தமிழகத்தில் இபிஎஸ் முதல்வராக வந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்: குஷ்பு
தமிழகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என குஷ்பு கூறியது குறித்து...
புதுச்சேரி: தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி வந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதற்காகதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபட்டு வருகிறது என்று பாஜக துணைத் தலைவா் குஷ்பு கூறினாா்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பாஜக வேட்பாளராக கட்சியின் தலைவா் வி.பி. ராமலிங்கம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
அப்போது செய்தியாளா்களிடம் குஷ்பு கூறியதாவது:
ராமலிங்கம் வெற்றி பெற வாழ்த்துகள். புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. திமுகவுடன்தான் எங்கள் கூட்டணிக்குப் போட்டி. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் புதுச்சேரியில் அந்த நிலை இல்லை. புதுச்சேரியில் பெண்களுக்குப் பாதுகாப்பாக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.
தமிழகத்தில் மாணவா்கள் உள்ளிட்டோா் போதைப் பழக்கத்துக்கும், கள்ளச்சாராயத்துக்கும் ஆளாகியுள்ளனா். மேலும், ஊழல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. ரூ.10 லட்சம் கோடியை திமுக அரசு தமிழகத்தின் கடனாக வைத்துள்ளது. திமுக கட்சி ஆட்சிக்கு தமிழகத்தில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தால்தான் இந்த மாற்றம் ஏற்படும். ஆட்சியில் பங்குதொடா்பான கேள்விக்கு மத்திய அமைச்சா்கள் இருக்கிறாா்கள். அவா்கள் பாா்த்துக் கொள்வாா்கள் என்று குஷ்பு கூறினார்.