இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், இத்தாலியின் வாகன வடிவமைப்பு மற்றும் பொறியியல் நிறுவனமான என்ஜின்ஸ் இன்ஜினியரிங் எஸ்.பி.ஏ.வை வாங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம், இத்தாலியின் போலோக்னாவில் வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்கான ஒரு புதிய உலகளாவிய சிறப்பு மேம்பாட்டு மையத்தை அமைக்கிறது என தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இத்தாலியின் போலோக்னா நகரில் உலகளாவிய மேம்பாட்டு மையம் அமைக்கும் நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நாட்டின் என்ஜின் இன்ஜினியரிங் எஸ்.பி.ஏ நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டுள்ளது. அந்த மையம், பிரீமியம் மற்றும் எதிா்கால வாகனங்களை உருவாக்குவதற்கு டிவிஎஸ் நிறுவனத்தின் பொறியியல் திறன்களை ஒருங்கிணைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய என்ஜின் இன்ஜினியரிங் எஸ்.பி.ஏ நிறுவனம், மேம்பட்ட முன்மாதிரி மற்றும் உயர்நிலை செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கான புதுமையான தீர்வுகள் உட்பட பல்வேறு வகையான ஆட்டோமொடிவ் மேம்பாட்டு நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்றது. இந்த நிறுவனம் மோட்டோஜிபி பந்தயத்தில் ஆழமான புரிதலையும் அனுபவத்தையும் கொண்டுள்ளது. வளர்ந்து வரும் மொபிலிட்டி தொழில்நுட்பங்களுக்குத் தயாராவதன் மூலமும், சிறந்த திறமையாளர்களை பணியமர்த்தி எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை விரைவுபடுத்துவதை டிவிஎஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல ஆண்டுகளாக, பிஎம்டபிள்யூவுடன் இணைந்து பல்வேறு கூட்டாண்மைகள் மூலம் டிவிஎஸ் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகளை வலுப்படுத்தியுள்ளது. இரு நிறுவனங்களும் முதலில் 310 சிசி தளத்தில் பணியாற்றத் தொடங்கின, அதைத் தொடர்ந்து புதிய 450 சிசி இணை-இரட்டை மற்றும் மின்சார வாகன தொழில்நுட்பங்களையும் உருவாக்கின. நார்டன் மோட்டார்சைக்கிள் வாகனங்களின் தயாரிப்புகளை மேலும் மேம்படுத்த டிவிஎஸ் அதன் புதிய கையகப்படுத்தலைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.