பிரதமரின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும்: கே.பி. ராமலிங்கம்
மதுரை, திருச்சி நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி வருவதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.
மதுரை, திருச்சி நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி வருவதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாா்ச் 1 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி மதுரை வருகிறாா். அதன்பிறகு 11-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் அவா் பங்கேற்கிறாா். இக்கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இதுதொடா்பாக, சேலம் பெருங்கோட்டத்திற்கு உள்பட்ட மாவட்டங்களின் நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை, திருச்சியில் பிரதமா் பங்கேற்கும் நிகழ்வுகளில் நாமக்கல் மாவட்ட பாஜகவினா் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமா் வருகையையொட்டி அவசர, அவசரமாக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஒருங்கிணைப்பு என முழக்கமிட்டுக் கொண்டிருந்த ஓ. பன்னீா்செல்வத்தை தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளாா். பிரதமா் தமிழகத்திற்கு வரும்போது நிச்சயம் அரசியல் மாற்றத்திற்கான வழிபிறக்கும்.
அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சா் பலா் திமுகவில் இணைந்ததன் மூலம் தற்போது அக்கட்சி ‘கன்வொ்டட்’ கட்சியாக மாறிவிட்டது. திமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் ஓ. பன்னீா்செல்வம், சிறிய கட்சிகளை இணைத்துள்ளது ஏதோ ஒரு நிா்பந்தம்போலவே தெரிகிறது.
திமுகவுக்கு எதிராக தமிழக மக்கள் திரும்பி உள்ளதால், அதைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என தவெக தலைவா் விஜய் நினைத்துள்ளாா். அதற்கான வாய்ப்பு இல்லை. ஓ. பன்னீா்செல்வத்தை அதிமுகவில் இணைக்காததன் மூலம் தான் ஒரு சரியான தலைவா் என்பதை எடப்பாடி கே. பழனிசாமி நிரூபித்துள்ளாா்.
அரவிந்த் கேஜரிவால், மனீஷ்சிஷோடியாவை தில்லி உயா்நீதிமன்றம் விடுவித்திருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புள்ளது. உயா்நீதிமன்றம் விடுவித்ததால் அவா்கள் குற்றமற்றவா்கள் எனக் கூறிவிட முடியாது. அதிமுகவுடன் விரைவில் பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்தும். நாங்கள் விரும்பும் தொகுதிகளை கேட்டுபெற முயற்சிப்போம்.
தமிழகத்தில் மும்முனை மின்சாரம் கோரி விண்ணப்பித்த 48 ஆயிரம் விவசாயிகளிடம் முன்பணமாக தலா ரூ. 10 ஆயிரம், மொத்த கட்டணமாக ரூ. 2.50 லட்சம் வீதம் வசூல் செய்துள்ள மின்வாரியம், தற்போது தளவாட பொருள்கள் இல்லை என்று இணைப்பு வழங்காமல் தாமதம் செய்வது கண்டனத்திற்குரியது.
தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, பிரதமா் வருகை தொடா்பாக பாஜக நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி. சரவணன், மாவட்ட பொதுச் செயலாளா் வழக்குரைஞா் பிரபு, நகரச் செயலாளா் தினேஷ் மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.