புதுதில்லி: நாடு முழுவதும் 2024-25 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 8,000 பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய கல்வி அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் முதலிடத்தில் மேற்கு வங்கமும், இரண்டாம் இடத்தில் தெலங்கானா, மூன்றாம் இடத்தில் மத்திய பிரதேசமும் இடம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, நாடு முழுவதும் சுமார் 7,993 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் சேர்க்கைக்கூட நடைபெறவில்லை எனவும், இது முந்தைய கல்வி ஆண்டைக் காட்டிலும் சதவீதம் குறைவு. கடந்த கல்வி ஆண்டின் 12,954 எண்ணிக்கையை விட 5,000-க்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் ஒரு மாணவர் சேர்க்கைக்கூட இல்லாத 7,993 பள்ளிகளில் சுமார் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் 17,965 ஆசிரியர்கள் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், விசித்தரமாக தேசிய அளவில் அதிக மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம் 3,812 பள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை இல்லாத மாநிலங்களில் 2,245 பள்ளிகளுடன் தெலங்கானா இரண்டாம் இடத்திலும், அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் (463 பள்ளிகள்) உள்ளது. இந்தப் பள்ளிகளில் தெலங்கானாவில் 1,016 ஆசிரியர்களும், மத்திய பிரதேசத்தில் 223 ஆசிரியர்களும் பணியில் உள்ளனர். இதுபோன்று உத்தரப் பிரதேசத்தில் 81 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த மூன்று கல்வி ஆண்டுகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கையை இல்லாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யத் தயாராகி வருவதாக உத்தரப் பிரதேச கல்வி வாரியம் தெரிவித்திருந்தது.
நாடு முழுவதும் ஓர் ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகள் ஆந்திரம் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் லட்சத்தீவு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
2022-23 ஆம் ஆண்டில்,18,190 ஆக இருந்த ஓர் ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 1,10,971 ஆகக் குறைந்து, சுமார் 6 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா, மகாராஷ்டிரம், கோவா, அசாம், ஹிமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகர், தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் ஓர் ஆசிரியர் மட்டும் பணிபுரியும் பள்ளிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி என்பது மாநிலப் பாடமாகும்; பள்ளிகளில் பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை பிரச்னையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காக சில மாநிலங்கள் சில பள்ளிகளை இணைத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.