பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின் ஸ்பிரின்ட் 1 செயல் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.22) தலைமைச் செயலகத்தில், பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடக் களப்பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகள் உள்ளடக்கிய செயல் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
பதிவுத்துறை, பொதுமக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களை பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஏற்படுத்துதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் 160 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பதிவுத்துறையில் 6.02.2000 அன்று ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தை தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின் கீழ் 18 புதிய சேவைகள் உள்ளடக்கிய முதல்நிலை செயல் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
ஸ்டார் 3.0 திட்டத்தின் பயன்களின் விவரங்கள்:
காகிதமில்லா ஆவணப்பதிவு (Paperless Registration)
காகிதமில்லாமல் இணைய வழியில் ஆவணங்கள் சமர்ப்பித்திடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு சொத்தினை எழுதிக்கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவரின் அடையாளமானது ஆதார் வழி பெறப்பட்ட குறுஞ்செய்தி அல்லது விரல் ரேகை வழி சரிபார்க்கப்பட்டு ஆவணதாரர்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆவண விபரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சார்பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணையதள வழி பொதுமக்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்.
நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration)
கட்டுமான நிறுவனத்திடமிருந்து புதிய அடுக்குமாடி குடியிருப்பினை வாங்கும் போதும், புதிதாக உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலிருந்து மனைகளை மட்டும் வாங்கும் போதும், ஆன்லைன் வழி கட்டணம் செலுத்திய உடன் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே இணையவழியாக ஆவணம் பதிவுக்கு சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விபரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு இணையதள வழியாக ஆவணதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற அரசு வாரியங்களால் எழுதிக்கொடுக்கப்படும் சொத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட வாரிய அலுவலகத்திலிருந்தே பத்திரத்தை பதிவுக்கு தாக்கல் செய்து, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை உடனே வாரிய அலுவலகத்திலிருந்தே தரவிறக்கும் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தானியங்கி பத்திர உருவாக்கம் (Automatic Deed Creation)
பொதுமக்கள் பிறர் உதவியின்றி தங்களின் ஆவணத்தை தாங்களே உருவாக்கும் வண்ணம் கேள்வி, பதில் வடிவிலான தானியங்கி பத்திரம் உருவாக்கிடும் வகையில் இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் சொத்து தொடர்பான குறைந்தபட்ச விபரங்களை அளித்து உருவாக்கப்படும் ஆவணத்தை காகிதமில்லா ஆவணப்பதிவு முறையிலோ அல்லது அச்சுப்பிரதி எடுத்து வழக்கமான பத்திரப்பதிவு முறையிலோ பதிவு செய்துக் கொள்ளலாம்.
விரைவுக்குறியீட்டின் (QR Code ) வழி பணம் செலுத்தும் முறை
நடைமுறையில் உள்ள ஆன்லைன் கட்டண வசதியுடன் ரூ.1000-க்கும் குறைவாக பணம் செலுத்த வேண்டிய நிகழ்வுகளில், கூடுதல் வசதியாக பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்ட குறுபணப் பரிவர்த்தனை இயந்திர (Point of Sales) விரைவுக்குறியீட்டின்(QR code with UPI) வழி பணம் செலுத்தும் வசதியும் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு மறுவிற்பனை ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் வசதி அடுக்குமாடி குடியிருப்பு மறுவிற்பனை ஆவணத்தில் கார் பார்க்கிங் மற்றும் மின்தூக்கி (Lift) போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் நிலையில், கட்டிட களப்பணியின்றி பதிவு செய்த அன்றே ஆவணங்களைத் திருப்பித் தரும் வகையில் இந்த மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்கள் உடனுக்குடன் வழங்கும் வசதி
பொதுமக்கள் சொத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகல் கோரும் நிகழ்விலும், வெளிநாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அளிக்கும் பொது அதிகார ஆவணங்கள், நீதிமன்ற ஆணைகள் (Court Order), கடன் ஆணைகள் (Loan order) மற்றும் குறிப்பு ஆணைகள் (Memo) உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை ஆன்லைன் வழி உடனுக்குடன் மையக் கணினியின் மின்னணு கையொப்பத்துடன் (Server based Digital Signature Certificate) வழங்கும் புதிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல்
ஓர் ஆவணத்தின் பதிவு எண்ணை கொடுத்து தேடுதல் மேற்கொள்ளும் பொழுது, அதனுடன் தொடர்புடைய அனைத்து முன்பதிவு மற்றும் பின்பதிவு ஆவணங்கள் வில்லங்கச்சான்றில் வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது (Pervious Document Based Search). மேலும், வருவாய் மாவட்டம், வருவாய் வட்டம் மற்றும் வருவாய் கிராமம் ஆகியவற்றினை உள்ளீடு செய்தும் சொத்துப் பரிவர்த்தனை விபரங்களை தேடும் வசதி கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பதிவுத்துறையில் தற்போது தனித்தனியாக வில்லங்கச்சான்று வழங்கப்பட்ட நிலையை மாற்றி, ஒரு கிராமமானது வெவ்வேறு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும், ஒரு கிராமத்தைப் பொறுத்து ஒரே ஒரு கணினி கட்டணத்துடன் ஒரே வில்லங்கச்சான்றாக வழங்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
கைபேசி செயலி மற்றும் புலனவழி செய்தி
”TNREGINET” என்ற கைபேசி செயலி வழியாக வில்லங்கச்சான்று, ஆவணப்பதிவுக்கான முன்பதிவு வில்லை (Token) நிலை, வழிகாட்டி மதிப்பு, திருமணம், சங்கம், கூட்டு நிறுவனம், சீட்டு நிறுவனம், ஆவணப்பதிவு விபரம், சொத்தின் மதிப்பு கணக்கீடு ஆகியவற்றை எளிதாக அறியும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுத்துறையின் வெவ்வேறு சேவைகளின் நிலை தொடர்பாக புலனம் (WhatsApp) வழியாகவும் செய்தி அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்போர் சங்கப்பதிவு
தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 2022-ன்படி சங்கங்களை பதிவு செய்ய, பொதுமக்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே முற்றிலும் இணையதள வாயிலாக பதிவு செய்யும் புதிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட திருமணத் தேடுதல்
மணமகன் (அல்லது) மணமகள் பெயர், பிறந்த தேதி விபரத்தை உள்ளீடு செய்து திருமண விபரங்களை பெறும் வசதியும் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலாண்மை தகவல் அமைப்பு (MIS)
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை கண்காணிக்க ஏதுவாக அனைத்து நிலை உயர் அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்டார் 3.0 ஸ்பிரின்ட் 1 மென்பொருள் திட்டத்தின் மூலம் பொதுமக்களின் நலனுக்காக மேற்கண்ட 18 சேவைகள் செயல்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ்., பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.