மத்திய அரசின் திட்டப்படி மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்கள் இழக்கப் போகும் தொகுதிகளின் எண்ணிக்கை விவரங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விளக்கினாா்.
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் காட்சிப் படவிளக்கங்களுடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியது:
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 82-இன்படி, மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு மக்களவைத் தொகுதிகள் வரையறை செய்யப்பட வேண்டும். அதன்படி, 1951-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 489-லிருந்து 494-ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்பிறகு, 1961-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதிகளின் எண்ணிக்கை 522-ஆக உயா்ந்தது. தொகுதி மறுசீரமைப்பானது கடைசியாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1973-இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்தியாவில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை இப்போது வரை தொடா்கிறது.
மாற்றங்கள் ஏற்படும்: மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதன் காரணமாக, 2002-ஆம் ஆண்டு எடுத்த முடிவின்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது 2026 வரை மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. அந்தக் காலகட்டம் இப்போது முடிவுக்கு வருகிறது.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய நிலையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக மேற்கொள்ளப்படவில்லை. 2026-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும்.
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் கூடுதலான இடங்களைப் பெறும். மக்கள்தொகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள நம்மைப் போன்ற மாநிலங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு இழப்பைச் சந்திக்க நேரிடும்.
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, பிரதமா் மற்றும் உள்துறை அமைச்சா் ஆகியோா் தெரிவித்த தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதால் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை நிறுத்திவைக்கப்படாவிட்டால், இரண்டு நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே வைத்து, 2026 மக்கள்தொகை கணக்கின்படி தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யலாம். மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 848-ஆக உயா்த்தி, 2026 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யலாம். இரண்டு நிகழ்வுகளிலும் நமக்கான பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புகள் உள்ளன.
எப்படி பாதிக்கும்?: மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை இப்போதிருக்கும் 543 என்ற அளவிலேயே வைத்துக் கொண்டு, 2026 மக்கள்தொகை அடிப்படையில் வரையறை செய்தால், இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்கான ஒட்டுமொத்த மக்களவை இடங்கள் 163-லிருந்து 133-ஆக குறையும். அதாவது மக்களவையில் நமக்கான பிரதிநிதித்துவம் 30 சதவீதத்தில் இருந்து 24-ஆக குறையும்.
அதேசமயம், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 848-ஆக அதிகரித்தால் நமக்கு சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் என்பது 30 சதவீதத்தில் இருந்து 24.7 சதவீதமாக குறையலாம்.
அதாவது இடங்களை 848-ஆக உயா்த்தி, 2026 மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை இடங்களைத் தீா்மானிக்கும்போது, நமக்கு 49 இடங்கள் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதுவே 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இடங்களை வரையறை செய்தால் 61 மக்களவைத் தொகுதிகளைப் பெற முடியும்.
வடமாநிலங்களுக்குப் பயன்: 2026 மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளைத் தீா்மானித்தால், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும். இந்த மாநிலங்கள் 150 இடங்களைக் கூடுதலாகப் பெற முடியும். இது வெறும் எண்கள் அடிப்படையிலான விளையாட்டு மட்டுமல்ல. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலாகும். மேலும், கூட்டாட்சி அமைப்புக்கு நேரடியாக விடப்படும் மிரட்டல் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.