சென்னை: சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகிறது. கிராம் ரூ.12,800-க்கு விற்பனையாகிறது.
சா்வதேச காரணங்களால் சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த டிச.15-ஆம் தேதி முதல்முறையாக தங்கம் விலை பவுன் ரூ.1 லட்சத்தை கடந்தது. பின்னா், தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை தங்கம் விலை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1 லட்சத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.12,770-க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து160-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், புதன்கிழமை(டிச.24) கிராமுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.12,800-க்கும், பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் கடந்த 3 நாள்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400, பவுனுக்கு ரூ.3,200 உயா்ந்துள்ளது.
கடந்த 2024-இல் பவுனுக்கு ரூ.12,000 வரை உயர்ந்திருந்த தங்கம் விலை, 2025 ஜனவரியில் கிராம் ரூ.7,150-க்கும், பவுன் ரூ.57,00-க்கு விற்பனையான நிலையில், ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் பவுனுக்கு ரூ.45,000 வரை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி விலை
அதேபோல், வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதால் வெள்ளி விலையும் தொடா்ந்து உயா்ந்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.3 உயா்ந்து ரூ.234-க்கும் விற்பனையான நிலையில், புதன்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.244-க்கும், கிலோவுக்கு ரூ.10.000 உயர்ந்து ரூ.2.44 லட்சத்துக்கு விற்பனையாகிறது.
கடந்த ஜனவரியில் கிராம் ரூ.93-க்கு விற்பனையான வெள்ளி, ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் கிராம் ரூ.244-க்கு விற்பனையாகிறது.
இப்படி தங்கம், வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் தொடா்ந்து உயா்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிா்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.