மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 
தற்போதைய செய்திகள்

திமுகவை பார்த்து பாஜக கேள்வி எழுப்பினால் அது எப்படி தமிழர்களுக்கு எதிரானதாகும்?: எல். முருகன் கேள்வி

தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து, அதை வளர்த்து வரும் திமுகவினர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவுக்கு வகுப்பெடுக்க வேண்டாம்...

இணையதளச் செய்திப் பிரிவு

திமுகவை பார்த்து பாஜக கேள்வி எழுப்பினால் அது எப்படி தமிழர்களுக்கு எதிரானதாகும்? என கேள்வி எழுப்பியுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து, அதை வளர்த்து வரும் திமுகவினர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவுக்கு வகுப்பெடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில், வேலை தேடி வரும் பிகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகளை திமுகவினர் அவமதிப்பதையும், வன்மத்துடன் தகாத வார்ததைகளால் அவதூறு பரப்புவதையும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார். தமிழகத்தில் பிகார் மக்களுக்கு எதிராக வன்மத்தை கக்கிக் கொண்டிருக்கும் திமுகவினர், அதே பிகாருக்கு சென்று தனது குடும்ப வாரிசு அரசியல் பங்காளி தேஜஸ்விக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது வேடிக்கையான ஒன்று. இதைத்தான் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

உண்மை வெளிப்பட்டுவிட்டதே என்ற ஆத்திரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிராக பாஜக பேசுவதாக அறிக்கை விடுகிறார். திமுகவை பார்த்து பாஜக கேள்வி எழுப்பினால் அது எப்படி தமிழர்களுக்கு எதிரானதாகும்?

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டத்தானே செய்யும்? வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வளர்த்து வரும் திமுகவினர் இதற்கு பதில் சொல்லித் தானே ஆக வேண்டும். முதல்வருக்கு தைரியம் இருந்தால் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறத் தயாரா?

தமிழகத்தில் ஓட்டுக்காக சாதி, மதம், மொழி உணர்வை தூண்டி மற்றவர்கள் மீது வன்மத்தை கக்கி அரசியல் செய்து வரும் திமுக-வினர், இன்று மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். இவரது தந்தை மறைந்த முதல்வர் கருணாநிதியும் அவரது அடிபொடிகளான திமுகவினரும் தானே தமிழகத்தில் இந்த விஷத்தை விதைத்தது.

தமிழக மக்களின் மனதில் என்றென்றும் வீற்றிருக்கும் மறைந்த முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் மலையாளி என்று கேலி பேசியது யார்? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் நா-கூசும் அளவிற்கு சாதிப் பெயரை பயன்படுத்தி அவமானப்படுத்தி பிரசாரம் செய்தது யார்?

மலையாளம், கன்னடம், இந்தி என்று மொழியை வைத்து மக்களை பிரித்து தமிழகத்தில் நஞ்சு ஊட்டிக் கொண்டிருப்பது திமுகவினர் தானே? தமிழகத்தில் சிறுபான்மையினர் மக்களை பயம்காட்டி, அச்சுறுத்தி வாக்குகளை அறுவடை செய்து கொண்டிருப்பது யார்? இந்தி படித்தால் பானி பூரி தான் விற்க முடியும் என்று பேசியது யார்?

அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்டோர் தானே பிகார் மக்களுக்கு எதிராக இதுபோன்று பேசி வருகின்றனர். திமுக மேடைகளில் அக்கட்சி நிர்வாகிகள் பிகார் மக்களை ஏளனமாக பேசுவதை கேட்டு புளகாங்கிதம் அடைந்து வருவது முதல்வர் தானே ?

பிகார் உட்பட வட மாநில மக்கள் மீது வன்மத்தை கக்கி, தாக்குதலுக்குத் தூண்டி, மன மகிழ்ச்சி கொள்ளும் வக்கிர மனம் கொண்டவர்கள் திமுகவினர் தானே? 2021-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இந்த வெறுப்பு பிரசாரம் உச்சத்திற்கு சென்றுள்ளதே!

வட மாநில மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்ய மிக மோசமாக ‘வடக்கன்’ என்ற வார்த்தையை உருவாக்கி சமூக வலைளதங்களில் பரவிடச் செய்வது திமுக உடன் பிறப்புகள் தானே?

திமுகவினரை தூண்டி விட்டு தமிழகத்தில் வெறுப்பு பிரசாரம் மட்டுமே செய்து வரும் முதல்வர், தேசியத்தைப் பற்றியும், சமூக நல்லிணக்கம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை பற்றியும் பாஜகவிற்கு வகுப்பெடுக்க வேண்டாம். தேசியத்தையும், சமூகத்தின் பன்முகத் தன்மையையும், பாரதப் பண்பாட்டையும் உலகெங்கும் ஒலித்து வருபவர்கள் பாஜகவினர். எங்கள் கட்சியின் அடிப்படை கோட்பாடே சமூகநீதி, சமநீதி என்பது தான்.

மடைமாற்றும் அரசியலில் வித்தகரான முதல்வர், தன்னை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் கூற திராணியற்று, தமிழர்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என்று விஷமப் பிரசாரம் செய்ய வேண்டாம். முதலில், தமிழகத்தில் நல்லிணக்கம் ஏற்பட உழைக்காவிட்டாலும், வெறுப்பை விதைப்பதை நிறுத்தினால் நன்று. முதலமைச்சர் தனது திமுக படை பரிவாரங்களுடன் பிகார் சென்று இங்கு செய்யும் விஷமப் பிரசாரத்தை செய்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு திரட்டட்டும்.

இந்த வெறுப்பு அரசியல் செய்வோரின் கூட்டாளியாக இருக்கும் கபட வேஷதாரியான காங்கிரஸ் கட்சியும் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். பீகார் மக்கள் மீது வன்மத்தை கக்கும் திமுக-வினரை காங்கிரஸ் என்றாவது ஒருநாள் கண்டித்தது உண்டா? ஆட்டுக்கும் காவல், புலிக்கும் நண்பன் என்ற கதையாக காங்கிரஸ் கட்சி இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வேஷம்போட்டு வலம் வருகிறது. இதை தான் பிரதமர் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தார். சந்தர்ப்பவாதத்திற்கு பெயர் பெற்ற காங்கிரஸ் கட்சி, தங்களை ஆதரிப்பவர்களுடன் பிகாரில் கூட்டணி, பிகார் மக்களை எதிர்ப்பவர்களுடன் தமிழகத்தில் கூட்டணி. கேரள காங்கிரஸூக்கு வேப்பங்காயாக இருக்கும் இடதுசாரிகள், பிகாரில் தேனாக தெரிகின்றனர்.

ஆளுக்கொரு வேஷம், நேரத்திற்கு ஒரு பேச்சு என பச்சோந்தியாகவே மாறி விட்ட காங்கிரஸ் கட்சி இந்திய மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

திமுக- காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பீகார் மட்டுமின்றி தமிழக மக்களும் தகுந்த பாடம் புகட்டும் நாள் விரைந்து வந்து கொண்டிருக்கிறது.

If the BJP questions the DMK, how is that against Tamils?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாா்டு சிறப்புக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீா்வு

அஞ்செட்டியில் தொழிலாளியைத் தாக்கிய இருவா் தலைமறைவு

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் நவ.3, 4-இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஓம்சக்தி, அங்காள பரமேஸ்வரி கோயில்களில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT