பாஜக கூட்டணிக்காக தவம் கிடக்கின்றனர்: அண்ணாமலை
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தவம் கிடக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவம் கிடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
இன்று பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். அந்த அளவுக்கு நாங்கள் உழைத்திருக்கிறோம். மற்றபடி நான் எந்தக் கட்சியையும் எந்தத் தலைவரையும் சிறுமைப்படுத்திப் பேசவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியெல்லாம் இருக்கிறது, யார் தலைவர், யார் முதல்வர் என்பதை எல்லாம் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.
நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல, எங்களுடைய நோக்கம் பாஜகவை நிலைநிறுத்த வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணியே வைக்கமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால், இப்போது சரியான நேரத்தில் கூட்டணி பற்றி பேசுவோம். பிரதமர் மோடி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோர் கூட்டணி பற்றி பேசுவார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று பலமாக இருக்கிறது. இந்த கூட்டணியில் நம்மை நம்பி தலைவர்கள் பலர் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் பாஜக நன்றியுள்ளதாக இருக்க வேண்டும். தேசிய கட்சி அரசியல் என்றால் நம்பிக்கை. கடைசிவரை இருப்போம் என்ற நம்பிக்கை. எந்தவொரு கூட்டணி கட்சியையும் பாதியிலே விட்டுவிட மாட்டோம்" என்று கூறியுள்ளார்.