தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் வெப்பம் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் புதன்கிழமையுடன் (மே 28) நிறைவடைகிறது.
கோடைகாலத்தில் மிக முக்கியமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை(மே 4) தொடங்கியது. மே. 28 ஆம் தேதி வரை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கத்திரி வெயில் காலம் தொடங்கும் முன்பே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் அக்னி நட்சத்திர காலத்தில் அது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது.
ஆனால், கத்திரி வெயில் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வானம் மேகமூட்டதத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணிக்குப்பின் பரவலாக சூறைக்காற்று வீசியது. காற்றைத் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளிா்ச்சியான நிலை உருவானது. திங்கள்கிழமை காலை வெயில் தாக்கம் வெகுவாக இல்லாததால் மக்கள் ஆறுதலடைந்தனா்.
இதன்பிறகு, பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்தது. தென்னிந்திய கடலோரப் பகுதியின் மேல், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் ஏற்படும் காற்று குவிதல் காரணாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இருப்பினும், உள் மற்றும் வடமாவட்டங்களில் வெப்பநிலை இயல்பாக காணப்பட்டது.
பருவநிலை மாற்றத்தால், தமிழ்நாட்டில் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. இதனால் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கியதால், வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்தது.
இந்நிலையில், அக்னி நட்சத்திர காலமான 25 நாள்களில் பெய்த கோடை மழையால் வெயிலின் தாக்கம் பெரியளவில் இல்லாததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், சுட்டெரிக்கும் கத்திரி வெயில் இன்றுடன் புதன் (மே 28) நிறைவடைகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வெயில் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வடகிழக்கு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் தவிர, நாட்டின் பிற பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழை பெய்யக் கூடும். நாடு முழுவதும் சராசரி பருவ மழைப்பொழிவு 106 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழையின் தாக்கம் மூன்று நாட்களுக்குப் பிறகு மெதுவாகக் குறையக்கூடும், இதனால் வறண்ட காலநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், மத்திய இந்தியா மற்றும் தெற்கு தீபகற்பத்தின் சில பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் மாதாந்திர குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இதன் விளைவாக, வடமேற்கு மற்றும் கிழக்கில் இயல்பை விடக் குறைவான வெப்ப அலை இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.