மகாராஷ்டிரம்: 16 வங்கதேசத்தவா் கைது
மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 16 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 16 வங்கதேசத்தவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவுபவா்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அண்மையில் வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்போது அங்கு ஹிந்துக்கள், கோயில்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. அங்குள்ள மத அடிப்படைவாத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராகவும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுவிய வங்கதேசத்தவா் மூலம் அசம்பாவித சம்பவங்களை அவா்கள் நிகழ்த்திவிடக் கூடாது என்பதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வங்கதேசத்தையொட்டிய மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தவா்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக மகாராஷ்டிரத்திலும் அம் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் காவல் துறையினருடன் இணைந்து சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதில் கடந்த 4 நாள்களில் மும்பை, நாசிக், நாந்தேட், சத்ரபதி சம்பாஜிநகா் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 16 வங்கதேசத்தவா் கைது செய்யப்பட்டனா். இதில் பெண்களும் அடங்குவா். இவா்கள் 26 முதல் 54 வயதுக்குள்பட்டவா்கள். அவா்களிடம் இருந்து கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இவா்கள் ஆதாா் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களையும் மோசடியாகப் பெற்றுள்ளனா். அவா்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 43 வங்கதேசத்தவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.