மதுரை அலங்காநல்லூா் அருகேயுள்ள கீழக்கரை கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவும் மைதானத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி  
தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் விதிமுறைகளில் தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை களையும்பொருட்டு விதிமுறைகளில் சில தளர்வுகள் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை களையும்பொருட்டு விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது

தமிழ்நாட்டில் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. ஜல்லிக்கட்டுக்காகவே மதுரை அலங்காநல்லூரில் “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” அமைக்கப்பட்டு அனைவரும் பெருமைகொள்ளும் வகையில் அங்கே ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ஜன.17 ஆம் தேதி அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஏறுதழுவுதல் போட்டியை பார்வையிட்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று அதிகக் காளைகளை அடக்கிச் சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்திட வழிவகை செய்யப்படும் என்றும், உலகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கான சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ. 2 கோடி செலவில் அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும் என்றும் இரண்டு சிறப்பான அறிவிப்புகளை அறிவித்தார்கள்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் இருக்கும் ஒரு சில சிரமங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அவற்றைப் பரிசீலித்து காளைகளுக்கு எவ்வித துன்பமும் நேராவண்ணமும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இடையூறு இல்லாத வண்ணமும் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளது.

  • உள்ளூர் காளைகளும், வீரர்களும் பங்குபெறுவதை உறுதி செய்திட ஏதுவாக, ஆன்-லைன் பதிவு முறையினை மாற்றி, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும்.

  • போட்டிகளின் போது இறக்க நேரிடும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. எனவே, மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும்.

  • இதுவரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழிப் பத்திரம் என்ற நடைமுறை இரத்து செய்யப்படும்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பதிலும், ஜல்லிக்கட்டு விளையாட்டினைத் தொடர்ந்து ஊக்குவித்திடவும், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

Tamil Nadu government Relaxations in the rules for conducting Jallikattu competitions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ.91.88 ஆக நிறைவு!

ரோஹித் சர்மாவின் அதிரடியை பின்பற்றுகிறேன்; மனம் திறந்த அபிஷேக் சர்மா!

10 புதிய பைக்குகளை அறிமுகம் செய்ய டுகாட்டி திட்டம்!

உ.பி.: 3 திருநங்கை சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று

ஜெயலலிதா, திருப்பரங்குன்றம், ஜல்லிக்கட்டு, தமிழ் கலாசாரம்... பிரதமர் மோடி பேச்சு!

SCROLL FOR NEXT