ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது. 
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7.05 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

DIN

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை(ஜன.10) 7.05 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ ‘கோபாலா’ கோஷம் முழங்க பரமபத வாசல் வழியாக பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

வராக சேத்திரமாக விளங்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து சிறப்பு வாய்ந்த தலமாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாளை நினைத்து திருமொழி பாடிய பெரியாழ்வாரும், திருப்பாவை பாடிய ஆண்டாளும் பிறந்து பெருமைக்குரிய தலமாகும். கண்ணனை கரம்பற்ற நினைத்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து திருப்பாவை பாடி கண்ணனை கரம் பிடித்தார் என்பது ஐதீகம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் மார்கழி நீராட்ட உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்கழி நீராட்ட விழாவில் நடைபெறும்  பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம் ஆகியவற்றில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

அதன்படி இந்த ஆண்டு  ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் கடந்த 31-ஆம் தேதி பச்சை பரப்புதலுடன் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. நேற்றுடன் பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்ற நிலையில், ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7.05 மணிக்கு  பரமபத வாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ ‘கோபாலா’  கோஷம் முழங்க பெரிய பெருமாளும், அதன்பின்  ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாரும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினர்.

அவர்களை பெரியாழ்வார், வேதாந்த தேசிகர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், கூரத்தாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் வரவேற்றனர். அதன்பின் ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரங்க மன்னார், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் ஆகியோரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர். டிஎஸ்பி ராஜா தலைமையில் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT