எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை (ஜூலை 16) சைதாப்பேட்டை, 140 ஆவது வார்டு, சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் நவீன கலையரங்கம் கட்டுமானப் பணி, ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் ரெட்டிக்குப்பம் சாலை மற்றும் கோடம்பாக்கம் சாலையில் 455 மீட்டர் மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணி மற்றும் 142 ஆவது வார்டு, திடீர் நகரில் ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் ஓரக்கல்வாய் கட்டுவதற்கான கட்டுமானப் பணியினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதியில் இருந்து ஜூன் 29 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விண்ணப்பங்களில் ஒரு சில விண்ணப்பங்கள் சான்றிதழ்களை இணைக்க மறந்து விண்ணப்பத்தவர்களுக்கு இரண்டு நாள்கள் காவ அவகாசம் வழங்கப்பட்டது. 2 நாள்களில் விடுப்பட்ட சான்றிதழ்களை இணைத்து மீண்டும் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தகுதி பட்டியல் வெளியிடப்படும்.
போலிச் சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு
தகுதி பட்டியல் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில், 20 மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களில் போலிச் சான்றிதழ்களை இணைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்த 20 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளவதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 3 ஆண்டுகளுக்கு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. மேலும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
20 மாணவர்களில் 7 பேர் பிறப்பிட சான்றிதழ்களை போலியாக தந்திருக்கிறார்கள். 9 பேர் பிறப்பிடம் மற்றும் சாதிச்சான்றிதழ்களை போலியாக தந்திருக்கிறார்கள். 4 மாணவர்கள் என்ஆர்ஐ தகுதிக்கான தூதரக சான்றிதழ்களை போலியாக தந்திருக்கிறார்கள்.
ஜூலை 30 ஆம் தேதி முதல் கலந்தாய்வு
இந்த சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கு ஜூலை 18 ஆம் தேதி காலை 10 மணி வரை கடைசி நாளாக அறிவிக்கப்படுள்ளது. விண்ணப்பங்கள் சரிபார்ப்புகள் அனைத்து முடிந்து, இறுதி பட்டியல் வரும் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இறுதி பட்டியல் வெளியிடப்பட்டவுடன் மத்திய அரசின் கால அட்டவணைப்படி ஜூலை 30 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் கூறினார்.
மேலும், தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி என 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்கள், தனியாா் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 550 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.