முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலும், இத்தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களால் தேர்வுக்கு தயாராக இயலவில்லை என கூறி, தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜாரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் நீலகண்டன் முன்வைத்த தனது வாதத்தில், அக்டோபர் மாதம் போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தோ்வு வரும் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தோ்வுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கி, நடந்து வரும் நிலையில், தேர்வை ஒத்தி வைத்தால் அது விண்ணப்பதாரர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா்.
இதனை பதிவு செய்து கொண்டு நீதிபதி, தேர்வை ஒத்தி வைக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட முடியாது என கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.