காஞ்சிபுரம்: பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வழக்கில், இளைஞருக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் அவளூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பண்ருட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (27) காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தை கூறி கூறி விருப்பத்துக்கு மாறாக அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜாபாத் ஒன்றிய போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்தனா். இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் சசிரேகா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ப.உ. செம்மல் கற்பழிப்பு குற்றத்திற்காக 10 ஆண்டுகளும், பெண்ணை மிரட்டியமைக்காக இரண்டு ஆண்டுகளும், பெண்ணை வன்கொடுமை செய்தது காரணமாக மூன்று ஆண்டுகள் உள்பட மொத்தம் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.11,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
இதையடுத்து போலீஸாா் பிரகாஷை அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.