புதுதில்லி: இந்திய விமானத் துறையில் தாராளமயமாக்கல் இல்லாததே விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு அடிப்படை என்றும் விமானத் துறை, எவ்வாறு இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாறிப் போனது ஏன், என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாள்களாக விமானப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பிரச்னைக்கான அடிப்படை காரணம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் சனிக்கிழமை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு துறையில் ஒரு நிறுவனம் மட்டுமோ அல்லது இரண்டு நிறுவனங்கள் மட்டுமோ ஆதிக்கம் செலுத்துவது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குப் பொருந்தாது. இதை ராகுல் காந்தி சரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய பொருளாதாரத்தில் பல துறைகளில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் போக்கு இருந்து வருகிறது. இதில், விமானத்துறையும் ஒன்று.
"தாராளமயமாக்கல் மற்றும் திறந்த பொருளாதாரம் போட்டியை அடிப்படையாகக் கொண்டவை. போட்டி இல்லாவிட்டால், நாம் தற்போது காணும் மோசமான விளைவுகளை காண நேரிடும்.
நாட்டில் ஒரு துடிப்பான மற்றும் போட்டிகள் நிறைந்ததாக இருந்த விமானத் துறை, எவ்வாறு இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாறிப் போனது ஏன்," என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில்,
‘இண்டிகோவின் சமீபத்திய குழப்பமானது, மத்திய பாஜக அரசின் ஒற்றை நிறுவன ஆதரவுக் கொள்கைக்குக் கொடுக்கப்பட்ட விலையாகும். ஆனால், விமானச் சேவைகள் ரத்து, தாமதங்கள் மற்றும் உதவியற்ற நிலை என சாதாரண குடிமக்கள் தான் மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவின் ஒவ்வொரு துறையிலும் நியாயமான போட்டி இருக்க வேண்டும். ஒற்றை நிறுவனம் மட்டுமே ஏகபோக உரிமையுடன் ஆதிக்கம் செலுத்தக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த நவம்பா் 1-ம் தேதி முதல் விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) அமலுக்கு வந்தன. இந்த விதிகளின்படி, வாராந்திர ஓய்வையும் வருடாந்திர விடுமுறைகளையும் தனித்தனியாகக் கருத வேண்டும். அதாவது, வாராந்திர 48 மணிநேர ஓய்வுக்குப் பதிலாக விடுமுறையை ஈடு செய்யக் கூடாது.
இந்த விதிமுறை மாற்றங்களுக்கு இண்டிகோ போதிய திட்டமிடாததால், அந்நிறுவனத்தில் விமானிகளின் பற்றாக்குறை ஏற்பட்டு, கடந்த சில நாள்களாக அன்றாட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
கடந்த வியாழக்கிழமை 550 விமானங்கள், வெள்ளிக்கிழமை 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் என நூற்றுக்கணக்கான விமானங்கள் அடுத்தடுத்து நாள்களில் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் நாடு முழுவதும் விமான நிலையங்களில் 3 நாள்கள் வரை காத்திருக்கும் நிலையும், உடைமைகள் தொலைந்த புகாா்களும் எழுந்தன.
இண்டிகோ நிறுவனம் பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்தது, இதனால் பயணிகள் சிக்கித் தவித்தனர், விமான நிலையங்களில் பரவலான குழப்பம் ஏற்பட்டது. புதிய விமானி பணி நேர விதிமுறைகளை செயல்படுத்த இயலாமை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை இந்த இடையூறுக்கான காரணம் என கூறப்படுகிறது. இன்றும் நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், விமான சேவை பாதிப்பால் பயணிகளுக்கு இந்திய ரயில்வே மாற்று போக்குவரத்தாக முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு மற்றும் சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.