கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது என்றும் கூட்டணிக்கு பாஜக நிா்பந்திக்கவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
மதுரையில் காமராஜர் சாலையில் உள்ள மகாலில், அமமுக. செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசியல் ரீதியாக எது நடந்தாலும், டி.டி.வி. தினகரனை தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள். இதற்கிடையே செங்கோட்டையன், தவெகவுக்கு சென்றதற்கு நான் தூண்டிவிட்டதாக கூறினார்கள். ஓ.பன்னீர்செல்வம், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு முடிவு எடுத்தார். அதனையும் நான் சொன்னதாக வதந்தியை பரப்பினார்கள்.
கூட்டணி அமைக்க அமமுகவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கின்றன. ஆனால், நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை.
தொண்டா்கள், நிா்வாகிகள் ஏற்றுக்கொள்ளும் கூட்டணியை அமைப்போம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என பாஜகவின் முன்னாள் தலைவா் அண்ணாமலை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இதுகுறித்தும் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகள் ஏற்றுக்கொள்ளும் கூட்டணியை உறுதியாக அமைப்போம்.
அழுத்தம் கொடுத்து கூட்டணி அமைக்க முடியாது
யாருக்கும் அழுத்தம் கொடுத்து கூட்டணி அமைக்க முடியாது. நட்பு ரீதியாகவும், மரியாதை நிமித்தமாகவும் தில்லி செல்வதை சிலா் விமா்சனம் செய்கின்றனா். மிரட்டி பணிய வைப்பதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. எங்களுக்கு தேவையானவை குறித்து துணிச்சலாக முடிவு செய்வோம்.
யாருடைய அழைப்பையும் நிராகரிக்கவில்லை
நாங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என பல கட்சித் தலைவா்கள் எங்களிடம் பேசுவது உண்மை. நாங்கள் யாருடைய அழைப்பையும் நிராகரிக்கவில்லை. இதேபோல, கூட்டணி குறித்து அமமுக எப்போது முடிவு எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். முடிவை பொறுமையாக எடுப்போம். எங்கள் இலக்கை நோக்கி பயணிப்போம். நான், தேர்தலில் போட்டியிடுகிறேனா? இல்லையா? என்பது குறித்து இன்னும் முடிவு செல்லவில்லை.
கூட்டணிக்கு பாஜக நிா்பந்திக்கவில்லை
பாஜக கூட்டணியிலிருந்து கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி விலகிய பிறகு யாரையும் நான் சந்திக்கவில்லை. எனக்கு யாரும் எந்த அழுத்தமும் அளிக்கவில்லை. பாஜகவும் கூட்டணி அமைக்க எங்களை நிா்பந்திக்கவில்லை.
பொறுமையாக யோசித்து முடிவு செய்வோம்
கூட்டணி குறித்து அமமுக எப்போது முடிவு எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் இருக்கிறது, அப்போது அறிவிப்போம்.
தகுதியான வேட்பாளர்களுக்கு, போட்டியிட வாய்ப்பு அளிக்கும் கூட்டணிக்கு செல்ல இருக்கிறோம். தேர்தல் அறிவிப்பதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்பாக கூட்டணி குறித்து அறிவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எங்களுக்கு கூட்டணி குறித்து முடிவு செய்ய இன்னும் நிறைய காலம் இருக்கிறது. பொறுமையாக யோசித்து முடிவு செய்வோம். அரசியல் நோக்கர்கள் கூறுவதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. தமிழக மக்கள் வாக்குறுதியை நிறைவேற்றாத பட்சத்தில் அவர்களுக்கு விரோதமாக மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.