தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை (அக்.16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்காக இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
வரும் 20 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, ஜவுளி, பட்டாசு, ஜவுளி, பலகாரங்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள்கள் என்பதால் பெரும்பாலானோர் அவரவர் வெள்ளிக்கிழமை (அக்.17) சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதால், பயணிகள் தேவைக்கு ஏற்ப வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 760 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 565 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 275 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முன்பதிவு மையங்கள்
கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து செயலி டிஎன்எஸ்டிசி மற்றும் இணையதளம் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வியாழக்கிழமை சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். பேருந்து இயக்கம் குறித்து 9445014436 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.
இதனிடையே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தாம்பரம், செங்கல்பட்டு காவல்துறை போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்வோர் கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்லலாம்.
10-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைப்பு
அரசுப் பேருந்துகளில் மக்கள் இடையூறின்றி பயணிக்கும் வகையில் விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட குழுக்குள் அமைக்கப்பட்டு ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், 044-24749002, 044-2628 0445, 044-26281611 எண்களிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.