வேங்கைவயல் 
தற்போதைய செய்திகள்

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்! - விசிக, மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விசிக, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

DIN

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை.

சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.

விசிக தலைவர் தொல். திருமாவளவன், 'வேங்கைவயல் வழக்கில் பட்டியலினத்தவர்களைச் சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தோன்றுகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமோ என்ற பயத்தில் சிபிசிஐடி அவசரமாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது, இந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளே இவ்வாறு கூறியுள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேங்கைவயல் விவகாரம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிசம்பா் 26ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி மனிதக் கழிவை தண்ணீரில் கலந்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில், 750 நாள்களுக்குப் பிறகு புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து சுமார் இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், முடுக்காட்டு ஊராட்சித் தலைவரின் கணவர் முத்தையாவை பழிவாங்கும் நோக்கில் இந்த சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக அரசின் பதிலைப் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT