சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கரும்பு ஆலையில் புதன்கிழமை(ஜன.14) பராமரிப்புப் பணியின் போது, ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பலியாகினர்.
சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி கரும்பு அரைக்கும் பணி தொடங்கிய நிலையில், தொடர்ந்து இயந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை(ஜன.14) இயந்திர பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த சிவகங்கை அருகே உள்ள கரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (35) மற்றும் சிவகங்கை மதுரை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த பொன்னழகு (59) ஆகியோர் சர்க்கரை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்கு முன்பாகவே, ஆலை நிர்வாகத்தினர் இயந்திரத்தில் சிக்கியிருந்த இருவரது உடல்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலையில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா?, பராமரிப்புப் பணியின் போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதாக கூறி, தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.