரைஞர் - மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகர் - ஆந்திரம் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி - கௌகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்று படிப்படியாக முன்னேறி, உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து, இன்றைக்கு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட தன்னுடைய அறுபது ஆண்டுகால வாழ்வை, சட்டம் - நீதி ஆகியவற்றுக்காக அர்ப்பணித்திருக்கிறார். இவர் நீதியரசராக பணியாற்றிய காலத்தில், நேர்மையாக, சுதந்திரமாக செயல்பட்டு, மக்களுடைய உரிமைகளையும், சமூகநீதியையும் உயர்த்திப் பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும் போற்றி பாதுகாத்தவர்.

கோவா மாநில லோக் ஆயுக்தா தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஏன் இன்றைக்கு தேவைப்படுகிறார் என்றால், பாஜகவினர் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க நினைக்கின்ற இந்த நேரத்தில், அரசியல் சட்டத்தை பாதுகாத்த நீதியரசரான இவர், அதை பாதுகாக்கின்ற பொறுப்புக்கு தேவைப்படுகிறார்! சுதர்சன் ரெட்டியை பொறுத்த வரைக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர்.!

அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான், புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் அவர் பேசியது. அவர் பேசியதை சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், "இது திருவள்ளுவர், பாரதியார், பெரியார், கலைஞர் ஆகியோருடைய மண்.

போராட்ட குணத்தை இந்த மண் எப்போதும் விடுவதில்லை" என்று சொல்லி, "புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடுவது நம்முடைய கடமை. இது இந்த தேசத்துக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இவர்கள் கொண்டுவர நினைக்கின்ற தேசிய கல்விக் கொள்கை மனித மாண்புகளுக்கு எதிரானது. நான் - எனது -என்னுடையது என்ற கலாசாரத்தை மட்டுமே இது உருவாக்கும். பன்முகத் தன்மையையோ, கல்வியின் ஜனநாயகப் பரவலையோ இது உருவாக்காது" என்று தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து, தமிழ்நாட்டின் உணர்வுகளை உறுதியுடன் வெளிப்படுத்தினார்.

இப்படி, அரசியலமைப்புச் சட்டத்துக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், முற்போக்காகவும், மக்களுக்காகவும் பேசுகின்ற இவரை நாம் முன்மொழிய, இதைவிட பெரிய காரணம் தேவையா? ஆனால், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசரை உள்துறை அமைச்சர் என்னவென்று விமர்சிக்கிறார்? நக்சல் என்று சொல்கிறார். ஒரு உள்துறை அமைச்சர், தன்னுடைய பொறுப்பை மறந்து, ஒரு முன்னாள் நீதியரசர் பற்றி அபாண்டமாக பேசி இருக்கிறார். அவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அந்த கையாலாகாத நிலையை மறைக்க, நீதியரசர் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதா்சன் ரெட்டிக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய பாஜக அரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது? அரசியல் எதிரிகளைப் பழிவாங்க, புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்திவிட்டு இருக்கிறது. தன்னாட்சி அமைப்புகளை, பாஜகவின் துணை அமைப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்கி இருக்கிறது.

இந்தச் சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர் இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கிறார். ஆதரிப்பதுதான் நம்முடைய முன்னால் இருக்கின்ற கடமை!

ஆனால், பாஜகவோ, தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செய்துவிட்டு, தமிழர் என்ற முகமூடியை அணிந்து ஆதரவு கேட்கிறார்கள். இதையெல்லாம் ரொம்ப பழைய தந்திரம்! தனிமனிதர்களைவிட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும். தனி மனிதர்கள் என்பவர்கள் வெறும் பிம்பங்கள்தான். அதனால், எந்தக் கருத்தியல் மக்களுக்கான, மக்கள் நலனுக்கான கருத்தியலோ, அதைத்தான் ஆதரிக்க வேண்டும்.

எனவே, சட்டநீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிய, வாதாடிய, தீர்ப்பு வழங்கிய நீதியரசர் சுதர்சன் ரெட்டி. இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் காக்க, மக்களாட்சியைக் காக்க, அரசியலமைப்பைக் காக்க குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்று வர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதைத் தொடா்ந்து, சுதா்சன் ரெட்டிக்கு திருவள்ளுவா் சிலையை நினைவுப் பரிசாக முதல்வா் வழங்கினாா். இதன்பின், திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.,க்கள் சுதா்சன் ரெட்டிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

INDIA Coalation Party Vice-President Candidate CM Speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT