சென்னை: கடந்த 21ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்புகிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவாறே முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தாா். இதற்கிடையில், முதல்வருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் அடிப்படையில், அடுத்த 3 நாள்கள் அவா் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் மருத்துவமனையில் இருந்தபடியே தொடர்ந்து கட்சி மற்றும் அலுவல் பணிகளை முதல்வர் மேற்கொண்டு வந்தார்.
இதனிடையே, களத்தில் திமுக தொண்டர்கள் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும்போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் தனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை என எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்புவாா் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவ வல்லநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் ஞாயிற்றுக்கிழமை மாலை(ஜூலை 27) வீடு திரும்ப உள்ளார். முதல்வர் நலமாக இருக்கிறார். மூன்று நாள்கள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.