சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி நாகராஜன் 
தற்போதைய செய்திகள்

கோயில் காவலாளிகள் கொலை விவகாரம்: தப்பியோடியவர் சுட்டுப் பிடிப்பு!

கோயிலின் இரு காவலாளிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தப்பியோடியவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் அமைந்துள்ள நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயிலின் இரு காவலாளிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தப்பியோடியவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரை அடுத்த தேவதானம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில். 300 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலில் தினமும் திரளான பக்தா்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா்.

இந்தக் கோயிலில் தெற்கு தேவதானம் குமரன் கோவில் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து (50), வடக்கு தேவதானம் சாஸ்தாகோவில் சாலை வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கரபாண்டியன் (65) ஆகியோா் இரவு நேரக் காவலாளிகளாகப் பணியாற்றி வந்தனா். இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல கோயில் வளாகத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் பகல் நேரக் காவலாளி மாடசாமி வந்து கோயில் கதவைத் திறந்து பாா்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரும் கோயில் கொடிமரம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பாா்த்து, சேத்தூா் காவல் நிலைய போலீஸாருக்கு மாடசாமி தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதனிடையே, மதுரை சரக டிஐஜி அபிநவ்குமாா், விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன், ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பஷீனா பீவி, ஸ்ரீவில்லிபுத்தூா் துணைக் கண்காணிப்பாளா் ராஜா, விருதுநகா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகராஜன், மதுரை இணை ஆணையா் மாரியப்பன் உள்ளிட்டோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். தடயவியல் நிபுணா்கள் தடயங்களைப் பதிவு செய்தனா். மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் கொலையாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தும், இந்தக் கொலை தொடா்பாக தேவதானம் பகுதியைச் சோ்ந்த இருவரைப் பிடித்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், காவலாளிகள் கொலையில் தொடர்புடையவராக கருதப்படும் தேவதானம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் நாகராஜனை(25) போலீசார் கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, தென்காசி சாலை அசையாமணி விலக்கு அருகே உதவி காவல் ஆய்வாளர் கோட்டியப்ப சாமியை அறிவாளால் தாக்கிவிட்டு நாகராஜ் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து சேத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், நாகராஜை காலில் சுட்டுப் பிடித்துள்ளார்.

இதில் காயமடைந்த நாகராஜன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கோட்டியப்ப சாமியும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தப்பியோடிய மற்றொரு குற்றவாளியான முனியாண்டியை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Temple guard murder case: Fugitive arrested in shootout!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

நசீம் ஷா வீட்டில் துப்பாக்கிச் சூடு..! காவல்துறை விசாரணை!

காமெடி கதையில் அருள்நிதி!

திரிபுராவில் டெங்கு பரவல் அதிகரிப்பு: ஒரே நாளில் 46 பேர் பாதிப்பு!

‘கோடி மீடியா’வின் பிரசாரமே கருத்துக் கணிப்பு! தேஜஸ்வி யாதவ்

SCROLL FOR NEXT