உயிரிழந்த முதுநிலை மேலாளா் கல்யாணி 
தற்போதைய செய்திகள்

எல்.ஐ.சி. முதுநிலை மேலாளா் கொலைக்கு காரணம் என்ன?

மதுரையில் எல்ஐசி கிளை அலுவலகத்தில் முதுநிலை மேலாளரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாக உதவி மேலாளர் கைது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரையில் எல்ஐசி கிளை அலுவலகத்தில் முதுநிலை மேலாளரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாக உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் எல்ஐசி கிளை அலுவலகத்தில் பாலிசிதாரருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கியதில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டறிந்த முதுநிலை மேலாளரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாக உதவி மேலாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தற்செயலான தீ விபத்தில் ஏற்பட்ட இழப்பு என்று கருதப்பட்ட நிலையில், அது காயமடைந்த உதவி மேலாளரால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட உதவி மேலாளா் டி. ராம்

மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. இதில், 2-ஆவது மாடியிலிருந்த முதுநிலை மேலாளா் கல்யாணி நம்பி (55) உடல் கருகி உயிரிழந்தாா். உதவி மேலாளரான மதுரை ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த டி. ராம்(45) கால்களில் தீக்காயங்களுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிா் தப்பினாா். அலுவலகத்திலிருந்த ஆவணங்கள், கணினி உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.

இதுகுறித்த புகாரின் பேரில், திலகா்திடல் போலீஸாா் தீ விபத்து என வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தாயின் இறப்பில் சந்தேகம்

இந்த நிலையில், உயிரிழந்த கல்யாணி நம்பியின் மகன் லட்சுமிநாரயணன், தனது தாயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, திலகா்திடல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

முன்னுக்குப்பின் முரணாகப் பதில்

இதனிடையே, காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உதவி மேலாளா் டி. ராமிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் வந்து, முதுநிலை மேலாளா் கல்யாணியின் நகைகளைத் திருடி விட்டு, அவரை எரித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்தாா்.

ஏற்கெனவே, தீயணைப்பு நிலைய அலுவலா்கள் நடத்திய விசாரணையின் போது, தீப்பற்றிய போது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை என ராம் தெரிவித்தாா்.

இதேபோன்று, முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், தனிப்படை போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

ராம் கைது

இதற்கிடையில், இந்தச் சம்பவம் ஒரு கொலை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறை ராமை கைது செய்துள்ளது.

பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை

விசாரணையில், முதுநிலை மேலாளா் கல்யாணி நம்பி மீது உதவி மேலாளா் ராம் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை திலகா் திடல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அப்போது, அவா் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

நோ்மையான அதிகாரி கல்யாணி நம்பி

உயிரிழந்த முதுநிலை மேலாளா் கல்யாணி நம்பி நோ்மையான அதிகாரியாகச் செயல்பட்டு வந்துள்ளார். பணியிட மாறுதலில் மதுரைக்கு கல்யாணி நம்பி, பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்ததில், பாலிசிதாரருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதைக் கண்டறிந்தாா். விசாரணையில், எல்.ஐ.சி. முகவா்களுடன் சோ்ந்து உதவி மேலாளர் ராம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதை கண்டறிந்துள்ளார். இது தொடர்பான ஆவண முறைகேடுகள் குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி ஆவணங்கள் எரிப்பு

இதுதொடா்பாக உயா் அதிகாரிகளுக்கு கல்யாணி புகாா் அளிக்கப்போவதாக ராமிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராம், முறைகேடுகளை மறைக்க கடந்த டிசம்பா் 17 -ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கணினிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அப்போது, அங்கு வந்த கல்யாணி நம்பி இதைக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக கல்யாணி நம்பி தனது மகன் லட்சுமி நாராயணனை (25) தொலைபேசியில் அழைத்து, பீதியுடன் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இதைக் கண்ட ராம், அவர் மீது பெட்ரோலை ஊற்றி, ஆவணங்கள் எரிந்துகொண்டிருந்த அறைக்குள் அவரைத் தள்ளி, கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டு ராம் தப்பிச் சென்றுள்ளார்.

கல்யாணி நம்பி உடல் கருகி பலி

தீயில் கல்யாணி நம்பி உடல் கருகி உயிரிழந்தாா். கல்யாணி நம்பியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கல்யாணி நம்பி மீது பெட்ரோல் ஊற்றிய போது ராம் மீதும் பெட்ரோல் சிதறியதால் அவருக்கும் காலில் லேசான காயம் ஏற்பட்டது.

லட்சுமி நாராயணன் புகார்

இதனிடையே, கல்யாணி நம்பி மகன் லட்சுமி நாராயணன் திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அருகில் உள்ள பகுதிகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகள், தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில், இந்தக் கொலை வழக்கில் ​​சிகிச்சை பெற்று வரும் ராமுக்கு தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவரைக் கைது செய்தனர். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்

ஆவண முறைகேடுகள் விசாரணை

இரண்டு நாட்களுக்கு முன்பு ராமிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, ​​கடந்த ஆண்டு மே மாதம் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலியில் இருந்து மாற்றலாகி வந்த கல்யாணி நம்பி, எல்ஐசி கிளையில் தான் பணியாற்றிய காலத்தில், தன்னுடன் தொடர்புடைய ஆவண முறைகேடுகள் குறித்து விசாரித்து வந்ததை ராம் ஒப்புக்கொண்டார்.

சம்பவத்தன்று, ராம் பெட்ரோல் ஊற்றி ஆவணங்களை எரித்துக்கொண்டிருந்தபோது, ​​கல்யாணி நம்பி அதைப் பார்த்துவிட்டு தனது மகனை அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம், அவர் மீது பெட்ரோலை ஊற்றி, கதவைப் பூட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

தீக்காயங்களுடன் வெளியே ஓடி வந்த ராமை மட்டுமே அவ்வழியாகச் சென்றவர்கள், மாடியில் தீக்காயங்களுடன் சத்தமிட்ட கல்யாணி நம்பியைப் புறக்கணித்துவிட்டு, ராமை மட்டுமே ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் காவல்துறையிடம் தெரிவித்தார். திலகர் திடல் காவல்துறையினர் ஜன. 20 ஆம் தேதி ராமைக் கொலை வழக்கில் கைது செய்தனர்; தீக்காயங்களுக்கு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம் நீதிபதி ஒருவர் புதன்கிழமை விசாரணை நடத்தவுள்ளார்.

கல்யாணிநம்பி கணவர் அழகிய நம்பி (61), ஓய்வுபெற்ற அகில இந்திய வானொலி ஊழியர்.

What was the reason for the murder of the LIC senior manager?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்ரம் - 63 படப்பிடிப்பு எப்போது?

டிடிவி தினகரனின் அரசியல் அனுபவம் திமுக ஆட்சியை அகற்ற உதவும்: அண்ணாமலை

வங்கதேச பதற்றம்: இந்திய தூதர்களின் குடும்பத்தினர் நாடு திரும்ப உத்தரவு!

புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக டிரம்ப் அழைப்பு!

நீலகிரியில் அடுத்த 2 நாள்களுக்கு உறைபனி!

SCROLL FOR NEXT