முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் மாணவர் எழுச்சி 1968; மொழி காக்க வெளிநடப்புப் போராட்டம்!

தாய்மொழிக்காக கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸில் 1968ல் மாணவர்கள் நடத்திய போராட்டம் பற்றி...

Updated On : 6 மார்ச், 2026 at 10:15 AM
கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் மாணவர் எழுச்சி 1968
பகிர்:

மொழியை முன்னிறுத்தி கிழக்கு பாகிஸ்தானில் (1952), தமிழ்நாட்டில் (1965), தென் ஆப்பிரிக்க சோவெட்டாவில் (Soweto) (1976) மாணவர்கள் எழுச்சியுற்றுத் திரண்டு முன்னெடுத்த போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிகளாயின. வரலாற்றில் நீடித்த விளைவுகளுக்கும் இப்போராட்டங்கள் வித்திட்டன என்பது உண்மை. அதுபோலவே அமெரிக்காவில் கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் வகுப்பறைகளிலிருந்து ஒன்றிணைந்து அமைதி அலையாக வெளிப்போந்த மாணவர்களது 'புளோ அவுட்ஸ்' (Blow Outs) எனக் குறிக்கப்படும் ‘'வெளிநடப்புகள்' (Walk Outs), அமெரிக்காவின் முதல், மிகப்பெரிய, நகர்ப்புற இளைஞர்கள் தலைமையிலான எழுச்சியாக வரலாற்றில் பொதிந்து, ஒரு வெற்றிகரமான மொழிப் போராட்டச் சான்றாகியுள்ளது. மொழிக்காக எண்ணற்ற உயிர்ப்பலிகள் கண்ட  கிழக்கு பாகிஸ்தான், தமிழ்நாடு, தென் ஆப்பிரிக்க சோவெட்டா, போராட்டங்கள் போலில்லாமல், கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் மாணவர்கள் தொடங்கி, டென்வர், டெக்சாஸ் பிரதேசங்களுக்கும் பரவிய மாணவர் போராட்டம், உயிர்ப்பலிகள் ஏதுமின்றி, ஒரு சில காவல்துறை அத்துமீறல்களை மட்டுமே எதிர்கொண்டு, பெருவெற்றியை அறுவடை செய்தது  குறிப்பிட்டுரைக்க உரியது. 

1968 மார்ச்சில் ஆயிரக்கணக்கான மெக்சிகன் அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் லாஸ் ஏஞ்சலீஸில் வகுப்புகளில் இருந்து வெளிநடப்பு செய்த போராட்டம் விரிவடைந்து ஸ்பானிஷ் மொழி பேசுவோர்களுக்கான சிவில் உரிமைகள் சீர்திருத்தத்தைக் கோரும் பரந்த சிகானோ இயக்கத்திற்கு (Chicano Civil Rights Movement)  வலுவூட்டும் வித்தானது. இந்த மூன்று எழுச்சிகளின் நீடித்த விளைவாக, ஸ்பானிஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட, (சிகானோ) மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலும் தாம் விரும்பும் மொழியான ஆங்கிலத்திலும் கல்வி கற்கும் சம வாய்ப்பு - இரு மொழிக் கல்வி சகாப்தம் - உதயமாகியது. 

1950 - 60களில் லாஸ் ஏஞ்சலீஸின் கிழக்குப் பகுதியில் சிகானோ மக்கள்தொகை அதிகமிருந்தது. சுமார் 1,30,000 பள்ளிகளின் மாணவர்களில் குறைந்தது 75 சதவிகிதம் ஸ்பானிஷ் குழந்தைகளாக இருந்தனர். அவர்கள் கற்றுவரும் பள்ளிகளில் குறைதகுதிகளுடன் இருந்த, ஆசிரியர்கள்; ஆசிரியர் பற்றாக்குறை எனும் அவலநிலை; வருந்தத்தக்க வகுப்பறை, வளாக வசதிகள்; பல சந்தர்ப்பங்களில் பள்ளிகள் மூடப்படுதல்; உயர்விகிதத்தில் (60%க்கு மேல்) மாணவர்கள் இடைநிற்றல் (Drop outs) எனத் தரமற்ற சூழல் மற்றும் சமத்துவமின்மை நிலவும். பொதுக் கல்வி முறையின் குறைபாடுகளை பெற்றோர்களும் மாணவர்களும் உணரத் தொடங்கினர். 

மேலும், சிகானோவிற்கான கல்வி முறை வெள்ளை அல்லாத ஸ்பானிஷ் மாணவர்களுக்குத் தொழிற்கல்வி, பயிற்சி வகுப்புகளை வழங்குவதாக - சிகானோக்களை தொழிலாளர்களாக வேலைகளில் அமர்த்தும் திட்டங்களோடு -  மேற்படிப்பு ஆராய்ச்சி வாய்ப்புகள் வறண்டதாக இருந்தது. இத்தகைய பாரபட்சமான கல்வி அமைப்பு சிகானோக்களின் சமூக முன்னேற்றத்தைத் தடுப்பதாக உணரப்பட்டது. 

சமூக ஈடுபாடுள்ள பலரும், குறிப்பாக லிங்கன் உயர்நிலைப் பள்ளியின் மெக்சிகன்- அமெரிக்க சமூக ஆய்வுகள் ஆசிரியரான சால் காஸ்ட்ரோ போன்ற ஆசிரியர்களும் சிகானோ மாணவர்களின் கல்விச்சூழலை அவர்கள் உணருமாறு வழிகாட்டிவந்தனர். தமது மாணவர்கள் அவர்களது பாரம்பரியத்தின் பெருமையை உணர்வதுடன், அவர்களது கல்வியைக் கேள்விக்குள்ளாக்கவும் கற்பித்தனர்.

அக்காலங்களில் பள்ளி வளாகங்களில் எந்த இடத்திலும் தங்கள் தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் பேசினால் அம்மாணவர்கள் மிகக் கடுமையான உடல் ரீதியான தண்டனைகளுக்கு (Corporal Punishment) உள்ளாக்கப்பட்ட கொடுமைகள் நிலவின. மாநிலப் பள்ளிகளில் பெரும்பான்மை மாணவர்கள் (மெக்சிகன் - அமெரிக்கன்)  ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களாக இருந்தபோதும், தங்களது தாய்மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பு அம்மாணவர்களுக்கு மறுக்கப்பட்டது. 

சால் காஸ்ட்ரோ, தனது லிங்கன் பள்ளி மாணவர்களை மட்டுமல்ல, பொதுவாகப் பிற பள்ளிகளின் மாணவர்களையும், சமுதாயக் கூட்டங்கள், மாணவர் மாநாடுகள் போன்ற வாய்ப்புகள் மூலம் கல்வி சமத்துவத்தைக் கோர, தங்கள் தாய்மொழியிலும் கல்வி கற்கும் இருமொழிக் கல்வி வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளூர் பள்ளி வாரிய ((Local Boards of Education) நிர்வாகங்களை அணுகுமாறு ஊக்கப்படுத்தி வந்தார். கல்வி முறையில் மாற்றம் விளைவிக்க மாணவர்கள் மனதளவில் விழைவுகளை வளர்த்திடத் தூண்டுகோலாக விளங்கினார். 

மொழி இயக்கத் தலைவர்கள் 

லிங்கன் உயர்நிலைப் பள்ளியின் சால் காஸ்ட்ரோ போராட்டங்களின் வழிகாட்டியாகக் கருதப்பட்டார். சிறந்த கல்வியைக் கோருமாறு அவர் தமது மாணவர்களைப் பல வகைகளில் ஊக்குவித்து வந்தார். மாணவர் தலைவர்களில் ஒருவராக இருந்த மெக்ஸ்ட்சுமா எஸ்பார்ஜா (Moctezuma Esparza), பின்னாள்களில் புகழ்பெற்ற சமூக ஆர்வலராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் ஆனார். பிற்காலத்தில் ‘பிரவுன் பெரெட்ஸ்’ (Brown Berets) அமைப்பின் இணை நிறுவனரான கார்லோஸ் மான்டெஸ் மற்றொரு முக்கிய மொழி சமத்துவப் போராளி. மாணவர் அமைப்பாளராக இருந்த விக்கி காஸ்ட்ரோ, பின்னர் லாஸ் ஏஞ்சலீஸ் பள்ளி வாரிய உறுப்பினரானார். மாணவர்களின் வெளிநடப்புகளை ஏற்பாடு செய்வதில் மையப்புள்ளியாகச் செயல்பட்ட பவுலா கிரிசோஸ்டோமோ, லிங்கன் ஹையில் மாணவர் தலைவர். புகழ்பெற்ற கலைஞரான ஹாரி காம்போவா ஜூனியர், மாணவர் ஆர்வலர்களில் ஒருவராக இருந்தார். இருமொழிச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட சிகானோ இயக்க வரலாற்றுத் துறை அறிஞர், முதற் பேராசிரியர் கார்லோஸ் முனோஸ் ஜூனியர், மாணவராக இருந்தபோது முன்நின்றவர்களில் குறிப்பிட உரியவர். தானே நேரடியாக ஈடுபட்ட இந்த இயக்கம் குறித்த விரிவான ஆய்வு நூல்கள் பல இவர் படைத்துள்ளார்.

இயக்க முன்னோடிகளின் அவ்வப்போதான முயற்சிகள் பலன் தரவில்லை. 1967 ஆம் ஆண்டில், பள்ளி வாரிய நிர்வாகிகள் மாணவர்களின் வேண்டுகோள்களை முழுவதுமாகப் புறக்கணித்த பிறகு, மாணவர்களை வகுப்புகளில் இருந்து வெளிநடப்பு (Walk Out) செய்ய - வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்த - சால் காஸ்ட்ரோ ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். தன்னால் முடிந்தவரை, தொடர்புகளை ஏற்படுத்தி, பல பள்ளிகளில் சிகானோ மாணவர்களை ஓரணியில் திரட்ட முயன்றார். அவரது முன்னாள் மாணவர்களும் இவ்வாறான திட்டமிடல்களுக்கும் பின்னர் நடைபெற்ற வெளிநடப்புகளுக்கும் உதவினர். 

இருமொழிக் கல்வி; மெக்சிகன் அமெரிக்க கலாசாரம் மற்றும் வரலாற்றை மாணவர்களுக்குக் கற்பித்தல்; கூடுதலாக லத்தீன் ஆசிரியர்கள், பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பல கல்விச் சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்நிறுத்தி கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களைக் குறிப்பிட்ட ஒருநாளில் (மார்ச் 6,1968) வகுப்புகளிலிருந்து மொத்தமாக வெளிநடப்பு செய்ய வைத்து அவர்களுக்கு ஆதரவாகப் பெற்றோர்களையும் சமூகத்தின் பிற உறுப்பினர்களையும் ஈடுபடுத்துவது என்பது திட்டம். ஜனவரி முதலே மிக ரகசியமாக, இதற்கான முயற்சிகள் பள்ளி நேரங்களிலும் அதற்கு அப்பாலும் நடைபெற்று வந்தன. மாணவர்களின் குழுக்களுடன் ரகசிய சந்திப்புகள், கோரிக்கைகள் உருவாக்கம், துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட ஏற்பாடுகள் தொடங்கின. பள்ளி மாணவர்கள் மனதில் ஒருசேர வெளிநடப்புச் செய்யும், அந்தப் பெருநாளை எதிர்கொள்ளும் ஆவல் வெண்ணெய் திரள்வதுபோலத் திரண்டு பெருகிக்கொண்டிருந்தது.

இதற்கிடையில், வில்சன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பல வாரங்களாகத் திட்டமிட்டு ஒத்திகைகள் பார்த்து வசந்தத்தை வரவேற்று அப்பள்ளியில் மார்ச் 1இல் நடத்த இருந்த ஒரு நாடகத்தை ஒரேயொரு வசனத்தைச் சுட்டிக்காட்டி, அதன் காரணமாகப் பழமைவாதியான அப்பள்ளி முதல்வர் நாடகத்தையே ரத்து செய்தார். இது மாணவர்களை, குறிப்பாகச் சிகானோ மாணவர்களை ஆத்திரங்கொள்ளச் செய்தது. வெளிநடப்புச் செய்து தமது எதிர்ப்புணர்வைக் காட்டும் ஆர்வ விளிம்பிலிருந்த மாணவர்களுக்குத் தாம் உருவாக்கிய நாடகம் பள்ளி முதல்வரால் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கை ‘வெளிநடப்பு’ எண்ணக் கனலில் விழுந்த தீப்பொறியானது. ஆகவே, திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே, திடீரென வில்சன் பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து வெளியேறினர். கடுமையான கல்வி வாரியங்கள், பழமைவாதப் பள்ளி நிர்வாகத்தின் தண்டனைக் கடுமைகள் என்பதுபற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் வில்சன் பள்ளி மாணவர்களது மார்ச் 1 வெளிநடப்பு என்பது, பல ஆண்டுகளாகப் மனப்புழுக்கத்துடன் பொறுமை காத்துவந்த சிகானோ மாணவர்கள் தங்கள் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடானது. அது கடுமைக் கோட்டையின் மீது கொடுமைகளை எதிர்த்து வீசப்பட்ட முதற் தீப்பந்தம்!

திட்டமிடாத வில்சன் பள்ளி வெளிநடப்புபோலவே, கார்பீல்ட் நிர்வாகத்தின் மற்றொரு சிறு அதிகார வெளிப்பாட்டை எதிர்த்து, மார்ச் 5இல், கார்பீல்ட் உயர்நிலைப் பள்ளியில் இருந்து சுமார் 2,000 மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர். போராட்டத்தீ பரவத்தொடங்கி விட்டதன் முன்னோட்டமாக இவ்விரு வெளிநடப்புகளும் காணப்பட உரியன. அடுத்த நாள், மார்ச் 6இல்தான், கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸின் பல பள்ளிகளில் இருந்து மாணவர்கள் ஒரே சமயத்தில் வெளிநடப்பு செய்யத் திட்டமிருந்தனர். 

குறிப்பிடப்பட்டிருந்த 1968 மார்ச் 6இல் குறைந்தது ஏழு பள்ளிகளைச் (கார்ஃபீல்ட், ரூஸ்வெல்ட், லிங்கன், பெல்மாண்ட், வில்சன் மற்றும் பல பள்ளிகள்) சேர்ந்த 22,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பள்ளி வளாகங்கள் முற்றிலும் வெற்றிடமானது. சில பள்ளி நிர்வாகிகள் கதவுகளை அடைப்பதன் மூலம் மாணவர்கள் வெளியேறுவதைத் தடுக்க முயன்று தோல்வியுற்றனர். வளாகப் பெருங்கதவுகளின் மேலேறி அல்லது கதவுகளை இணைத்த கனத்த பூட்டுகளைக் கைகளிற்கிடைத்த கற்களால் உடைத்து  - பூட்டிய இரும்புக்கூட்டின் கதவுகளைத் தகர்த்து – பால் பேதமற்று, இளஞ்சிறுத்தைகளாய் வெளிப்போந்தனர் பள்ளி மாணவ, மாணவியர்.

சம்பவ இடங்களுக்கு வந்த போலீசார் சில பள்ளிகளில்  வளாகப் படிக்கட்டுகளிலேயே மாணவர்களைத் தடுத்து, வன்முறைகளைப் பயன்படுத்தப்போவதாக வழக்கமான மிரட்டல்களை வீசினர். சில பள்ளிகளின் முதல்வர்கள் போலீசாரை வளாகத்தின் உள்ளே வரக்கூடாதெனத் தடுத்துவிட்டனர். சுமார் ஒரு வாரம் நீடித்த இந்த வெளிநடப்புகளில் ஏழு உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து தினமும் 20,000க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர். சிற்சில காரணங்களால் வெளிநடப்புப் போராட்டத்தில் பங்குபெறாத மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தனர். மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்களை அச்சுறுத்த போலீசார் பல வழிகளில் முயன்றனர். எஃப்.பி.ஐ. (FBI) மாணவர் இயக்கத்தை ஒரு நாசகார நடவடிக்கையாகக் கருதிக் கண்காணித்தது,

மாணவர்களால் தொடங்கப்பட்ட அமைதியான வெளிநடப்புப் போராட்ட நியாயங்களை ஆதரித்துப் பல பெற்றோர்களும் சமூகத்தின் பிற உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைக் காட்டப் தினமும் போராட்ட காலத்தில் பெருமளவில் பள்ளிகளுக்குச் சென்றது மாணவர் எழுச்சியின் வடிவம் பெரிதாக உதவியது.

பள்ளிகளில் மார்ச் 6 முதல் தொடர்ந்த சூழல்கள் காரணமாக, அவசரமாக மார்ச் 11 இல், கல்வி வாரியத்தால் கல்விப் பிரச்னைகள் ஒருங்கிணைப்புக் குழு (EICC) உருவாக்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள் அடங்கிய குழுவான அந்த அமைப்பு  லாஸ் ஏஞ்சலீஸ் கல்வி வாரியத்துடன் சந்திப்பு நடத்திய அடுத்த நாளே  உள்விவாதம் நடத்த வாரியம் ஒப்புக் கொண்டது. மாணவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த வாரியம் ‘’முன்மொழியப்பட்ட மாற்றங்களைச் செயல்படுத்தப் பணம் இல்லை’’ என்று ஒரேயடியாகக் கைவிரித்தது. இது நிலைமைகளைச் சூடாக்கியது.

சூடான நிலைமைகள் மேலும் கொந்தளிப்பாகும் வண்ணம் 31 மார்ச் 1968இல் லாஸ் ஏஞ்சலீஸ் சால் காஸ்ட்ரோ உள்பட வெளிநடப்பு அமைப்பாளர்களில் 13 பேரைப் போலீசார் கைது செய்தனர். (இவர்கள் பின்னர் கிழக்கு எல்ஏ 13 - East LA 13 என்று பெரும்பாலும் குறிப்பிடப்பட்டனர்.) ‘’பொது மற்றும் பள்ளிகளின் அமைதியைச் சீர்குலைத்தது’’ போன்ற தண்டனை கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 13 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்தக் கைதுகளை, வழக்குகளை எதிர்த்து மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துத் தொடர்ந்தன. 

நிலைமையைச் சமாளிக்கும் நோக்கில் கைது செய்யப்பட்ட 13 பேரையும் போலீசார் மூன்று மாதங்களில் (ஜூன் 2-க்குள்) பிணையில் விடுவித்தனர். முன்நின்ற ஆசிரியப் போராளி சால் காஸ்ட்ரோ தனது வேலையை இழக்க நேரிட்டது. அதனை எதிர்த்தும் மாணவர்கள், லத்தீனிய சமுதாயத்தினர் இணைந்து உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்திய பின்னர், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார். கிழக்கு எல்ஏ 13-க்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் 1970 இல் நீதிமன்றம் கைவிட்டது.

எழுச்சிகளின் பலன்கள் அவ்வப்போது மாணவர்களுக்குக் கிடைக்கவே அவர்களுக்கு உள்ளார்ந்த உற்சாகமும், கல்வி வாரிய உறுப்பினர்கள், அதிகார மையங்கள், காவல்துறையினர் ஆகியோருக்குப் போராட்டக் களம் நின்றவர்கள் மீது எரிச்சலும் கோபமும் பொங்கியது. 1968 மார்ச் 6இல் கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் மாணவர்கள் பற்றவைத்து (Blow Outs), டென்வர் (கொலராடோ), டெக்சாஸ் பகுதிகளிலும் பரவியது போராட்டத் தீ. 

டென்வர், கொலராடோ - மேற்கு உயர்நிலைப் பள்ளி வெளிநடப்புகள் மார்ச் 20, 1969.

டென்வரில் உள்ள வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் இருந்து முதலாவதாக 100-க்கும் மேற்பட்ட சிகானோ மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த வெளிநடப்புகளை நீதிக்கான சிலுவைப் போர் என்ற அமைப்பு ஆதரித்தது. 

மார்ச் 1968இல் கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ் மாணவர்கள் வெளிநடப்பின்போது அங்கிருந்த போலீஸார் நடந்துகொண்டது போலில்லாமல், டென்வர் போலீசார், மேற்கு உயர்நிலைப் பள்ளியின் படிக்கட்டுகளிலேயே - பள்ளியைவிட்டு அமைதியாக வெளிநடப்பு செய்து வெளியேறும் முன்பே - மாணவர்களைச் சரமாரியாகத் தாக்கினர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்மூடித்தனமாக அடித்தல், கைது செய்தல், வன்முறையைப் பிரயோகித்துக் கலைத்தல் என வகைகள் காட்டியது காவல்துறையின் செயல்பாடுகள். பல மாணவர்கள், மாணவிகள்  தேவையில்லாமல் அடித்துக் கைது செய்யப்பட்டனர்; கைகளில் விலங்கிடப்பட்டனர். கொலராடோ வரலாற்றில் போலீஸ் மிருகத்தனத்திற்காக மார்ச் 20, இன்றும் வெறுப்புடன் நினைவு கூரப்படுவதாகிவிட்டது. கொலராடோ வரலாற்றில் மிகப் பெரிய மாணவர் போராட்டங்களில் ஒன்றாக மாறிய இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் வன்முறையான மாணவர் போராட்டங்களில் ஒன்றாகும்.

டெக்சாஸ் - இருமொழிக் கல்விப் போராட்டங்கள் (1970களின் முற்பகுதி 1970–1972)

கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ், கொலராடோ ( டென்வர்) மாகாணங்களைப் பின்பற்றி டெக்சாஸ் முழுவதும் உள்ள மெக்சிகன்-அமெரிக்க மாணவர்கள் இருமொழிக் கல்வியை வலியுறுத்தி, பள்ளிகளில் ஸ்பானிஷ் மொழி பேசினால் அளிக்கப்படும் கடுந்தண்டனையை முடிவுக்குக் கொண்டுவர முதன்மைக்  கோரிக்கைகளாக வைத்துப் போராட்டங்களை நடத்தினர். சான் அன்டோனியோ, கிரிஸ்டல் சிட்டி பிற தெற்கு டெக்சாஸ் நகரங்களில் மாணவர்களது ஈடுபாடும் செயல்பாடும் குறிப்பாக மிக வலுவாக இருந்தது.

போராட்டங்களின் நியாயமும் பரவலும், வலுவும் டெக்சாஸ் ஆளுநர் டால்ஃப் பிரிஸ்கோவை இருமொழிக் கல்வி மற்றும் பயிற்சிச் சட்டத்தில் (S.B.121) ஜூன் 3, 1973இல் கையெழுத்திடச் செய்தது. இருபது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைச் சேர்க்கும் தொடக்கப்பள்ளிகளில் இருமொழி கற்பித்தலைக் கட்டாயமாக்கச் சட்டம் வழிசெய்தது. இது மெக்சிகன்-அமெரிக்க மாணவர்களின் கல்வி உரிமைகளில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது மாணவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டின் நேரடி விளைவாகும் இந்நிகழ்வுகள். 

காவல்துறை அடக்குமுறை

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களுக்கு எதிரான டென்வர் போலீஸ் வன்முறைகள் (1969 இல்) காவல் துறையை வெட்டவெளிச்சத்தில் நிறுத்தியதைக் கண்டோம். அதே சமயம் டெக்சாஸ் (1970கள்) போராட்டங்கள் பரவலாக இருந்தபோதிலும் டென்வருடன் ஒப்பிடும்போது காவல்துறை அடக்குமுறை, வன்முறை சற்று குறைவாக இருந்தது. அதற்குப் பதில், பள்ளி வாரியங்கள் போராட்டக்காரர்கள்மீது கடுமை காட்டின. 1973இல் சட்டம் நிறைவேற்றப்படும் வரை பள்ளி வாரியங்கள் எளிதாகச் செய்யக்கூடிய சீர்திருத்தங்களைக் கூடத் தாமதப்படுத்தின. பெருங் குற்றங்களைக் கண்காணிப்பதுபோல ஃபெடரல் (FBI) கண்காணிப்பு டென்வர் மற்றும் டெக்சாஸில் சிகானோ மாணவர்களது செயல்பாடுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது. ஏற்கனவே கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸிலும் எப்ஃ.பி.ஐ. மாணவர் எழுச்சியை “நாசகரமானதாக” வகைப்படுத்தியதை அறிவோம்.

போராட்டங்களால் ஏற்பட்ட நீடித்த விளைவுகள்

  • அமெரிக்கக் கூட்டாட்சி சட்டம் (Federal Act) -  1968 ஆம் ஆண்டின் இருமொழிக் கல்விச் சட்டம் –நிறைவேற்றப்பட்டது.

  • 1973 சட்டத்தின் மூலம் டெக்சாஸ்: மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக இருமொழிக் கல்வி ஏற்பட்டது அமெரிக்க கல்விக் கொள்கை வரலாற்றில் முக்கியமானது.

  • டென்வர் பள்ளிகளில் ஸ்பானிஷ் மொழி வகுப்புகள் மற்றும் கலாசார பாடத்திட்டம் உள்பட இருமொழி திட்டங்களை 1970-71 ஆம் ஆண்டு முதல் உருவாக்கியது.

  • கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ், டென்வர், டெக்சாஸ் ஆகிய மூன்று  மொழி உரிமைகள்- மொழிச் சமத்துவத்திற்கான இயக்கங்களும்- பரந்த சிகானோ சிவில் உரிமைகள் போராட்டத்தை வலுப்படுத்தின என்பது உண்மை. 

  • அமெரிக்கப் பள்ளிகளில், குறிப்பாக அதிகம், ஆங்கிலம் தவிர்த்த, ஸ்பானிஷ் போன்ற  வேறுமொழி பேசும்  மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் இருமொழிக் கல்வித் திட்டங்களுக்கு (ஆங்கிலம்+ தாய்மொழி) – அண்ணாவின் ஆட்சிக் காலத்திலிருந்து தற்போதும் தமிழ்நாட்டிலுள்ளதுபோல - முதன்மை கொடுக்கும் நிலையை உருவாக்கியது. 

இருமொழிக் கொள்கை என்பது இருமொழிக் கல்வியை ஒரு கற்பித்தல் முறையாக மட்டுமல்ல, கலாசார அடையாளமாக, இனத்தின் சுயநிர்ணய உரிமையுடன் பிணைக்கப்பட்ட ஒரு பெருவளமாகவும் இப்போராட்டங்கள் நிறுவின. மேலும் நாட்டில் நிலவிய கல்வி முறையில் உள்ள பாகுபாடுகளை வெளிப்படுத்தி இவ்விஷயம் குறித்த தேசிய கவனத்தை கிழக்கு லாஸ் ஏஞ்சலீஸ், டென்வர், டெக்சாஸ் மாணவர்களது வெளிநடப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் ஈர்த்தன. அதன் உடனடி விளைவாகத்தான், அமெரிக்கக் கூட்டாட்சி சட்டம் (Federal Act) - 1968 ஆம் ஆண்டின் இருமொழிக் கல்விச் சட்டம் – நிறைவேற்றப்பட்டது. 

இச்சட்டம் தோன்றுவதற்கு முன் பள்ளிகளில் ஸ்பானிஷ் பேசினால் கடுந்தண்டனை என்றிருந்த பாகுபாடான சமத்துவமற்ற நிலை தகர்க்கப்பட்டுப் பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் ஸ்பானிஷ் மொழி சட்டபூர்வமானது. பல்கலைக்கழகங்களில் சிகானோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பாடத்திட்டங்களில் மெக்சிகன்-அமெரிக்க வரலாறு, அவ்வினத்தின் கலாசாரம் முதலியன பிரதிநிதித்துவம் பெறும்வகையான செயல்பாடுகள் வளர்ந்தன. தொடர்ந்த பிற்காலச் சீர்திருத்தங்கள் இருமொழித் திட்டங்களை விரிவுபடுத்தியதோடு, மொழியின் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து மாணவர்களை நிரந்தரமாகப் பாதுகாத்தது. 

இருமொழிகள் வழி கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தல் என்ற கொள்கைக்கு, அதன் அவசியத்திற்கு அமெரிக்கக் கூட்டாட்சியின் முதல் அங்கீகாரமாக 1968 சட்டம் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மாணவர் இயக்கம் - சிகானோ மாணவர் இயக்கம்- ஒரு சிவில் உரிமைகள் மைல்கல்லாகவும் (Civil Rights Mile Stone) நினைவு கூரப்படுகிறது. 

இளைஞர் எழுச்சிகொண்டால், எதுவும் எதிர்நிற்க இயலுமோ?

**

கட்டுரையிலுள்ள பெயர்கள், இடங்கள், நாள்கள், தகவல்களுக்கு ஆதாரம்:

  • கார்லஸ் முனோஜ் ஜூனியர், யூத், ஐடென்டிட்டி, பவர்: த சிகானோ மூவ்மெண்ட், வெர்ஸோ, லண்டன், 1989

  • எர்னஸ்டோ பி.விஜில், த குருசேடு ஃபார் ஜஸ்டிஸ், விஸ்கான்சின் பல்கலைக்கழகம் 1999

  • மரியா.டி.கார்சியோ & சால் காஸ்ட்ரோ, ‘ப்ளோ அவுட்’, நார்த் கரோலினாயுனிவர்சிட்டி பிரஸ், 2011 

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

summary

East Los Angeles Student Uprising 1968; Walkout to Save the Language!

முழு கட்டுரையைப் படிக்க →