மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் தொழிலதிபரின் மகனைக் கடத்திய 2 பேரைக் காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
குவாலியரின் மொரார் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஹுல் குப்தா என்பவரின் 6 வயது மகனைக் கடந்த பிப்.13 அன்று அவரது தாய் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரது தாயின் கண்களில் மிளகாய்ப் பொடியை வீசி, சிறுவனைக் கடத்தி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கடத்தப்பட்டு சுமார் 14 மணி நேரம் கழித்து மோரேனா மாவட்டத்திலுள்ள ஓர் கிராமத்தில் அச்சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
இதையும் படிக்க: 102 வயதில் பழம்பெரும் தெலுங்கு நடிகை கிருஷ்ணவேணி காலமானார்
இந்நிலையில், நேற்று (பிப்.15) காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மோரேனாவின் கோட்வால் அணைப் பகுதியில் சிறுவனைக் கடத்திய ராஹுல் குர்ஜார் (வயது 28) மற்றும் பண்டீ குர்ஜார் (35) ஆகியோரைத் தேடிச் சென்றனர். அப்போது, போலீஸாரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அதற்கு, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் மீதும் குண்டுகள் பாய்ந்துள்ளது.
பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது மோரேனா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கடத்தலில் மேலும் இருவருக்கு தொடர்புள்ளதாக அவர்கள் கூறியதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் அம்மாநில காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் ஓரு நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.