முகப்பு
தற்போதைய செய்திகள்

கின்னஸ் சாதனையாக இந்தியாவில் 2.5 லட்சம் பேர் ஏஐ பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி ஏற்பு!

கின்னஸ் உலக சாதனையாக இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொண்டது குறித்து...

Updated On : 19 பிப்ரவரி 2026, 10:17 am IST
கின்னஸ் சாதனையாக இந்தியாவில் 2.5 லட்சம் பேர் ஏஐ பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி ஏற்பு
பகிர்:

புதுதில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாடு 2026-இல் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொண்டது கின்னஸ் உலக சாதனையாக அமைந்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

தில்லி பாரத மண்டபத்தில் திங்கள்கிழமை (பிப். 16) தொடங்கி 21-ஆம் தேதி வரை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாடு நடைபெறுகிறது.

முதல்முறையாக தெற்குலகில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா உள்பட 45 நாடுகளின் அமைச்சக பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின் நிகழ்வுகளை தில்லி பாரத மண்டபத்தில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (பிப்.19) தொடங்கிவைக்கிறாா்.

தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமா் மோடியுடன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோரும் உரையாற்றவுள்ளனர். நிகழ்வுகளில் பங்கேற்கும் பல்வேறு நாட்டுத் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.

அதைத்தொடா்ந்து மாநாட்டின் ஒரு பகுதியாக கடந்த 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஏஐ தொழில்நுட்ப விளக்கக் கண்காட்சியை பிரதமா் மோடி மற்றும் பிற தலைவா்கள் பாா்வையிடவுள்ளனா்.

24 மணி நேரத்தில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்பு

இந்த நிலையில், கின்னஸ் உலக சாதனையாக இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொண்டது அமைந்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இண்டல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பிப்ரவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய ஏஐ பொறுப்பு உறுதிமொழி இயக்கம் தொடங்கியது. aipledge.indiaai.gov.in என்ற இணையதளம் மூலம் செயற்கை நுண்ணறிவை நெறிமுறையுடனும், பொறுப்புடனும் பயன்படுத்துவது என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சிமாநாட்டையொட்டி நடத்தப்பட்ட இந்த உறுதிமொழியை பிப்ரவரி 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் 2,50,946 பேர் எடுத்துக்கொண்டனர்.

இதன் மூலம் நம்பகமான மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தியது. உறுதிமொழியை ஏற்றுக்கொண்டவர்கள் டிஜிட்டல் பேட்ஜ் மற்றும் ஏஐ கற்றல் பாதைகளுக்கான அணுகலைப் பெற்றனர்.

பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் ஸ்ரீ அபிஷேக் சிங், கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டாளர் பிரவீன் படேல் உள்ளிட்டோர் இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டில் இளைஞர்களை ஈடுபடுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு பாராட்டு தெரிவித்தார். "கல்லூரிகளை அணுகுதல், ஆசிரியர்களுடன் கலந்துரையாடுதலில் ஈடுபடுதல், சமூகத்தின் நன்மைக்காக - நமது வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவை ஒரு கருவியாகப் பயன்படுத்தவும், அது பொறுப்புடன் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்த உறுதிமொழியை எடுக்க மாணவர்களை ஊக்குவிக்கவும் அவரது தொலைநோக்குப் பார்வை எங்களைத் தூண்டியது.

செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். இது உண்மையிலேயே நாட்டிற்கான பெருமையான தருணம். செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தை நோக்கி - நாடு நடைபோட வேண்டிய திசை இது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், இது குடிமக்கள் தலைமையிலான டிஜிட்டல் பொறுப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், பொது நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சொற்பொழிவை வடிவமைப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வளா்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் தாக்கத்தைக் கண்டறியும் நோக்கில் பிரிட்டனின் ப்ளெட்ச்லி பூங்காவில் 2023-இல் ஏஐ பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு தென்கொரிய தலைநகா் சியோலில் 2024-ஆம் ஆண்டும், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 2025-ஆம் ஆண்டும் ஏஐ மாநாடுகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக 2026 - இல் 35 வயதுக்குள்பட்ட 65 சதவீத இளைஞா்களைக் கொண்ட இந்தியாவில் ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது.

summary

India Sets Guinness World Record with more than 2.5 lakh AI Responsibility Pledges in 24 Hours at India AI Impact Summit 2026” announces Union Minister Shri. Ashwini Vaishnaw

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.