தற்போதைய செய்திகள்

கல்வி நிதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாததால் கல்வி நிதி வழங்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, ரூ.2,291 கோடி நிதியை வழங்க உத்தவிட கோரியுள்ளது.

DIN

புதுதில்லி: பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியான ரூ.2,291 கோடியை நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல காரணங்களால் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வழங்கப்பட்டும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இதனால் புதியக் கல்வி கொள்கைக்கு சம்மந்தம் இல்லாத சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியான ரூ.2,291 கோடியை விடுவிக்க மத்திய அரசு மறுத்துள்ளது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

தமிழ்நாடு அரசின் கல்வி திட்டம் ஏற்கனவே சிறப்பான முறையில் உள்ளது. இரு மொழி கொள்கையை தமிழ்நாடு பின்பற்றி வருகிறது. தமிழ் தாய்மொழி அல்லாத மாணவர்களுக்கு மற்ற மொழிகளில் படிக்க போதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் சமமான பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் கல்வித்தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு சட்டப்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தேவை இல்லை.

மத்திய அரசு தனது கல்வி கொள்கையை திணிக்க நிதி விவகாரத்தை பயன்படுத்த கூடாது. இதுபோன்ற கல்வி திணிப்பு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது. அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமையின் படி மாநில அரசு சொந்த கல்வி திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு தடையாக இருப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது.

பிஎம் ஸ்ரீ மற்றும் சமக்ர சிக்‌ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதம். இதனால் 43.94 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 இதர பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பிப்ரவரி மாதம் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதற்கு மத்திய அரசு அளித்த பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவிற்குள் ரூ.2,291.30 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அசல் தொகையான ரூ.2,151.59 கோடிக்கு (2024-25 ஆம் ஆண்டிற்கான அரசு மாநிலத்திற்கு விடுவித்திருக்க வேண்டும்) 2025 மே 1 முதல் இந்த உத்தரவு நிறைவேறும் வரை, ஆண்டுக்கு 6 சதவிகித வட்டியாக ரூ.139.70 கோடியும் சேர்த்து ரூ.2,291 கோடி கல்வி நிதியை தமிழ்நாடு அரசுக்கு விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை "அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது" என்று அறிவிக்குமாறு அரசு உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 13,433 மனுக்கள்! ஆட்சியா் தகவல்

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

மாநில மாநாட்டில் தமிழக அரசியல் நிலைமை குறித்து முடிவு: இரா. முத்தரசன்

திரு.வி.க. நகா் மண்டலத்தில் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT