முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கையின் 51 முக்கிய அம்சங்கள்!

திமுக தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து

Updated On : 29 மார்ச், 2026 at 3:05 PM
திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த நிலையில், திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

சனிக்கிழமை திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. மாநில உரிமைகள்

திராவிட மாடல் 2.0 ஆட்சியில்... ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான குழு பரிந்துரைகளை, நாடு தழுவிய விவாதப் பொருளாக்கி, ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்கைத் தடுத்து நிறுத்தி, மாநில உரிமைகளை நிலைநாட்டிட, உடன்பாடான கருத்துள்ள இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டு, அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கழகம் மேற்கொள்ளும்.

‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஆங்கிலமும், தாய்மொழியும் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு மாற வேண்டும்.

ஆங்கிலம் நிரந்தர ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும். ஆங்கிலம் மட்டுமே மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என திமுக தொடர்ந்து போராடும்.

உயர்நீதிமன்றங்களில் அம்மாநில மொழி, நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்க வேண்டும்.

1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே நிதிக்குழு பரிந்துரை செய்ய வேண்டும்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதைக் கைவிட்டு அதற்கான சட்ட முன்வரைவைத் திரும்பப் பெற வேண்டும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களை மாநில அரசே செய்ய வேண்டும்.

மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம்.

சரக்கு மற்றும் சேவை வரியின் ஒருபக்க சார்பினைக் குறைத்து கூட்டாட்சி சமநிலையை உருவாக்க வலியுறுத்துவோம்.

சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் தற்போது மாநிலங்களுக்கு உள்ள பங்கினை 50 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்த்த வலியுறுத்துவோம்.

2. சமூகநீதி

இடஒதுக்கீட்டை முழுமையாக எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநாட்டிட இடஒதுக்கீடு முறையைக் கொண்டு வருவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

ஒன்றிய அரசின் உயர்பதவிகளிலும், பொதுத்துறை நிறுவனங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், தேசிய சட்டப்பள்ளிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படாத அநீதியை எதிர்ப்போம்.

சட்டபூர்வமாகத் தரப்பட்டுள்ள இடஒதுக்கீடு எண்ணிக்கையானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்; அது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளைப் பெருக்குவதற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு நடைமுறையை மாற்றி, அதற்குப் பதிலாக மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றிட ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் எடுக்கப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படும்.

ஆண்டுக்கு ரூ. 20 இலட்சத்திற்கு மேல் ஊதியம் பெறும் உயர்நிலைப் பணி வாய்ப்புகளை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு முதலீட்டு ஊக்க மானியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

3. கலை மற்றும் பண்பாடு

நாட்டுப்புறக் கலைகள், வாழ்வியல் மரபுகள், கட்டடக்கலை, தொல்லியல் மற்றும் இலக்கியத் தரவுகளை ஒருங்கிணைக்கப் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய “ஒருங்கிணைந்த பண்பாட்டு ஆணையம்” அமைக்கப்படும்.

நாட்டுப்புறக் கலைத்துறை, கலைப் பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் ஒருமுகப்படுத்தப்படும்.

கலைத் திறனாய்வு குறித்த குறுகியகாலப் படிப்புகள் தொடங்கப்படும். தொல்லியல் மற்றும் ஆன்மீகச் சுற்றுலாக்களுக்கான சிறப்பு வழிகாட்டிகள் உருவாக்கப்படுவர்.

பண்பாட்டு நிகழ்வுகள், இசை மற்றும் நடனக் கலைகளைக் காணொளி வாயிலாக ஆவணப்படுத்தி, உலகளாவிய தரத்தில் மின்நூலகம் அமைக்கப்படும்.

நாட்டுப்புறக் கலைஞர்களின் குழந்தைகள் உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்திடும் வகையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ்ப் பண்பாட்டு மரபுசார் கலைகளைக் கொண்டு சேர்த்திடும் வகையில் ‘தமிழ்ப் பண்பாட்டுப் பயணம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைகள் நலவாரியச் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தும் பொருட்டு அரசு மூலம் கூடுதல் நிதியுதவி ரூ. 5 கோடி வழங்கப்படும்.

4. தமிழ் வளர்ச்சி

உயர்தனிச் செம்மொழியாம் அன்னைத் தமிழின் சிறப்பினைப் போற்றிடும் வகையில் பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களையும் மொழி வல்லுநர்களையும் கொண்டு சங்கத்தமிழ் முதல் கணினித்தமிழ் வரையிலான தமிழ்மொழியின் வளர்ச்சியையும், அதன் எதிர்காலப் பயணத்திற்கான பாதைகளையும் வகுக்கும் நோக்கில் ‘செம்மொழி மாநாடு’ சென்னையில் சிறப்பாக நடத்தப்படும்.

கலைச்சொல்லாக்க முயற்சியின் ஒரு பகுதியாக ஒவ்வொரு துறைசார்ந்தும், பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளிவரும் முக்கியமான கட்டுரைகள் உடனுக்குடன் மொழிபெயர்த்து வெளியிடப்படும். தமிழ் வழியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தமிழ்மொழி கற்பித்தலுக்கான ஆய்வகங்கள் பள்ளிகளில் உருவாக்கப்படும்.

தமிழ் மொழியியல், இலக்கியத் துறைகளில் நம்பிக்கைக்குரிய இளம் ஆய்வாளர்களை அடையாளப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஐந்து முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்குப் பரிசுத் தொகையுடன் கூடிய விருதுகள் வழங்கப்படும்.

தமிழ் மொழிப்பற்று, தமிழ்நாட்டின் பண்பாட்டுக் கூறுகளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தும் திரைப்படங்களுக்கு ‘முத்தமிழறிஞர் கலைவித்தகர்’ விருது வழங்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு காலத்தில், தமிழ்மொழிக்கான பெருமொழி மாதிரிகளை (Large Language Models) உருவாக்கிட உரைகள், பேச்சுகள் (பல்வேறு வட்டார வழக்குகள்), படங்கள் ஆகியவற்றைச் சேகரித்துத் தரவுக் களஞ்சியம் உருவாக்கப்படும். அதனை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவுசார் மொழித் தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கப்படும்.

தமிழ்மொழிக்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் உருவாக்கத்தை ஊக்குவிக்க கல்வி நிறுவனங்களில் ‘தமிழ்-செயற்கை நுண்ணறிவு புத்தாய்வு நிதிநல்கை’ (Tamil-AI Fellowship)வழங்கப்படும்.

மொழிப்போராட்ட வரலாற்றினை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் நவீன நூலக வசதிகளுடன் கூடிய ஒரு காட்சிக்கூடம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும்.

பல்வேறு துறைகளிலும் புதிதாக அறிமுகமாகும் கோட்பாடுகள், கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் தொடர்புடைய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்க அந்தந்தத் துறைசார்ந்த வல்லுநர்களோடு தமிழறிஞர்களும் இணைந்த ஒரு நிரந்தரக் குழு உருவாக்கப்படும்.

ஒன்றிய அரசு ‘பாரதிய பாஷா பரிவார்’ என்ற அமைப்பின் மூலம் எல்லா இந்திய மொழிகளையும் ஒன்றிணைத்து இவை எல்லாவற்றிற்கும் தாய்மொழி சமற்கிருதம்தான் என நிறுவ முயற்சிக்கின்றது. தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தனித்துவத்தையும், அவற்றின் பண்பாட்டுக் கூறுகளையும் காக்க தி.மு.க தொடர்ந்து பாடுபடும்.

5. தொல்லியல்

மைசூர் கல்வெட்டுத் தரவுகளை ஆவணப்படுத்துதல்: மைசூரில் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கிளை அலுவலகத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுப் படிகள் (Estampages) பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கல்வெட்டுகளை, நீதிமன்ற ஆணைப்படி இந்தியத் தொல்லியல் துறையிடமிருந்து பெறப்படும். இவற்றை முழுமையாக ஆய்வு செய்து, உரிய வரலாற்று விளக்கங்களுடன் “தமிழ்நாட்டுக் கல்வெட்டுப் பெருங்களஞ்சியம்” எனும் பெயரில் நூல் வரிசைகளாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் இதுவரை அறியப்படாத தமிழ்நாட்டின் இடைக்கால மற்றும் பிற்கால வரலாற்றுச் சான்றுகள் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்படும்.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அறிவியல்பூர்வமாக நிறுவியுள்ள கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை விரைவில் வெளியிட ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

வரலாற்றுக்கு முற்பட்ட கால இடங்கள் (Pre-Historic Sites), நடுகற்கள் (Hero Stones) பாறை ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை முழுமையாகக் கண்டறிந்து, டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்படும். இவை அனைத்தும் அரசுப் பாதுகாப்பில் உள்ள நினைவுச்சின்னங்களாக (Protected Monuments) அறிவிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்படும். நம் முன்னோரின் வரலாற்றைப் பேசும் நடுகற்கள் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

குமிழி, தூம்பு உள்ளிட்டவை தமிழர்களின் பண்டைய நீர் மேலாண்மைக்குச் சான்றுகளாக விளங்குகின்றன. அதனுடன் கிடைக்கும் கல்வெட்டுகள் யாவும் பாதுகாக்கப்படுவதோடு, அவை மரபுச் சின்னங்களாக அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டின் அனைத்து நிலப்பரப்புகளில் வரலாறு மற்றும் பண்பாட்டுக் காலவரிசைப்படியான தொல்லியல் தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் தொடரும்.

தொல்லியல் ஆய்வில் அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் விதமாக, உயர்நிலை கதிரியக்கக் கரிம காலக்கணிப்பு (AMS dating) ஆய்வு, மட்பாண்ட ஆய்வு, மகரந்தத் தூள்கள் ஆய்வு ஆகிய ஆய்வுகளை உள்ளடக்கிய பன்னாட்டுத் தரத்தில் ஓர் ஆய்வகம் சென்னையில் நிறுவப்படும்.

ஆஸ்திரேலியாவிலுள்ள பழங்குடி மக்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள மொழியியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமைகளைக் கண்டறிய மொழியியலாளர்கள், தொல்லியலாளர்கள், மானுடவியலாளர்கள், கலை வரலாற்று ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

6. இலங்கைத்தமிழர் நலன்

2019-ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி, இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைக் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டைக்கைவிடுமாறு ஒன்றிய அரசை தி.மு.க. வலியுறுத்துகிறது. இலங்கைத் தமிழ் மக்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்களிடம் கடவுச்சீட்டு, நுழைவு அனுமதி போன்றவற்றைக் கோராமல் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையைச் சான்றாதாரமாக ஏற்க ஒன்றிய அரசை தி.மு.க. கோருகிறது.

இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அதனைச் சரிபார்த்து மேல் நடவடிக்கை எடுத்திடவும் மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க தி.மு.க. கோருகிறது.

இந்தியாவில் குடிபெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் சட்டப்பூர்வ நிலையைத் தெளிவாகக் கூறிட ஒன்றிய அரசை தி.மு.க. வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கிட ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். பாரம்பரியமாகத் தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மக்கள்தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள், தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவைத் தடுக்கப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முழு அங்கீகாரத்தினை இலங்கை அரசு வழங்க ஒன்றிய அரசு மூலமாக வலியுறுத்துவோம். மலையகத் தமிழர் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும் பாகுபாடின்மையையும் உறுதி செய்யும் ஒரு கூட்டாட்சி முறையை நிறுவ வலியுறுத்துவோம்.

7. அயலகத் தமிழர்கள் நலன்

அயலக வாழ் தமிழர்கள் நம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். பல்வேறு வகையான திறமை வாய்ந்த தொழிலாளர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் முதலீட்டாளர்கள் என இலட்சக்கணக்கானோர் தங்கள் தாய்நாட்டையும் தங்கள் பணியாற்றும் நாட்டையும் வளப்படுத்தி வருகின்றனர். அவர்களது பணிக்காலத்திலும் அயல்நாட்டு பணி காலத்திற்குப் பின்னரும் பலனளித்து பாதுகாக்கும் வண்ணம் ஒரு விரிவான “வெளிநாடு வாழ் தமிழர் நலக் கொள்கை” ஒன்று உருவாக்கப்படும்.

அயலக வாழ் தமிழர் நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு கேரள அரசின் NORKA Roots மாதிரியில் அதன் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும்.

வெளிநாட்டு வேலைக்குச் சென்று அங்கு விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடும் அவரது உறவுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு தொழிற்கடன் உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு எண்ணிக்கையினை உயர்த்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அதிக அளவில் அயலக தமிழர் அரசின் திட்டங்களால் பயனடைய இயலும்.

தமிழ்நாட்டில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் ஒரு NRT உதவி மையத்தினை அமைத்து அயலகத் தமிழர்களுக்கு அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்க உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.

8. வேளாண்மை மற்றும் உழவர் நலன்

தமிழ்நாட்டு வேளாண் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி, 1989-ஆம் ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத்தை அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இதன் பயனாக, தமிழ்நாட்டு விவசாயிகள் வேளாண் உற்பத்தியில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து புரிந்து வந்தாலும், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய் பாசனத்தை பெருமளவில் நம்பியே இன்றும் தமிழ்நாட்டின் விவசாயம் உள்ளது. இப்பாசனத்தை மேம்படுத்தும் வகையில், இலவச மின்சாரம் பெறும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் தற்போது வைத்திருக்கும் பம்புகளின் சக்தி மற்றும் அவர்களின் பாசனத் தேவைக்கு ஏற்ப, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும்.

பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாயாகவும், நீண்டகாலப் பயிர்களுக்கு 27,000 ரூபாயாகவும், மானாவாரிப் பயிர்களுக்கு 12,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

நிகர சாகுபடி பரப்பு (Net Cultivable Area) 50 இலட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.

தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் உலர்களத்துடன் கூடிய நிரந்தரக் கட்டடங்களாகக் கட்டப்படும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் 10,500 கி.மீ மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 5,000 கி.மீ நீளத்திற்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மண்வள அட்டைகள் 43 இலட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டு, இயற்கை வேளாண்மைப் பரப்பு 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மைப் பரப்பு ஒரு இலட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும்.

வேளாண்மைக்கு ஆதாரமான நீரைச் சேமிக்க நுண்ணீர்ப் பாசனம் 21 இலட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும்.

மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். கால்வாய்கள் - மதகுகள் புனரமைக்கப்பட்டு, நீர் மேலாண்மையைச் சீர்செய்து, தண்ணீர் தட்டுப்பாடான பகுதிகள் வளமான பகுதிகளாக மாற்றப்படும்.

உணவு உற்பத்தி 125 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும்.

உழவர்கள் தங்கள் பகுதிக்கு ஏற்ற பயிர்களைச் சிறந்த சாகுபடி முறைகளைப் பின்பற்றி அதிக மகசூலை அடைந்திடும் வகையில், “கிராம அளவிலான பயிர்ச் சாகுபடித் திட்டம்” தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

உயிர்ம வேளாண்மை (Organic Farming) சாகுபடி பரப்பினை 40,000 ஹெக்டேரிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுப்பதுடன், அதன் பயன் முழுமையடையும் வகையில் தொடர் ஆலோசனைகள் வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மை (Natural Farming) சாகுபடி பரப்பினை 5 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை வேளாண்மைக்குத் தேவையான இடுபொருட்கள் தயாரிப்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பு உருவாக்கப்படும்.

வேளாண் காடுகள் பரப்பினை அதிகரிக்கும் வகையில் புங்கன், நாவல், ஈட்டி, தேக்கு, சந்தனம், செம்மரம், மகோகனி, மலைவேம்பு, நீர் மருது போன்ற மரங்களை வளர்ப்பது ஊக்குவிக்கப்படும்.

பாரம்பரிய நெல், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் 75,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் ஆண்டுக்கு 1,500 மெட்ரிக் டன் விதைகள் உழவர்களுக்கு வழங்கப்படும்.

காலநிலை மாற்றங்களைத் தாங்கக் கூடிய 1000 மாதிரி பண்ணைகள் அமைக்கப்படும்.

தரிசு நிலங்கள் மற்றும் மண்வளம் குன்றிய 1.25 இலட்சம் ஏக்கர் நிலங்கள் மீண்டும் சாகுபடிக்குக் கொண்டுவரப்படும்.

புளூபெர்ரி, டிராகன் பழம், கிவி போன்ற அயல்நாட்டுப் பயிர்கள் 2,500 ஏக்கரில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட 1.50 இலட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

5,000 சூரிய சக்தி பம்பு செட்டுகள், 1,000 சூரிய சக்தி உலர்த்திகள் மற்றும் 1,000 சூரிய சக்தி மின் வேலிகள் அமைக்கப்படும்.

100 வேளாண் இயந்திர பழுதுபார்ப்பு சேவை மையங்கள் அமைப்பதற்கு ஊரக இளைஞர்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மானிய உதவி வழங்கப்படும். தேவையான பயிற்சியும் வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கம் செய்வதற்குத் தேவையான பயற்சியும் வழங்கப்படும்.

1000 உணவு மதிப்புக் கூட்டும் மையங்கள் நிறுவப்படும்.

மூலிகை பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ‘சிறப்புத் திட்டம்’ உருவாக்கி, மருந்துக்கூர்கன், செங்காந்தள், ஆவாரம், நித்திய கல்யாணி போன்ற மருத்துவ பயிர்களின் சாகுபடி 25,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும்.

உழவர் சந்தைகள் இல்லாத ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.

பூச்சி மருந்து மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளைக் குறைந்த செலவில் செய்து அதிக மகசூலைப் பெற ட்ரோன் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு ட்ரோன்கள் கிடைக்கும் வகையில் இ-வாடகை திட்டம் மூலம் இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப்படும். மேலும் இத்திட்டத்தின் மூலம் ட்ரோன்கள் இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு இளைஞர்கள், குறிப்பாக பெண்கள், வேலைவாய்ப்பு பெறவும் வழிவகை செய்யப்படும்.

ஊரகப் பகுதிகளில் ‘உழவர் சந்தைகள்’ வெற்றிகரமாக செயல்படுவது போல், நகர்ப்புற பகுதிகளில், 100 ‘உழவர் அங்காடிகள்’ அமைக்கப்படும், முதற்கட்டமாக மாநகராட்சிப் பகுதிகளில் இவை அமைக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக, நகராட்சிப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும். இதனால் உழவர்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெற்று பயனடைவர். நுகர்வோரும் தரமான பொருட்களைக் குறைவான விலையில் பெற வழிவகை ஏற்படும்.

உள்நாட்டிலும், ஏற்றுமதி வாயிலாக வெளிநாடுகளிலும் வேளாண் விற்பனையை அதிகரிக்கும் விதமாக AI தொழில்நுட்பத்துடன் கூடிய “வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் ஏற்றுமதி வழிகாட்டி மையங்கள்’’ மண்டல அளவிலும், மாநில அளவிலும் உருவாக்கப்படும்.

வேளாண் பெருங்குடி மக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயனடையும் வகையில், இனி ஆண்டுதோறும் மண்டல அளவில் வேளாண் கண்காட்சிகளும், கருத்தரங்குகளும் நடத்தப்படும்.

வேளாண் பயிர்களில் உயர் விளைச்சல் தரும் விதைகளைக் கண்டறிந்து, விதைப் பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து உழவர்கள் பயனடையும் வகையில் வட்டார அளவில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் வளர வாய்ப்புள்ள, உயர் வருமானம் தரக்கூடிய, முருங்கை, கொய்யா, பப்பாளி, சப்போட்டா, பலா, நெல்லி, நாவல், சீதா, ஆரஞ்சு போன்றவற்றின் தோட்டக்கலை சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றைக் கூடுதலாக விளைவித்திடச் சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும்.

5 ஆண்டுகளில் 5 கோடி பனை விதைக்கப்படும். பனைப் பொருட்களுக்கான சிறப்புக் குழுமங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பனைப் பொருட்களை ஆவின் விற்பனை நிலையங்கள் வழியாகச் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்யப்படும்

புதிய வேளாண் தொழில் பூங்காக்கள்: தமிழ்நாட்டில் விளையும் பொருட்கள் சில பகுதிகளில் அடர்த்தியாக காணப்படுகிறது. அவை பெரும்பாலும் மதிப்புக் கூட்டாமலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதனை மாற்றி அமைத்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்வதை ஏதுவாக்க வேளாண் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும். முட்டை, தேங்காய், வாழை, மா, நெல், பூக்கள் போன்ற பொருட்களுக்கான சிறப்பு தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். பட்டுக்கோட்டை, கிருஷ்ணகிரி, உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல், தேனி, இராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை, சேலம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், திருவாரூர் போன்ற இடங்களில் அந்தந்தப் பகுதிகளில் பரவலாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான வேளாண் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

நெல் விளையும் பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நகரும் நெல் உலர்த்திகள் தேவைக்கேற்ப வழங்கப்படும்.

தானிய சேமிப்புக் கிடங்குகள் (Silo Storage): நெல்லின் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும் பருவங்களில் கொள்முதல் செய்வது பெரும் சவாலாக உள்ளது. தானிய சேமிப்புக் கிடங்குகள் (Silo Storage) அமைத்தால் 20% ஈரப்பதம் உள்ள நெல்லை உலர்த்தி பெருமளவில் கொள்முதல் செய்ய இயலும். ஆகவே நெல் அதிகம் விளையும் பகுதிகளில் தானிய சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும்.

9. நீர் மேலாண்மை

நீர்வளம் பெருக்குவோம்: நீர்நிலைகளுக்குப் புத்துயிர் அளித்து நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதற்கும், வேளாண் தேவைகள் மற்றும் குடிநீர்த் தேவைகளை நீர் தட்டுப்பாடின்றி முழுமையாகப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும் ஊரகப் பகுதிகளில் மாபெரும் நீர் மேலாண்மைத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் நீர்நிலைகள் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு புனரமைக்கப்படும். அவற்றில் உள்ள மதகுகள், கலுங்குகள் ஆகியவைச் சீர்செய்யப்படுவதுடன், நீராடுதுறை போன்ற கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

வேளாண்மைக்கு இன்றியமையாததாகத் திகழும் நீர் நிலைகளிலும், அமைப்புகளிலும் ஆகாயத்தாமரை போன்ற தாவர இனங்களின் பெருக்கம் சீரான நீரோட்டத்திற்கும், பாசனத்திற்கும், பெரும் சிக்கலாக உருவாகி உள்ளது. இவற்றைத் தொடர்ந்து அப்புறப்படுத்தி நீரோட்டத்தைச் சீராக்குவோம். இதன் வாயிலாக வாய்க்கால்கள், குளம், குட்டை, ஏரி ஆகியவை புத்துயிர்பெறும். வேளாண்மை செழிக்கும்.

நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு, அந்த நீர்நிலைகளைச் சுற்றி நடைபாதைகள் அமைத்து, மக்கள் அதனைத் தொடர்ந்து பயன்படுத்திடும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.

தமிழ்நாட்டின் அடுத்த 30 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவை, வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளுக்கான தேவைகளைக் கணக்கிட்டு, ஆய்வு செய்து அத்தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் ‘தமிழ்நாடு நீர்ப்பாதுகாப்புச் செயல்திட்டம் 2056’ உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில், தேவைப்படும் மாவட்டங்களில் குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலைப் பரவலாக்கவும் பெரிய நீர்த்தேக்கங்கள் (Reservoirs) புதிதாக உருவாக்கப்படும்.

10. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு

“நலமுடன் தமிழ்நாடு 2030” என்ற திட்டத்தின்படி தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்கும் வகையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு

ரூ.5 இலட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.

சென்னை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் இருப்பது போன்று கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தாய்சேய் நலனில் IMR மற்றும் MMR குறைக்கும் தரவரிசையில் இந்தியாவிலேயே முதல் இடம்பெற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

மண்டல அளவில்- தஞ்சாவூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய இடங்களில் உயர்சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும். இந்த மருத்துவமனைகள் ஒவ்வொன்றின் மூலமும், சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு உயர்சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

தமிழ்நாட்டில் இளம் வயதினர் உயிரிழப்பிற்கும், வாழ்நாள் குறைவதற்கும் காரணமான இதய நோய்கள், நீரிழிவு நோய், சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்கள், சுவாச நோய், செரிமானம் சார்ந்த நோய்கள் உள்ளிட்ட முதன்மையான பத்து தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

மண்டல அளவில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும்.

மண்டல அளவில் பல்நோக்குச் சிறப்பு கண் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

நடுத்தர வர்க்கத்தினர் அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகளைப் பெற, தனியார் காப்பீடு வைத்திருக்கும் மருத்துவப் பயனாளிகளும் பயன்பெறும் வகையில், காப்பீட்டுச் சிறப்புப் பகுதி விரிவுபடுத்தப்படும்.

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைந்து சட்டமியற்றியவாறு அது தொடங்கப்படும். இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் மருத்துவமனை, சிகிச்சை அளிப்பதுடன் சித்த மருத்துவத்தை நவீனமயமாக்கும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

பாரம்பரிய மருத்துவமனை ஆவணப்படுத்துதல்: தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய சித்த மருத்துவ முறைகள் குறித்த அனைத்துத் தரவுகளும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் ஆவணப்படுத்தப்படும்.

போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தரும் வகையில், போதைப் பொருள் விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் பகிர்வதற்கு ‘போதைப் பொருள் தகவல் மையம்’ உருவாக்கப்படும்.

தீரா நோய்களால் பாதிக்கப்பட்டு நடமாட இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு ‘பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம்’ (Hospice Care) மண்டல அளவில் அமைக்கப்படும்.

மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான வசதிகள், தேவைப்படும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில், டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள நிலையில் இருந்து இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.

கண்ணொளி மீட்போம்: அனைவரும் நலமான கண்பார்வையுடன் திகழ்வதை உறுதிசெய்யும் பொருட்டு, கண்பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு உரிய கண்ணாடி வழங்கப்படும். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி வரும் சூழலில் இந்த நோயின் தாக்கத்தைப் பற்றியும், நோய் வராமல் தடுப்பதற்குரிய வாழ்வியல் முறை மாற்றங்கள் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. எனவே, தமிழ்நாட்டில் விற்கப்படும் இனிப்பு வகைகள், பானங்கள் ஆகியவற்றில் கலோரி மதிப்பைக் குறிப்பிட வேண்டும் எனத் தயாரிப்பாளர்களுக்கு வலியுறுத்தப்படும்.

தெருநாய்க் கடியால் பாதிப்படையும் வாய்ப்பு அதிகம் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான மையங்கள் தரம் உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டில் தற்கொலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் விதமாக ‘தற்கொலை தவிர்ப்புக் கொள்கை’ உருவாக்கப்படும்.

சிறப்பு ஆய்வகங்கள் (Advanced Diagnostic Labs): யர்தொழில்நுட்பம் கொண்டு மேற்கொள்ள வேண்டிய அதிகச் செலவு ஏற்படும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ள சிறப்பு ஆய்வகங்கள் சென்னை மற்றும் மதுரையில் முதற்கட்டமாகத் தொடங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் மட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரும் இந்த ஆய்வகங்களைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் நாட்டிற்கே ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் பயன்பெறும் நோயாளிகளுக்கு உரிய காலணிகள் வழங்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மனநல மருத்துவர் மற்றும் மனநல ஆற்றுப்படுத்துநர்கள் நியமிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த மனநல மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்படும்.தற்போதுள்ள வேகமான வாழ்க்கை சூழ்நிலையில் பொது மக்களிடையே மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மன நலன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பொதுவாக மனநல மருத்துவமனை மற்றும் இதர மருத்துவமனைகளில் உள்ள மனநலப்பிரிவில் மன நோய்களுக்கான (Mental illness) சிகிச்சை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மனநல மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள் ( Mental Health Promotion / Positive Mental Health), மன உளைச்சல் மேலாண்மைக்கான (Stress Management Counselling) ஆலோசனைகள் & Telecounselling Services உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காக “ஒருங்கிணைந்த மனநல மேம்பாட்டு மையங்கள்” வடிவமைக்கப்படும். இத்தகைய மையங்கள் மூலமாக, இளம் பருவத்தினர் முதல் முதியவர்கள் வரை, அனைத்து வயதினருக்கும் தேவையான மனநல மேம்பாட்டிற்கான ஆலோசனைகள்; மன உளைச்சல் மேலாண்மைக்கான ஆற்றுப்படுத்துதல் சேவைகள்; தொலைபேசி வழி ஆற்றுப்படுத்துதல் சேவை (Tele Counselling Service) உள்ளிட்ட பல்வேறு மனநலச் சேவைகள் வழங்கப்படும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் Palliative and Geriatric care பிரிவுகள் துவங்கப்படும்.

11. மகளிர் மேம்பாடு

கலைஞர் ஆட்சிக்காலத்தில் அனைத்து வீடுகளுக்கும் கலர் டி.வி.கள் வழங்கப்பட்டது முதல், திராவிட மாடல் அரசு தற்போது செயல்படுத்தியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வரை, மகளிர் நலம் காக்கும் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, மகளிர் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இல்லத்தரசிகள் தம் வீட்டில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோவேவ் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்திவரும் இத்தகைய பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ, “இல்லத்தரசி” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகள் அனைவருக்கும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளிலேயே மேற்கூறிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பெண்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 1000 உதவித்தொகை, ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள், அடுத்தகட்டத்திற்குப் பொருளாதார ரீதியாக முன்னேறும் வகையில், அவர்கள் தொழில்முனைவோராக உருவாக்கப்படுவர். சுயஉதவிக் குழுக்களில் சிறிய அளவில் தொழில் செய்வோர், தொழிலாளர்கள் ஆகியோர் தொழில் முனைவோர்களாக முன்னேறும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை முதலீட்டுடன் தொழில் தொடங்க, மானியத்துடன் வங்கிக் கடனுதவி, பிணை எதுவுமின்றி வழங்கப்படும். இதன் மூலம் குறைந்தது 3 லட்சம் கிராமப்புறப் பெண்கள் தொழில் முனைவோராக உயர்வார்கள். இந்தப் புதிய பெண் தொழில்முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நவீன உற்பத்தி முறை பயிற்சிகள் வழங்கப்படும். இத்தகைய பயிற்சி பெற்ற பெண்கள், தொழில் முனைவோராகத் தேவையான நவீனக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு பொதுநல மையத்தில் வைக்கப்படும். மூலப்பொருட்களை இம்மையங்களுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்யத்தக்க முழுமையான பொருட்களாக மாற்றி எடுத்துச் செல்லும் வசதி ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படும்.

பல்வேறு வகையான தொழில்களில் சிறந்து விளங்கிடும் பெண் தொழில்முனைவோர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் முதலமைச்சர் விருது வழங்கப்படும்.

கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் சுமார் 5 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் அவற்றின் தகுதி அடிப்படையில் தேவைக்கேற்ப, அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடன்கள் வழங்கப்படும். இதனால், குழு உறுப்பினர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும், கிராமப் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

அரசின் கொள்முதலில் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் நிறுவனங்களில் உயர் நிர்வாக வேலைவாய்ப்புகளைப் பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கச் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இப்படி உயர் ஊதிய வேலைகளில் அமர்த்தப்படும் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 10 விழுக்காடு அந்நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும்.

தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, 1000 குழந்தை காப்பகங்கள் உருவாக்கப்படும்.

இளஞ்சிவப்பு ரோந்துப் பணிகள் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துதல், தேவையான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், காவலன் செயலியை மேம்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வோம்.

நகர்ப்புறங்களின் முக்கிய இடங்களில் சானிடரி நாப்கின்களை விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் பெண்களுக்கு 4 சக்கர வாகனம் மற்றும் பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி வழங்கப்படும். இதன் வாயிலாகப் பெண்களுக்குப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.

நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்துத் தேவைகள் அதிகரிக்கும் சூழலில், தகுதி வாய்ந்த சுயஉதவிக் குழுப் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பகிர்வு ஆட்டோ வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வசதி ஏற்படுத்தித்தரப்படும்.

12. குழந்தைகள் பாதுகாப்பு

பள்ளியில் இடைநிற்றல் இல்லா மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம்.

குழந்தைகள் பாதுகாப்பிற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு குழந்தைநலத் தமிழ்நாடு உருவாக்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துபவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரும் வகையில் போக்சோ நிதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.

குழந்தைகள் பாதுகாப்புக்கான அனைத்து அமைப்புகளும் முழு அளவில் செயல்படுவது உறுதி செய்யப்படும்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்வோம்.

குழந்தைத் தொழிலாளர் அறவே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம்.

குழந்தைகளுக்குப் பாலின நீதிக்கல்வி, குழந்தை உரிமைக்கல்வி, அரசமைப்பு பற்றி அறிமுகக் கல்வி போன்றவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கடமைகளைச் செம்மையாக நிறைவேற்றிடும் வண்ணம் உரிய முறையில் வலுப்படுத்தப்படும்.

குழந்தைகளுக்கான உதவி எண் 1098 செயல்பாடு உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும்.

நாட்டிலேயே முதன்முறையாக, பெண்களைப் பாதிக்கும் கருப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதற்கு தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க திராவிட மாடல் ஆட்சியில் திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக தருமபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியில், பெண்களைப் பாதிக்கும் கருப்பைவாய் புற்றுநோய் தமிழ்நாட்டில் அறவே அகற்றப்படும்.

13. இளைஞர் நலன்

முதல்வர் படைப்பகம்: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகங்கள், புத்தொழில் தொடங்கியவர்கள், மகளிர் தொழில் முனைவோர், மாணவர்கள் ஆகியோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பகிர்ந்த பணியிடம், புத்தொழில் தொடங்க முனைவோருக்கு ஆலோசனை வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள் போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்ட முதல்வர் படைப்பகங்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்படுவதன் மூலம் அப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர் ஊக்கம் பெறுவர்; பரவலான வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும். எனவே திராவிட மாடல் ஆட்சியின் முன்னெடுப்பாகத் திகழும் முதல்வர் படைப்பகங்கள் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் மையங்கள், முதல்வர் படைப்பகங்கள் ஆகியவை போட்டித்தேர்வு பயிற்சி மையங்களாகவும் செயல்படுத்தப்படும். ஒன்றிய அரசுப் பணியிடங்களுக்காக யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி போன்ற அமைப்புகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நமது இளைஞர்கள் வெற்றி பெறும் வகையில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு உயர்தரப் பயிற்சி வழங்கப்படும். இதன் மூலம், சிறுநகரங்கள், குக்கிராமங்களில் இருந்து வரும், வாய்ப்புக் கிட்டாத, பின்புலம் இல்லாத இளைஞர்களும் அரசின் உயர்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு துணை நிற்போம்.

14. முதியோர் நலன்

முதியோர் உதவித்தொகை ரூ. 1,200 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மூத்த குடிமக்களின் நல்வாழ்விற்கு அன்புச்சோலைகள் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும்.

முதியோரின் உடல்நலனைப் பரிசோதிக்க, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இலவச சேவைப் பிரிவு உருவாக்கப்படும். தேவைப்படுவோர் குறிப்பிட்ட கட்டணமில்லா எண்ணை அழைத்து, தங்களது உடல்நிலையை விவரித்தால், அதனடிப்படையில் தேவையான சேவைகளை வழங்கும் அமைப்புகளுக்கு உரிய தகவல் பகிரப்படும். அவசர காலங்களில் உரிய சேவைகள், உரிய காலத்தில் முதியவர்களுக்குச் சென்று சேர்வதை இந்த அமைப்பு உறுதி செய்யும்.

15. மாற்றுத்திறனாளிகள் நலன்

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒரு குறிப்பிட்ட நாளில், அனைத்துச் சிறப்பு மருத்துவர்களும் ஒரே இடத்தில் மாற்றுத்திறனாளி மருத்துவப் பயனாளிகளைப் பரிசோதனை செய்யும் நடைமுறை உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதைத் தொடர்ந்து தொகுத்து வழங்கும் அமைப்பு உருவாக்கப்படும். மாற்றுத் திறனாளிகளின் திறனும் - கல்வித் தகுதியும் பதிவு செய்யப்பட்டு பெருநிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதை எளிதாக்கும் அமைப்பாக இது செயல்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1500-இல் இருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.

தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத கடுமையான குறைகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு மானியத் தொகை ரூ. 2000-லிருந்து ரூ. 4,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க கடன் உதவி, உரிய ஆலோசனைகள், சந்தைத் தொடர்பு ஆகியவற்றை ஏற்படுத்தி வழங்கிட ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும்.

அரசு வழங்கும் குடியிருப்புத் திட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

அன்றாடச் செயல்பாடுகளை எளிதாக்க உதவும் நவீனக் கருவிகளைக் கண்டறிந்து அவற்றை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை எளிதாகவும், இயல்பாகவும் மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்க நவீனக் கருவிகள் வழங்குவதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 250 கோடி ரூபாய் ஒதுக்குவோம்.

16. திருநர், திருநங்கையர் நலன்

மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் திருநர் - திருநங்கையர் நலவாழ்வுக் குழு அமைக்கப்படும்.

மாநில அளவில் பல்வேறு துறைகளில் சிறப்புறப் பணியாற்றிடும் திருநர் - திருநங்கையர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பிக்கப்படுவர்.

இளம் திருநர், திருநங்கையர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும், ஆதரவுக் கரம் நீட்டிடவும் உதவிஎண் உருவாக்கப்படும்.

17. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

2030-ஆம் ஆண்டுக்குள், வீட்டு மனையற்ற தகுதியுள்ள ஒவ்வொரு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பத்திற்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கிட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களிடையே பள்ளி இடைநிறுத்தம் இல்லாத நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்குத் தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள் விரிவாக்கப்படும்.

12-ஆம் வகுப்புக்குப் பின், உயர்கல்வி நுழைவு, தொழிற்கல்வி இணைப்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு என முதல் தலைமுறை மாணவர்களுக்குத் துணை நிற்போம்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களும் விரிவுபடுத்தப்படும்.

ஆதிதிராவிடர் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, தரமான சாலைகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்படுத்தித் தரப்படும்.

சாலை வசதி இல்லாத தொல்குடியினர் வகிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சாலை வசதி அமைத்துத் தரப்படும்.

2006 வன உரிமைகள் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு உரிமைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரம்பரிய மேய்ச்சல் சமூக மக்களுக்கு வன நிலங்களில் உள்ள உரிமையை உறுதி செய்து சமூக வன உரிமை வழங்கப்படும்.

மலைவாழ் மக்களின் வாழ்வியல், பண்பாடு, மொழி போன்றவற்றை ஆவணப்படுத்தி பாதுகாத்திட நீலகிரியில் பண்பாட்டு மையம் நிறுவப்படும்.

18. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு, கல்வியின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உயர்கல்வியை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பெறுவதை ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டம் துவங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியரின் பயணச் செலவு, கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். அயலகக் கல்வி வாய்ப்புகளில் சமூகநீதியை நிலைநாட்டுவோம்.

ஜவுளி, தோல் ஆடை, கைவினை, கணினி தொழிற்பயிற்சி போன்ற துறைகளில், பயிற்சிகள் வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தொழில் தொடங்க, TABCEDCO மூலம் கடன் பெறும் உச்சவரம்பின் அளவு ரூ. 15 இலட்சத்தில் இருந்து

ரூ. 30 இலட்சமாக உயர்த்தப்படும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மக்களுக்குப் பல்வேறு வகையான தொழில்கள் தொடங்க கடன் வசதி அதிகரிக்கப்படும்.

19. சிறுபான்மையினர்

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில், திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

சிறுபான்மை சமூகத்தினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.

சிறுபான்மை இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு சிறப்புத் திறன் பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும். ஆண்டுக்கு 25,000 இளைஞர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும்.

இசுலாமிய மக்களின் அடக்கத் தலங்களுக்கு இயன்ற இடங்களில் இடம் ஒதுக்கப்படும்.

சிறுபான்மை பள்ளிகளில் காலியாக உள்ள அரபி ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இசுலாமியப் பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வக்ஃபு வாரியத்தின் வாயிலாக கூடுதல் கல்லூரிகள் திறக்கப்படும்.

சிறுபான்மையினர் அயலக பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்ய ஒரு சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு சிறுபான்மையினருக்கும் ஒரு புதிய திட்டம் உருவாக்கப்படும்.

சிறுபான்மையினர் தொழில் தொடங்க TAMCO மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு ரூ. 30 இலட்சமாக உயர்த்தப்படும்.

பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களில் விரிவாக்கம், பராமரித்தல் அல்லது புதுப்பித்துக் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற 07.03.2024 அன்று வெளியிடப்பட்ட நிலையான இயக்க முறை (SOP), முறையாகவும், விரைவாகவும் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உருது ஆசிரியர் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைந்து நிரப்பப்படும்.

20. தொழிலாளர் பாதுகாப்பு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியம் மற்றும் இதரப் பல்வேறு நலவாரியங்கள் மூலம் மாதம்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1200-லிருந்து ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மழைக்கால நிவாரண நிதி 5,000 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் ஆண்டுதோறும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 5 இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். திறன் மிகுந்த கட்டுமானத் தொழிலாளர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்படுவார்கள்.

கட்டுமானத் தொழிலாளர்கள் காலை வேளையில் கூடும் 500 இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய உழைப்பாளர் கூடங்கள் அமைக்கப்படும்.

சென்னை புறநகர், திருப்பெரும்புதூர், ஓசூர், திருப்பூர், கரூர், சிவகாசி போன்ற தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, 2030-ஆம் ஆண்டுக்குள் 1000 குழந்தைகள் காப்பகங்கள் அப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுடன் இணைந்து உருவாக்கப்படும்.

தூய்மைப் பணியாளர்கள் உடல்நலத்தைக் காத்திடும் வகையில் ஆண்டுக்கு இருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். அனைத்து வகையான தூய்மைப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்குத் தனிநபர் பாதுகாப்புக் கருவிகள் (PPE Kits – கையுறைகள், முகக் கவசம், காலணிகள், பாதுகாப்பு உடைகள்) வழங்கப்படும். தூய்மைப் பணியாளர்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படுவது உறுதிசெய்யப்படும்.

தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலம் ஊரகக் குடியிருப்பு வசதி, கல்வி உதவித்தொகை மற்றும் திருமண/மகப்பேறு நிதியுதவி பெறுவது உறுதி செய்யப்படும்.

தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகள் கல்வித் தகுதிகளை வளர்த்து, வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் அவர்களுக்கு அரசுத் திட்டங்களின்கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்கள் தொழில் திறன்களை மேம்படுத்திக் கொள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு அவர்கள் தங்கள் தொழில் சார்ந்த AI தொழில்நுட்பம், மின்னணுவியல், மோட்டார் வாகனப் பழுது நீக்கல் உள்ளிட்ட திறமைகளை மேம்படுத்திக் கொள்ள (Upskilling) வழிவகைகள் செய்யப்படும்.

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள பனை தொழிலாளர்களுக்குத் தேவையான பனைமரம் ஏறும் கருவிகள் உட்பட தேவைப்படும் இதர கருவிகள் 100% மானியத்தில் வழங்கப்படும்.

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள பனை தொழிலாளர்களுக்குக் காப்பீடு வசதி ஏற்படுத்துதல் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்குக் கூடுதல் உதவிகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் பட்டப்படிப்பு பயில்வதற்கான உதவித்தொகை, மற்ற நலவாரியங்களில் வழங்கப்படுவதைப் போல ரூ. 4000 ஆக உயர்த்தி வழங்கப்படும்

சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வாரியங்களின் உறுப்பினர்கள், தங்களது தொழிலை மேம்பாடு செய்திடத் தேவையான உதவிகள் வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டப் பயன்களையும் பெற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொத்தனார், எலக்ட்ரீசியன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தொழில் செய்யத் தேவையான திறன் பயிற்சி மற்றும் கருவிகள் (Tool Kit) வாங்கிட உதவித்தொகைகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள பெண்கள் மற்றும் திருநங்கை ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்களுக்கு மின்சாரம்/CNG/LPG ஆகியவற்றால் இயங்கக்கூடிய புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்காக ரூ. 1.5 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியம், மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியம், வீட்டுப் பணியாளர் நலவாரியம், கைவினைத் தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட 17 நலவாரியங்களில் உள்ள உறுப்பினர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக ரூ. 50,000 வழங்கப்படும்.

21. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன்

திராவிட மாடல் அரசால், கடந்த 3.1.2026 அன்று அறிவிக்கப்பட்ட “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஓய்வுபெறும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், 50 விழுக்காடு ஊதியம் ஓய்வூதியமாகவும், அத்துடன் இதர ஓய்வூதியப் பலன்களும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

ஒன்றிய அரசு எட்டாவது ஊதியக் குழுவை மாண்புமிகு நீதியரசர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அவர்களின் தலைமையில் அமைத்துள்ளது. இதன் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தியவுடன், அவற்றை மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்துவதற்கான உரிய குழு அமைக்கப்படும். இந்த ஊதிய விகிதங்கள் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும்.

மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், தற்போது வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அரசுத் துறைகள், வாரியங்கள், நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள், உரிய நேரத்தில் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

“ஓய்வூதியதாரர்கள் காப்பீட்டுத் திட்டத்தின்”கீழ் அனைத்து அரசு வாரியங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஓய்வூதியதாரர்களுக்கும், காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியர்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களது ஐம்பதாவது வயதில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் இலவச முழு உடற்பரிசோதனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

22. வணிகர் நலன்

இந்தியாவில் முதன் முதலாகத் தமிழ் நாட்டில் தான் வணிகப் பெருமக்களின் நலனுக்காக “தமிழ்நாடு வணிகர் நல வாரியம்” என்ற அமைப்பு, தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது. வாரியம் உருவாக்கப்பட்ட போது 20 உறுப்பினர்கள் இருந்தார்கள். நமது திராவிட மாடல் அரசு உறுப்பினர் எண்ணிக்கையை 30 ஆக உயர்த்தி இருக்கிறது.உறுப்பினர்களுக்கு கட்டண விலக்கு அளித்ததன் காரணமாக 40 ஆயிரத்து 994 புதிய உறுப்பினர்கள் புதிதாக இணைந்திருக்கிறார்கள்.

வாரிய உறுப்பினர்கள் மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தினோம். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு 8 ஆயிரத்து 892 உறுப்பினர்கள் பல்வேறு உதவிகளைப் பெற்றுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

வணிக உரிமங்கள் அனைத்தும் ஒற்றைச் சாளர (Single Window) முறையில் அளித்து, புதிய வணிக உரிமங்கள் பெறுவதும், புதுப்பித்தலும் எளிமைப்படுத்தப்படும்.

வணிக உரிமம் பத்து ஆண்டுகளுக்கான உரிமமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.

இரவு நேரக் கடைகளை இடையூறின்றி நடத்தி வணிகர்களின் வாழ்வாதாரம் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திட்ட அமலாக்கம், சாலை விரிவாக்கம் போன்றவற்றை மேற்கொள்ளும் போது, அப்பணிகளை விரைந்து முடித்திடவும், அப்பணிகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மாற்றிடங்கள், இழப்பீடுகள் அளித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் பட்டாசு வணிகம் மற்றும் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படாத வகையில், தற்காலிக மற்றும் நிரந்தர உரிமங்களை எவ்வித கால தாமதமும் இன்றி புதுப்பித்து அளித்து திருவிழா கால பட்டாசு விற்பனை பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ள ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவகங்களுக்கான எரிபொருள் வழங்கலை மேம்படுத்தி, உணவகங்களுக்கான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சீர்செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

23. காவல்துறை

திராவிட மாடல் ஆட்சியில் 17,435 பேர் காவல் துறைக்குத் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

1252 தீயணைப்பாளர்களும் 366 சிறைக்காவலர்களும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐந்தாவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுத் தடுப்பில் களப்பணியாற்றி உயிர்நீத்த காவலர் குடும்பங்களுக்குத் தலா 25 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி, முன்களவீரர்களாகப் பணியாற்றிய 1.17 லட்சம் காவல் துறையினருக்கு ஊக்கத்தொகையாகத் தலா ரூ.5,000 வீதம் 58.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்து பிரித்து, ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய இரண்டு புதிய ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

43 புதிய மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட 81 புதிய காவல்நிலையங்களும், 6 புதிய உட்கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மகளிர் காவல்துறையை உருவாக்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அதன் ஐம்பதாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் காவலர்களுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘அவள்’ (AVAL - Avoid Violence Through Awareness and Learning) திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். 62 காவலர் குடியிருப்புகள் கட்டித் திறக்கப்பட்டுள்ளன. ரூ.55.60 கோடியில் தீயணைப்பு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தரப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

காவல்துறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு பதவி உயர்வுகள் தாமதமின்றி வழங்கப்படும்.

சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் வகையில் கட்டப்படும் காவல் குடியிருப்புகளில் நூலகம் மற்றும் சமூகநலக்கூடம் அமைக்கப்படும்.

பழைய காவலர் குடியிருப்புக்களுக்கு பதில் புதிய குடியிருப்புக்கள் கட்டித் தருவதோடு, குடியிருப்புக்களின் எண்ணிக்கையை உயர்த்தி பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வுபெற்ற காவலர்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும்.

24. பத்திரிக்கையாளர் நலன்

மக்களாட்சியின் மாண்பைக் காக்கும் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்கும் ஊடகத்துறையினர் நலனைப் பாதுகாப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் முன்னணியில் நிற்கும். திராவிட மாடல் ஆட்சியில், பத்திரிக்கையாளர்களுக்குக் கோவிட் பெருந்தொற்றுக் காலச் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5000 வீதம் 5,782 பத்திரிக்கையாளர்களுக்கும், கோவிட் பெருந்தொற்றால் இறந்த பத்திரிக்கையாளர்களின் வாரிசுகள் 27 நபர்களுக்குத் தலா 10 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு, 180 நபர்களுக்கு பத்திரிக்கையாளர் ஓய்வூதியமும், 28 நபர்களுக்கு பத்திரிக்கையாளர் குடும்ப ஓய்வூதியமும், 56 பத்திரிக்கையாளர்களின் வாரிசுகளுக்கு குடும்ப உதவி நிதியும் வழங்கப்பட்டது. பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிக்கையாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப உதவிநிதி

ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. சிறந்த இதழியலாளர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய ‘கலைஞர் எழுதுகோல் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பத்திரிகையாளர் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ. 4 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்டுவரும் மருத்துவ உதவித் தொகை ரூ. 2 இலட்சத்திலிருந்து ரூ.2.50 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000-லிருந்து ரூ.15,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ.5,000 லிருந்து ரூ.7,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

பத்திரிக்கையாளர்கள் பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டால், அவர்களின் மருத்துவச் சிகிச்சைக்காக வழங்கப்படும் உதவித்தொகை

ரூ. 3.5 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

பத்திரிக்கையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் இரு மடங்காக உயர்த்தப்படும்.

அரசு வாடகைக் குடியிருப்புகளில் பத்திரிக்கையாளர்களுக்கான 3 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.

அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர்களுக்குச் செயல்படுத்தி வரும் ஓய்வூதியம், மருத்துவ உதவி போன்ற திட்டங்கள் காட்சி ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

25. நெசவாளர் நலன்

தமிழ்நாட்டின் தொழில்துறைகளில் பெருமளவு வேலைவாய்ப்பை வழங்கும் நெசவுத்துறை ஒரு முக்கியத் துறையாகும். உலகெங்கும் மக்கள் பயன்படுத்தும் துணி வகைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தச் சூழலில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, உற்பத்தியைப் பன்மடங்காக்கி, அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தருகிறது அரசு. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

கைத்தறி நெசவாளர் முதியோர் மாதாந்திர ஓய்வூதியம் 1,200 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

செயல்பாடின்றி உள்ள தறிகளை நவீனப்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்குக் கொணர்ந்து புதிய நெசவாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.

50 கைத்தறி குழுமங்கள் (Clusters) மாநிலம் முழுவதும் நிறுவப்படும்.

90 விழுக்காடு மானியத்துடன் 10,000 கைத்தறிகள் நவீனப்படுத்தப்படும்.

விசைத்தறித் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், 15,000 சாதாரண விசைத்தறிகள் ரேபியர் தறிகளாக மாற்றப்படும்.

விசைத்தறித் துறைக்காக 40 பொதுவான வசதி மையங்கள் அமைக்கப்படும்.

நான் முதல்வன் / நிறைவு பள்ளி திட்டங்களின்கீழ், மேம்பட்ட நெசவு தொழில்நுட்பங்களில் (Advanced Weaving Technologies) 5,000 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) மற்றும் தேசிய வடிவமைப்பு நிறுவனம் (NID) ஆகியவற்றுடன் இணைந்து 2,500 நெசவாளர்களுக்கு வடிவமைப்பு மேம்பாடு, மதிப்புக்கூட்டல் திறன்களில் மேம்பட்ட பயிற்சி வழங்கப்படும்.

திருப்பூரில் தேசிய வடிவமைப்பு நிறுவனம் (NID) மற்றும் தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மொத்த கைத்தறி விற்பனையின் மதிப்பு ரூ. 2000 கோடியாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பருத்தி உடைகள் மட்டுமின்றி MMF (Man Made Fiber) எனப்படும் செயற்கை இழை ஆடைகள் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. எதிர்காலத்தில் MMF-இன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் என்று துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள். நமது மாநிலம் விழிப்புடன் செயல்பட்டு பருத்தி மட்டுமல்லாது MMF வகையிலும் கவனம் செலுத்தி வளர்வது மிகவும் அவசியமாகும். நமது மாநிலத்தில் MMF துறை தொழில்நுட்ப ஜவுளித் தயாரிப்புகளை வளர்த்திட ரூ. 100 கோடி மதிப்பில் ஒரு சிறப்பு நிதி உருவாக்கப்படும். இந்த முன்னெடுப்பினால் ரூ. 2000 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் நிறுவப்படும்.

G.I. பதிவுபெற்ற தமிழ்நாட்டின் கைத்தறி வகைகள் - தேசிய மற்றும் பன்னாட்டு கண்காட்சிகளில் பெருமையுடன் காட்சிப்படுத்தப்படும்.

ஜவுளித்தொழில் நவீனமயமாக்கப்பட்டு, கோவை, திருப்பூர், கரூரில் 25 ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தங்கும் விடுதிகள் கட்டப்படும்.

செயலற்ற நிலையில் உள்ள 50 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

உலகளாவிய ஜவுளித்துறை மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

26. பள்ளிக்கல்வி

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையானது, நாட்டிலேயே முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 19.34 லட்சம் மாணவ, மாணவியர் காலையில் சூடான, சுவையான, சத்தான காலை உணவைப் பெறுகிறார்கள். இது மாணவர்களின் அறிவு வளத்தையும், மனவளத்தையும் அதிகரித்துள்ளது. இல்லம் தேடிக் கல்வித் திட்டமானது அனைவருக்குமான கல்வியை உறுதி செய்துள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அதிகரித்துள்ளது. 80 ஆயிரம் ஆசிரியர்களுக்குக் கை கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் வென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பேராசிரியர் அன்பழகனார் பெயரில் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகள் பள்ளிகளில் செய்து தரப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

காலை உணவு விரிவாக்கம்: ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புவரை வழங்கப்படும் காலை உணவு, எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படும். இதன்மூலம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 15 இலட்சம் பள்ளி மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு: இந்தியா முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதை ஏற்காத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டை சட்டத்திற்கு புறம்பாக நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசின் போக்கினை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும்.

புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் மும்மொழிப் பாடத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்று எதேச்சாதிகாரப் போக்குடன் ஒன்றிய அரசு செயல்படுகிறது. இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்து ஒன்றியத்திலுள்ள மாநிலங்களிலேயே வளர்ந்த முன்னணி மாநிலமாக உயர்ந்துள்ள தமிழ்நாட்டின் மீது இத்தகைய இந்தி மொழித் திணிப்பை நுழைக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை என்றும் ஏற்க மாட்டோம்.

எண் கல்வியிலும், எழுத்துக் கல்வியிலும் காணப்படும் கற்றல் இடைவெளியைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றை அறவே நீக்கி, 100% மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல், ஆரம்பக்கல்வி நிறைவு செய்வதை உறுதிப்படுத்துவோம்.

2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்வோம். ‘கல்லூரிக் கனவு’ தொடர் நிகழ்ச்சிகளின் வாயிலாக ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதே மேல்படிப்பு தொடர்பான ஆலோசனைகள் தொடங்கப்படும். பள்ளிக்கல்வி நிறைவுறும்போது ஒவ்வொரு மாணவரும் உயர்கல்விக்கான தெளிவைப் பெற்றிருப்பார்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2030-க்குள் நூறு விழுக்காடு ‘Smart Class Room’ அமைக்கப்படுவது உறுதிசெய்யப்படும்! முந்நூறுக்கும் மேற்பட்ட நூலகங்கள் Digital பிரிவுகள் துவக்கப்பட்டு அறிவுக் கோட்டைகளாக உயரும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரம் மாதிரிப் பள்ளிகள் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ மூலம் விரிவுபடுத்தப்படும்.

2030-க்குள் மேல்நிலைப் பள்ளிகளில் STEM பாடப்பிரிவு கற்றல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

பள்ளி வளாகங்களில் மரங்கள் நடப்பட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி வளாகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும், அறிவியல் முறையிலான கழிவு மேலாண்மை அமைப்புகளும் உருவாக்கப்படும்.

மண்டல அளவில் கலைக்கான மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும். சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு இயல், இசை, நாடகம், பாரம்பரிய கலை வடிவங்கள் ஆகியவை குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்துக் கலைப் பயிற்சிகளும் மாதிரிப் பள்ளிகளுடன் இணைக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டத்தில் திறன் பயிற்சி, கலை, பண்பாடு, விளையாட்டு ஆகியவை இடம்பெறுவது உறுதிசெய்யப்படும்.

நமது பள்ளி மாணவர்களுக்கு உரிய குடிமையியல் கல்வி (Civic Education) கற்பிக்கப்படும். பொதுவெளியில் நடந்து கொள்ளும் முறை, பொது வெளிகளைப் பொறுப்புடன் பயன்படுத்தும் முறை, சூழல் தூய்மை, சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், சமூகநீதி, பாலியல் பொறுப்புணர்வு, சமூக வலைத்தளப் பயன்பாட்டில் கண்ணியம் காத்தல் என பன்முகக் கல்வி அளிப்பது காலத்தின் தேவையாகும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கண்ணியமான சமுதாயம் மலர இம்முயற்சி பயன்படும்.

ஒவ்வொரு பள்ளியிலும், உடல்நலத்திற்காக விளையாட்டையும் - உளவியல் பாதுகாப்பையும் - வாழ்க்கைத் திறன் கல்வியையும் உறுதிப்படுத்துவோம்.

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் பார்வையை மேம்படுத்தத் தேவையான திட்டங்கள் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். மாணவர்களிடம் கேள்வி கேட்கும் திறன் வளர்த்தெடுக்கப்படும். கற்றலின் அடுத்தகட்டத்திற்கு நகர்வதற்கான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படும். மனப்பாடம் செய்யும் முறை மாற்றப்பட்டு, அறிந்து தெளியும் முறை வளர்த்தெடுக்கப்படும்.

மாணவர்களின் அறிவியல் சார்ந்த திறன்களை ஊக்குவித்து இளம் அறிவியலாளர்களை உருவாக்குவோம். அவர்களின் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மாணவப் பருவத்திலேயே அறிவியல், பொறியியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிப்போம். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படும். பள்ளிகள் எதிர்காலத் தொழில் முனைவோருக்கான நாற்றங்கால்களாக அமையும்.

நம்ம ஊரு, நம்ம பள்ளித் திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக நிதி திரட்டப்படும். இதனால், பொதுச் சமூகத்தின் பார்வையும், அக்கறையும் அரசுப் பள்ளிகளின் மீது திரும்பும்.

மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வட்டார - மாவட்ட - மண்டல மற்றும் மாநில அளவில் பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்படும். தமிழில் சொற்பொழிவு, கட்டுரை எழுதுதல், கவிதை மற்றும் கதை எழுதுதல் போன்ற போட்டிகளை நடத்தி வெற்றி பெறும் அணியினருக்கு கோப்பைகள் வழங்கப்படும். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதலமைச்சர் கோப்பை, சிறப்பு ரொக்கப் பரிசுடன் வெளிநாட்டுச் சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

27. உயர்கல்வி

உயர்கல்வியில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்வதற்கு தமிழ்நாடு முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் உள்ளன. பள்ளி மாணவர்கள் தகுந்த உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க ‘கல்லூரி கனவு திட்டம்’ - பொருளாதார சுமையைக் குறைக்க ‘புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம்’ - கிராமப்புற மாணவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்க ‘சிகரம் தொடு திட்டம்’ - பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்யும் மாணவர்கள் உயர்கல்வி பயில ‘உயர்வுக்குப்படி திட்டம்’ போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர்.

பெருந்தலைவர் காமராசர் பெயரிலான கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

20 புதிய கலை அறிவியல் கல்லூரிகள், 10 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

பொருளாதாரத் தடையை நீக்கி அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிறுவப்பட்டுள்ள ஆய்வகங்களின் தரம் உயர்த்தப்பட்டு, பாடத்திட்டங்களின் தேவைக்கும் தற்காலத்திற்கும் ஏற்ற வகையில் அமைக்கப்படும். 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் நவீன ஆய்வகங்கள் அமைவது உறுதி செய்யப்படும்.

கல்வியை முன்னிறுத்தி வளர்ச்சியை எட்டும் வகையில் தமிழ்நாட்டில் பின்தங்கிய 10 பகுதிகளில் உயர்கல்வி சிறப்பு வளாகங்கள் உருவாக்கப்படும். இவ்வளாகங்களில், மாதிரிப் பள்ளிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தேசிய அளவிலான முன்னணி கல்வி நிறுவனங்கள், மாணவ, மாணவியருக்கு தங்கும் விடுதிகள், திறன் பயிற்சி மையங்கள், முதல்வர் படைப்பகங்கள் ஆகியவை உலகத்தரம் மிக்க வசதிகளுடன் அமைக்கப்படும்.

அறிவுசார் பொருளாதாரமாக உயர, உயர்கல்வி மட்டுமன்றி அடிப்படை ஆய்வுகளிலும் நமது மாணவர்கள் பெருமளவு ஈடுபட வேண்டும். எனவே இதனை ஊக்குவிக்கும் வகையில் புதிய அமைப்புகளை உருவாக்கி, அதற்குத் தேவையான நிதியையும் வழங்கி, இந்தியாவின் அறிவியல் தலைநகரமாகத் தமிழ்நாட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நமது திராவிட மாடல் அரசு மேற்கொள்ளும்.

ஆராய்ச்சியும், புதுமையும் செழிக்க மைய ஆய்வகங்களும், Center of Excellence எனும் தொழிற்கல்வி சிறப்பு மையங்களும் நிறுவப்படும். இங்கு பணிபுரியும் ஆய்வாளர்களும், மாணவர்களும் உலகத்தரம் மிக்க ஆய்வுகளை மேற்கொள்ளவும், தொழில்துறைக்குத் தேவையான ஆய்வுகளைத் துறைசார்ந்தவர்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் ஏதுவாகத் திட்டங்கள் வகுக்கப்படும். தமிழ்நாட்டில் பன்னாட்டு பல்கலைக்கழகங்களின் கல்வி வளாகங்கள் நிறுவப்பட்டு, அதன்மூலம் நம் மாணவர்களுக்குப் பன்னாட்டுக் கல்விமுறை அறிமுகம் செய்யப்படும்; மேலும் இதன்மூலமாக நம் மாணவர்கள் உலக அரங்கில் போட்டியிடுவதற்கு வழிவகுக்கப்படும்.

எந்தவொரு கல்லூரியும் இல்லாத வருவாய் வட்டத்தில் அரசுக் கல்லூரி அமைக்கப்படும். அதேபோல் தொழிற்பயிற்சி நிறுவனம் (ITI) இல்லாத வருவாய் வட்டத்திலும் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும். இந்நிறுவனங்களில் ஆய்வகங்கள் நவீனமாகவும் Industry 4.0 தரத்திலும் நிறுவப்படும்.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டந்தோறும் மாணவியர் விடுதிகள்: கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குக் கல்வி கற்பதற்காக வரும் மாணவிகளுக்கு உண்டு உறைவிட வசதிகளை வழங்குவதற்கான மாணவியர் விடுதிகள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும்.

அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் மாணவர்களின் கற்றல் திறனையும், அறிவாற்றலையும் மேம்படுத்தும் வகையில் Wi-Fi வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தேவைப்படும் அனைத்து இடங்களிலும் ‘சமூகநீதிக் கல்லூரி விடுதிகள்’ திறக்கப்படும்.

கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்கள் நெரிசலின்றிச் செல்ல வசதியாகக் காலையும், மாலையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கெனச் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படும் சிகிச்சைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரி மாணவிகளுக்கு இரத்தசோகை பரிசோதனை செய்யப்பட்டு தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

உயர்கல்வி நிறுவனங்கள் - மாணவர்களின் முழுமையான ஆளுமையை வளர்க்கும் மையங்கள்! ‘நான் முதல்வன் 2.0’ மூலம் கூடுதல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, உலகளவில் நம் இளைஞர்கள் போட்டியிட வழிவகுக்கப்படும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஜெர்மன், பிரெஞ்சு, கொரியன், மேண்டரின், ஜப்பானிய மொழி உள்ளிட்ட உலக அளவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குப் பயன்படும் மொழிகளைப் பயில்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு Mechatronics, Electronic Mechanic, Advanced CNC, Robotic Welding, Electric Vehicle, Green Energy உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களில் பயிற்சியளித்து வேலைவாய்ப்பு கிடைத்திட ஏதுவாக புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்களும் (ITI), புதிய தொழிற்பிரிவுகளும் தொடங்கி அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை

35,000 இல் இருந்து 70,000 ஆக இரட்டிப்பாக்கப்படும்.

பள்ளிப் படிப்பை முடிக்கும் அனைத்து மாணவர்களும் கல்லூரிப் படிப்பை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2030-ஆம் ஆண்டிற்குள் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 90 விழுக்காட்டை எட்டும் வகையில், நிறுவனக் கட்டமைப்பு விரிவாக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகள் குறையும் என்ற நிலையை மாற்றிடும் வகையில், உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அந்தத் துறையில் பயிற்சியளித்து, செயற்கை நுண்ணறிவுத் திறன் பெற்ற மாணாக்கர்களாக அவர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிவுசார் வளர்ச்சியாக இருக்க வேண்டுமெனில், புதிதாக வரும் தொழில்நுட்பங்களில் நம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகத் திகழ வேண்டும். எனவே, மாறிவரும் சூழலில் Quantum Computing, Life Science போன்ற புதிய துறைகளில் ஈடுபடுவதற்கான அடிப்படை அறிவியலில் தேர்ச்சி பெற வேண்டும். இதனைக் கவனத்தில் கொண்டு உயிரியல், வேதியியல், இயற்பியல் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பரிவுகளில் மாணவர்களை ஈர்ப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்கள், உலகளாவிய வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், விளையாட்டு திறன்மிகு மாணவர்களுக்கு, நெகிழ்வான (Flexible) பாடத்திட்டம் மூலம் கூடுதல் கல்வி மதிப்புகள் (Academic Credits) வழங்கப்படும்.

உயர்கல்வி பெறும் மாணவர்கள் ஒவ்வொருவரின் ஆர்வம், திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கான கூடுதல் திறன் பயிற்சிகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். மாறி வரும் காலத்தேவைக்கு ஈடுகொடுக்கும் திறன் மிக்கவர்களாக மாணவர்கள் திகழ்வதற்கான திட்டங்கள் உருவாக்கப்படும்.

உலகெங்கிலும் பணிபுரிந்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை வருகைதரு பேராசிரியர்களாக (Visiting Faculty) வரவழைத்து, அவர்களின் திறனையும் நமது மாணவர்கள் பயன்படுத்தும் வண்ணம் திட்டங்கள் உருவாக்கப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அறிவியல் அறிஞர்களின் பங்கேற்புடன் பன்னாட்டு அறிவியல் மாநாடு நடத்தப்படும்.

தேசிய வரலாற்றுக் கருத்தரங்கம், இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை வரலாறு மற்றும் தொல்லியல்துறை வல்லுநர்கள் பங்கேற்புடன் நடத்தப்படும்.

மாணவர்களின் படைப்பூக்கம் வலுப்பெறும் வகையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு கல்லூரியிலும் ஆண்டுதோறும் விளையாட்டு, கலை, பண்பாட்டு விழாக்கள் முன்னெடுக்கப்படும். மாவட்ட, மாநில அளவுகளிலும் விழாக்கள் நடத்தப்பட்டு சிறந்த பங்களிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழின் தொன்மை, பரிணாம வளர்ச்சி, தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டு வரும் தொடர் மாற்றங்கள் ஆகியவற்றை எடுத்துரைப்பதற்கான விழாக்கள் நடத்தப்படும். நமது வரலாற்றையும், பயணிக்க வேண்டிய பாதையையும், சமூகமாக நாம் பேண வேண்டிய அற விழுமியங்களையும் உள்வாங்கியவர்களாக நமது மாணவர்கள் உருவாகிட இத்தகைய விழாக்கள் பயன்படும்.

பாடத்திட்டங்களில் காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்படும் புதிய மாற்றங்களை உள்வாங்கி மாணவர்களுக்குக் கற்பித்திடும் வகையில், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படும்.

பட்டயக் கணக்காளர் (Chartered Accountant), நிறுவனச் செயலாளர் (Company Secretary) போன்ற படிப்புகளில் அதிக எண்ணிக்கையிலான தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான ஊக்கத்தையும், உதவிகளையும் செய்வதற்கான பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.

நமது அரசுப் பல்கலைக்கழக மாணவர்கள் உலக அளவிலான முன்னணி ஆய்வுகளில் பங்கு பெறுவதை உறுதி செய்திடும் வகையில், நமது பல்கலைக் கழகங்கள் அனைத்தும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து நமது மாணவர்களும், ஆசிரியர்களும் அங்கு பயிற்சி பெறவும், வெளிநாட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் பயிற்சி பெறவும் ஊக்குவித்திடச் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

28. திறன் மேம்பாடு

அனைவரும் அனைத்திலும் திறமை பெற்றவர்களாக, முதன்மையானவர்களாகச் சிறந்து விளங்க வேண்டும் என்ற பரந்து பட்ட எண்ணத்துடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தை உருவாக்கினார்கள். பாடப்புத்தகக் கல்வியைத் தாண்டி, அனைத்துப் பணிகளுக்கும் இளைஞர்களை, மாணவ-மாணவியரை அத்திட்டம் தயார் செய்து வருகிறது.

இதுவரையில் 48 லட்சத்துக்கும் அதிகமான திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, மாணவர்களை அனைத்துத் துறைகளிலும் கூடுதல் திறன்களையும் கொண்டவர்களாக ‘நான் முதல்வன்’ திட்டம் வளர்த்தெடுத்துள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தால் பயன்பெற்ற மாணவர்கள் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். கடந்த காலங்களில், IAS மற்றும் IPS பணிகள் உள்ளிட்ட UPSC நடத்தும் குடிமைப்பணி தேர்வுகளில் தமிழ்நாட்டுக்கான பங்களிப்பு குறைந்து வந்தது. அதனை மாற்றும் வகையில் அரசு வகுத்த திட்டங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

18 வயது முதல் 35 வயதுள்ள, படித்த - வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில், “வெற்றி நிச்சயம்” பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்குரிய பயிற்சித் தொகையினை அரசே முழுவதும் ஏற்கிறது. இப்படி அனைவரையும் தகுதிப்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

உயர்கல்வி மாணவர்கள் திறன் பயிற்சி ஊக்க உதவித்தொகை: தமிழ்நாட்டில் உயர்கல்வி முடித்தபின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் திறன்பயிற்சி மேற்கொள்ள முன்வரும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு 6 மாத பயிற்சி ரூ.1500 உதவித் தொகையுடன் வழங்கப்படும்.

2030-ஆம் ஆண்டிற்குள் 50 இலட்சம் நபர்களுக்குக் கீழ்க்கண்டவாறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்:

அ)

நான் முதல்வன் 2.0 திட்டத்தின்கீழ் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் 25 இலட்சம் மாணவர்கள்.

ஆ)

வெற்றி நிச்சயம் 2.0-கீழ் உயர்கல்வியினை முழுமை செய்யாத வேலைவாய்ப்பினை எதிர்நோக்கி இருக்கும் 5 இலட்சம் இளைஞர்கள்

இ)

5 இலட்சம் இளைஞர்களுக்கு முறையான பணிப்பயிற்சி அல்லது பணியிடக் கற்றல்

ஈ)

14 இலட்சம் நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்), மறுதிறன் பயிற்சிகள் , முறைசாரா கற்றல் மூலம் பெற்ற திறன்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான முறைப்படுத்தும் பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படும்.

3. கீழ்க்கண்ட பகுதிகளில் வளர்ந்து வரும் தொழில்நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப 1 இலட்சம் நபர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.

மாவட்டத்தின் பெயர்

பயிற்சி வழங்கப்படும் பிரிவு

காஞ்சிபுரம், ஓசூர்

மின்சார வாகனங்கள், மின்னணு சாதன உற்பத்தி

தூத்துக்குடி

கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பங்கள்

சென்னை, கோயம்புத்தூர்

டிஜிட்டல் & ஐடி (IT)

கள்ளக்குறிச்சி

காலணித் தொழில்

தூத்துக்குடி, சேலம்

சரக்கு மேலாண்மை (Logistics)

அரியலூர், பெரம்பலூர்

கட்டுமானம்

மதுரை

மருத்துவம் மற்றும் சுற்றுலா

திருச்சி

கனரக உற்பத்தி

சென்னை

செமிகண்டக்டர்

தஞ்சை, நாகை

உணவு பதப்படுத்துதல்

4. வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையின் சவால்களைக் கல்லூரி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், கல்லூரி மாணவர்களின் எதிர்காலத் திறன் (Future Skills) தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கேற்ப செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பாடத்திட்டங்களும், பயிற்சிகளும் உருவாக்கப்படும்.

5. தொழில்நுட்பம் விரைவாக மாறிக்கொண்டே இருக்கும் சூழலில் புதிய திறன்களில் பயிற்சி பெறுவது வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும் தேவைப்படும் ஒன்றாக மாறிவருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு துறைவாரியாகப் புதிய திறன்பயிற்சித் திட்டங்கள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். இளையோர் மட்டுமின்றி அனைவரும் பணிக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் பயிற்சிபெறும் வாய்ப்பு உருவாக்கப்படும். குறிப்பாக, பணியில் இருப்போருக்கு மாலை வேளைகளிலும், வார இறுதி நாட்களிலும் இப்பயிற்சிகள் வழங்கப்படும்.

6. தொழில் பூங்காக்கள், தொழிற்பேட்டைகளில் செயல்படும் தொழில் நிறுவனங்களின் திறன்மிகு தொழிலாளர்களின் தேவைகளை நிறைவு செய்திடும் வகையிலும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையிலும், அப்பகுதிகளில் “ஒருங்கிணைந்த தொழில் திறன் வளாகங்கள்” அமைக்கப்படும். இந்த வளாகங்களில் தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ற அடிப்படையில் பணியாளர்களுக்கு மறுதிறன் பயிற்சி (Reskilling), திறன் மேம்பாடு (Upskilling) பயிற்சிகளும் வழங்கப்படும். இதன் மூலம் உள்ளூர் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், பணிப்பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி பரவலாக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

7. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அதேநேரத்தில் தற்போது இருக்கும் வேலைவாய்ப்புகளின் தன்மையை மாற்றி அமைக்கவும் கூடும். இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ளவும், பயன்படுத்திக் கொள்ளவும் தேவையான உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க, உலகத்தரம் மிக்க உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பெருநகரங்களில் நிறுவப்படும். இது பயிற்சி ஆராய்ச்சி மையமாகவும் செயல்படும். இம்மையத்தில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் உடனுக்குடன் கிடைத்திடும் சூழல் உருவாகும்.

8. ஏஐ ஆற்றல் மிக்க ‘திறன் பதிவேடு’ நிறுவப்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள், படித்து முடித்து வேலைக்கு தயார் நிலையில் உள்ள இளைஞர்கள், கிடைத்த வேலையில் இருந்துகொண்டு தங்களது திறன்களை மேம்படுத்தி உயர் வேலைவாய்ப்புப் பெற விரும்பும் இளைஞர்கள் உட்பட, வேலைசெய்யும் வயதில் உள்ள அனைத்துத் திறனாளர்களின் கல்வித் தகுதிகள், தொழில்துறை சான்றிதழ்கள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டு சாதனைகள் உள்ளிட்ட அனைத்து சுய விவரங்களும் ‘திறன் பதிவேட்டில்’ பதிவு செய்யப்படும். அத்துடன், நிகழ்நேரத் தகவல்கள் அடிப்படையில் அவை உடனுக்குடன் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இதன் மூலம் வேலை அளிப்போரும், வேலை பெறுவோரும் மிகக் குறுகிய காலத்தில் தங்களது நோக்கத்தையும், தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்றிக் கொள்வதற்கான வழிவகை உருவாகும்.

9. தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் உலகளாவிய தொழிற்பயிற்சி சான்று பெறும் வண்ணம் பயிற்றுவிக்கப்படுவர். கல்லூரிக் கல்வி முடிந்த பின்னர் இத்தகைய மாணவர்கள் உலகளாவிய வேலை வாய்ப்புகளில் உயர் ஊதியப்பணி பெறும் வாய்ப்பு உருவாக்கப்படும். இது நான் முதல்வன் 2.0 திட்டம் வாயிலாக செயல்படுத்தப்படும்.

29. செயற்கை நுண்ணறிவு

உலகெங்கும் பல்வேறு அதிர்வலைகளைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வருகிறது. இத்துறையின் தாக்கம் குறித்து ஆரம்பத்திலேயே உணர்ந்தது திராவிட மாடல் அரசு. நம் மாநிலத்துக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியபோதே செயற்கை நுண்ணறிவில் இருந்து காலநிலை அறிவியல் வரை அனைத்தையும் உள்ளடக்கியதாக உருவாக்கினார் முதலமைச்சர் அவர்கள். டிஎன்-ஸ்பார்க் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் அறிவியல் அறிவு ஆகியவற்றுக்கான எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை வளர்க்கும் கல்வியைக் கற்பிக்கும் முன்னோடியாக தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி அமையும் வகையில், புதிய தொழில்நுட்பத்தினை வகுப்பறைக்குள் கொண்டு சென்றுள்ளோம். இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி மற்றும் அதன் போக்குகளை ஆராய்ந்து, வேலையிழப்பு நேரும் துறைகள் எவை என அடையாளம் கண்டு, அத்துறையினருக்கு மாற்றுப் பயிற்சியினை போர்க்கால அடிப்படையில் அளிப்பது சமூகநீதி அரசின் கடமை. இத்தகைய சூழலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிட முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு ‘தமிழ்நாடு ஏஐ பணி 2.0’ செயல்பட வழிநடத்தும்.

செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் புயல்வேக மாற்றங்களை உருவாக்கும் என்ற கணிப்பு இருக்கிறது. நமது பள்ளிகளில் வகுப்பறைகள் இயங்கும் விதமும், மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நோய் கண்டறியும் விதமும், சாலைகளில் இயங்கும் போக்குவரத்து விளக்குகளின் கட்டுப்பாட்டு முறைகளும், வேளாண்மை ஆலோசனைகள் வழங்கும் முறைகளும், நீர் மேலாண்மை தொடங்கி அனைத்து மேலாண்மை முறைகளும் பெரும் மாற்றங்களை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தப் பேராற்றலை ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு மக்களின் நலனை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை உயர்த்தவும், ஏதுவான வழிமுறைகளும், அமைப்புகளும் உருவாக்கப்படும். இந்தப் பேராற்றலைப் பயன்படுத்தத் தேவையான மனிதவள ஆற்றலை உருவாக்குதல் முதல் படியாகும். இதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

அனைத்துப் பட்டப்படிப்பு துறைகளிலும் ஏஐ குறித்த பாடப்பிரிவு இன்றியமையாததாக அமைக்கப்படும். இதன் வாயிலாக அடுத்த மூன்றாண்டுகளில் ஏஐ அறிந்த பட்டம் படித்த மாணவர்கள் 8 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இருப்பார்கள்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பரவலாக இயங்கும் 10 மாவட்டங்களில்

ஏஐ மருத்துவ நிலையங்கள் தொடங்கப்படும். இவை ஜெர்மனியில் செயல்படும் Mittelstand 4.0-Competence Centres மாதிரியில் உருவாக்கப்படும். இதனால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பெரும் முதலீடுகளைச் செய்து சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு, அச்சோதனைகளை பொது வசதி அமைப்புகளான ஏஐ மருத்துவ நிலையங்கள்–இல் செய்து கொள்ளும் வசதி உருவாக்கப்படும்.

ஏஐ தொழில்நுட்பத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்குதல்தான் முதல் படி. நமது மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கவுள்ள ஆசிரியர்களுக்கான ஏஐ பயிற்சி உடனடியாகத் தொடங்கப்படும்.

30. தகவல் தொழில்நுட்பம்

சென்னையில் 1999-ஆம் ஆண்டு, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் டைடல் பார்க் உருவாக்கப்பட்டது. நமது திராவிட மாடல் அரசு தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நிலையினை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் எடுத்துச் சென்றுள்ளது.

கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி, ஓசூர், திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் எல்காட் தொழில்நுட்பப் பூங்காக்களும், சிறு தொழில்நுட்பப் பூங்காக்களும் நிறுவப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இம்மாவட்டங்களில் பயிலும் மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கான மாபெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

2030-ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல், பிளாக்செயின், அனிமேஷன் காட்சி விளைவு - விளையாட்டு - விரிவாக்கப்பட்ட நிழற்பார்வை தொழில்நுட்பங்கள் (AVGC - XR) இயக்கத் தொழில்நுட்பம் (Mobility Tech) மற்றும் மின்சார வாகன மென்பொருள் போன்ற துறைகளில் சிறப்பு புதுமை வளாகங்களுடன் கூடிய ஆறு மண்டல தொழில்நுட்ப வளாகங்கள் உருவாக்கப்படும்.

2030-ஆம் ஆண்டிற்குள் சென்னை நகரத்தை உலகளாவிய அனிமேஷன், காட்சி விளைவு, விளையாட்டு மற்றும் முழுமையான அனுபவத் தொழில்நுட்பங்களின் சிறப்பு மையமாக நிலைநிறுத்தும் நோக்கில் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்த்து, 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

2030-ஆம் ஆண்டிற்குள் 100 ஆழ்தொழில்நுட்ப (Deep Tech) தொடக்க நிறுவனங்களை உருவாக்கவும், வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 6 துறைசார் புதுமை ஆய்வகங்கள் (Sectoral Innovation Labs) நிறுவப்பட்டு, அடுத்த தலைமுறைத் தொழில் முனைவுத்திறன் மற்றும் அறிவுசார் சொத்து உருவாக்கத்திற்குத் தேவையான கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.

Quantam தொழில்நுட்பம் பெருமளவில் வளரும் துறையாக உருவெடுத்து வருகிறது. இந்தத் தொழில் நுட்பத்தில்பயிற்சி பெற Quantam Simulators அமைக்கப்படும்.

31. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை முதலில் உணர்ந்த மாநிலம் தமிழ்நாடு தான். ‘கால நிலை மாற்றம் தான் மானுடத்தின் மிகப்பெரிய சவால்’ என்று முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். காலநிலை மாற்ற நிர்வாகக் குழு முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டது. காலநிலை மாற்றம் குறித்து ஆராய இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும் தான். துறையின் பெயரை “சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை” என்று மாற்றி அமைக்கப்பட்டது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய நான்கு சிறப்புமிக்க இயக்கங்கள் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் காலநிலை உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

காலநிலை மாற்றத்தால் கோடை காலத்தில் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து மக்களைக் காத்திட தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

வெப்ப அலையை மாநிலத்திற்குரிய பேரிடராக அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. இதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலும் மாவட்ட வெப்ப அலுவலர்கள் நியமிக்கப்படுவர். குளிர்விப்பு முகாம்களை இயக்குதல், வட்டார அளவில் வெப்ப எச்சரிக்கைகளை வெளியிடுதல், அவசர மருத்துவ உதவியை ஒருங்கிணைத்தல் மற்றும் வெப்ப நிகழ்வுகளின்போது பணியிடப் பாதுகாப்பை உறுதிசெய்தல் ஆகியவை இந்த வெப்ப அலுவலர்களின் பொறுப்பாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் உள்ளூர் காலநிலை முன்னறிவிப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நுண்மின் வலையமைப்பில் (Micro Grids) தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்படும். இது வட்டார அளவிலான வெள்ளம் மற்றும் புயல் எச்சரிக்கைகள், விவசாயிகளுக்கான வானிலை அறிக்கைகள், துல்லியமான வெப்ப எச்சரிக்கைகள் மற்றும் அந்தப் பகுதிக்கான தகவமைப்புத் திட்டமிடல் (Local Adaptation) ஆகியவற்றை வழங்கும்.

திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கும், மின்பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு நகரத்திலும் தனித்துவமான மின்னூட்ட நிலையங்கள் அமைக்கப்படும். இது நகரின் காற்று மாசுபாட்டைக் குறைப்பதுடன், போக்குவரத்து கரிம வெளியீட்டைக் கட்டுப்படுத்தி, 2030-க்குள் 30% வாகனங்கள் மின்மயமாக்கல் என்ற இலக்கை நோக்கி மாநிலத்தை முன் நகர்த்தும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, கிழக்குத் தொடர்ச்சி மலைப்பரப்பில் வரையறுக்கப்பட்ட வனவிலங்கு வழித்தடங்களில் வெப்ப உணர்விகள் (Thermal Sensors) மற்றும் கேமரா பொறிகளைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்னெச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்படும்.

கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் சவுக்கு, பனை, பூவரசு, புங்கை மற்றும் உள்ளூர் அலையாத்தி வகைகள் போன்ற நாட்டு மரவகைகள் நடப்படும். கடல் அரிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் புயல் தாக்கத்துக்குள்ளான பகுதிகளில் இந்த வனப்பட்டைகள் உருவாக்கப்படும்.

சங்க இலக்கியத்தின் ஐந்திணைப் பாகுபாட்டின் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை மற்றும் நெய்தல் ஆகிய ஐந்து நிலப்பரப்பு உயிர்ப்பூங்காக்கள் தமிழ்நாடு முழுவதும் சூழலியல் ரீதியான பொருத்தமான இடங்களில் நிறுவப்படும்.

காடுகள், மலைகள், ஈரநிலங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள 100 சுற்றுலாத்தலங்கள், சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படாத வகையில் நெறிமுறைகள் மற்றும் சமூக மேலாண்மை அடிப்படையிலான சான்றிதழ் பெற்ற நிலையான சுற்றுலா மையங்களாக உருவாக்கப்படும். அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் விருந்தோம்பல் மற்றும் சூழல் சுற்றுலா மேலாண்மையில் பயிற்சி அளிக்கப்படும்.

பழங்குடி மற்றும் வனவாழ் சமூக உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் வனப்பிரிவுகள் முழுவதும் வனக் காவலர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றுவர். தீ தடுப்பு, வனவிலங்கு கண்காணிப்பு, நாற்றங்கால் மேலாண்மை மற்றும் சீரழிந்த நில மறுசீரமைப்பு ஆகியவற்றில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படும் தமிழ்நாட்டின் தனித்துவமான சிவப்பு மணல் திட்டுகளான தேரி நிலங்கள் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் அறிவியல்பூர்வமாக வரையறுக்கப்பட்டு, பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும்.

தனியார் நிலங்கள், வரப்புகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி மற்றும் மலைவேம்பு போன்ற உயர் மதிப்புள்ள மரவகைகளை பெருமளவில் நடுவது ஊக்குவிக்கப்படும். விவசாயிகளுக்கு மானியத்தில் நாற்றுகள் வழங்குவதுடன், உறுதியான மறு கொள்முதல் ஏற்பாடுகள் செய்யப்படும்.

தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிலைத்தன்மை தரநிலைகளை நிர்ணயிக்க Environmental Social and Governance - ESG கொள்கை கட்டமைப்பு உருவாக்கப்படும்.

பழங்குடி மற்றும் கிராமப்புற சமூகங்களிடமிருந்து இயற்கைச் சாயங்கள், மூலிகைப் பொருட்கள், இயற்கை விளைபொருட்கள், தேன் மற்றும் வனம் சார்ந்த கைவினைப் பொருட்கள் போன்ற சூழல் நட்பு தயாரிப்புகளுக்கான முழுமையான மதிப்புச் சங்கிலிகள் கட்டமைக்கப்படும்.

சூழலியல் ரீதியாக முக்கியமான – ஆனால், புறக்கணிக்கப்பட்ட உயிரினங்களான கழுகுகள், கரடிகள், இருவாச்சிகள், தேவாங்குகள் மற்றும் உள்ளூர் நன்னீர் உயிரினங்களுக்கான ஒருங்கிணைந்த வனவிலங்கு பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்படும்.

தொழிற்சாலைகளில் உருவாகும் அனைத்து கழிவுகளையும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். இதன்மூலம் Circular Economy உறுதி செய்யப்படும்.

32. தொழில் வளர்ச்சி

திராவிட மாடல் 1.0-வில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டுக்குள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் வளர்கிறது என்றால், மாநிலம் வளர்கிறது என்று பொருள். வேலை வாய்ப்புகளின் மூலமாக குடும்பங்கள் வளர்கின்றன; வாழ்கின்றன!

அந்த வகையில் வளர்ச்சியின் அடையாளமாக தொழில் நிறுவனங்கள் திகழ்கின்றன. அதிக முதலீடுகளை ஈர்க்கக் கூடிய உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பினை உருவாக்கக் கூடிய தொழில்களையும் ஈர்த்து, அதன்மூலம், தமிழ்நாட்டினை 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்ற இலக்கோடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டதால்தான் இது சாத்தியமானது.

திறன்மிகு தொழிலாளர்கள் உள்ள மாநிலம், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் என்று பல்வேறு சிறப்பம்சங்களைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.

மாநிலத்தில் பெண்களின் கல்வியறிவும், வேலைவாய்ப்பு விகிதமும், நாட்டின் சராசரியை விட அதிகமாக உள்ளது. நாட்டிலேயே பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதை உலகமே அறியும். உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

130-க்கும் மேற்பட்ட ‘Fortune 500’ நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளதும் தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்புத் திறனுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

ரூ. 18 இலட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் 50 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டின் ஏற்றுமதி

120 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பிடிக்கும். தமிழ்நாடு, இந்தியாவின் முதன்மையான பொருளாதாரமாக உருவாகும்.

“Make In Tamil Nadu” ஒவ்வொரு மாவட்டத்திலும் உயிர்பெற, மாவட்டந்தோறும் நவீன தொழிற்பூங்கா, ஒரு சிறப்பு தொழில் தொகுப்பு, பொது வசதி மையம் ஆகியவை இருப்பது உறுதி செய்யப்படும்.

மின்னணுவியல் துறையில், மதிப்புக் கூட்டல் ஐந்து மடங்காக அதிகரிக்கப்படும். தமிழ்நாடு, மின்னணு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மையமாக உருவெடுக்கும்.

தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 5 இலட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் இரண்டு இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

2030-ஆம் ஆண்டிற்குள் சென்னை நகர் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் வலுவான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள் நிறுவப்படும். மேலும், நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான கூடுதல் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகளின் மூலம் 2 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, மாவட்டங்களின் சமநிலை வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

முன்னணி தொழில்நுட்பங்களை தொழில் முனைவோர் இலகுவாகப் பெற்றிடும் வகையில் தொழில்நுட்ப அறிவுசார் சொத்துரிமை நிதி ஒன்று நிறுவப்படும். உலகளாவிய அறிவுசார் சொத்துகளைப் பெற்று உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உரிமம் வழங்கி, தொழில்நுட்ப முன்னேற்றத்தை உறுதி செய்வோம். இதனால் தொழில்துறையின் போட்டித்திறன் மேம்படும்.

உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres – GCC): 500 புதிய உலகளாவிய திறன் மையங்களை அமைத்து தமிழ்நாட்டை இந்தியாவின் GCC தலைநகராக 2030-க்குள் உருவாக்குவோம். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரப் பகுதிகளில், பரவலாக இம்மையங்களை அமைப்பதற்குத் தேவையான வசதிகளும், கட்டமைப்புகளும் உருவாக்கித் தரப்படும்.

தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தி செய்வதற்கான சூழலை ஏற்படுத்துவதன் மூலம் ரூ.50,000 கோடி அளவிற்கான முதலீடுகள் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்புத் (Defence) துறையில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிலம், வான், கடல் வழி பாதுகாப்புக் கருவிகளைக் கோயம்புத்தூரில் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும்.

விண்வெளித் தொழில்நுட்பம், விமானங்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு மையம், இரயில் கட்டுமானம், கப்பல் கட்டுமானம், தொழிற்சாலைகளுக்கான இயந்திரவியல் (Robotics) ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம், ஆளில்லா விமானம், மின் ஆற்றல் சேமிப்பு போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த புதிய தொழில்களை முன்னிலைப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்து, இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

உலக நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களை முழுமையாக பயன்படுத்தி ஏற்றுமதிக்கான வாய்ப்பு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.250 கோடியில் ‘ஏற்றுமதி உட்கட்டமைப்பு நிதியம்’ உருவாக்கி, ஏற்றுமதி விரிவாக்கத்திற்கு தேவையான திறன் மேம்பாட்டு மையங்கள், NABL அங்கீகாரத்துடன் கூடிய தரக் கட்டுப்பாட்டு சோதனைக் கூடங்கள், ஏற்றுமதி கிடங்குகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

‘ஏற்றுமதி பிரிவு’ (Export Cell) உருவாக்கி, ஏற்றுமதிக்குண்டான வாய்ப்புகள் குறித்தும், அது தொடர்பான தகவல்களை அளித்தும் புதிய ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்போம்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களைத் தீவிரமாகச் சந்தைப்படுத்துவதற்கு ‘Product of Tamil Nadu’ வர்த்தகக் குறியீட்டை (Brand) உருவாக்குவோம்.

தமிழ்நாடு தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும், உற்பத்தித் திறனிலும் முன்னோடி மாநிலமாக வேகமாக முன்னேறி வருகிறது. இங்கே உற்பத்தியாகும் பொருட்களை உலக அளவில் சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து ஏற்றுமதியைப் பன்மடங்கு பெருக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளில் வர்த்தகத் தொடர்புகளுக்காக TN Trade Office அமைக்கப்படும்.

சிப்காட் நீலப் பொருளாதாரப் பூங்காக்கள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட கடலோரப் பகுதிகளில் SIPCOT நீலப் பொருளாதார பூங்காக்கள் உருவாக்கப்படும்.

SIDCO தொழிற்பேட்டைகளில் தேவைப்படும் இடங்களில் Common Facility Centre அமைக்கப்படும். அங்கு 3D Printing, Testing வசதிகள் உருவாக்கப்படும்.

தொழில் தொடங்க முதலீடுகளை ஈர்க்கும் போது எவ்வளவு முதலீடு என்பது ஒரு புறமிருக்க எத்தனை புதி வேலை வாய்ப்புகள் எங்கு உருவாக்கப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்தியது திராவிட மாடல் அரசு. இதே நடைமுறையை பின்பற்றி புதிய முதலீடுகளை தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று வேலை வாய்ப்பையும் பரவலாக்கிட உறுதி கூறுகிறது தி.மு.க. இதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50,000 புதிய வேலைகளை தொழில்துறை வாயிலாக உருவாக்க உறுதி கூறுகிறது தி.மு.க.

உற்பத்தித்துறையில் மட்டும் கவனம் செலுத்தாது சேவைத்துறையிலும் கவனம் செலுத்தப்படும். இவை இரண்டின் சரியான கலவையே தொழில்துறையின் துரித வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டல் தொழில், குளிர் கிடங்குகள், கிட்டங்கிகள், பொருள் உற்பத்தி, தோல் அல்லாத காலணி உற்பத்தி, ஆயத்த ஆடைகள், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மருந்துச்சேவை, Light Engineering Assembly போன்ற துறைகளில் தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 33 சிப்காட் தொழிற்பூங்காக்கள் துவக்கப்பட்டு 31 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, வரும் 5 ஆண்டுகளில் தொழில்துறை கூடுதலாக வளர வேண்டிய பகுதிகளையும் உள்ளடக்கி 50 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் துவங்கப்படும்.

நமது விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வருவாயை பெருக்கிடும் வண்ணம் இறைச்சி, மீன் ஆகியவற்றின் ஏற்றுமதியை அதிகரித்திட சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

தொழில்துறை முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் போது, அந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் வேலை தேடுவோருக்கு சென்றடைய வேண்டும். அதே வேளையில் வேலைக்குப் பணியாளர்களைத் தேடும் நிறுவனங்களையும், இளைஞர்களையும் இணைக்கும் வகையில், தொழில்துறையினால் ஒரு ‘Skill Matching Portal’ உருவாக்கப்படும். இதன் மூலம் தகவல் இடைவெளியின்றி இளைஞர்களின் விபரத்தை நிறுவனங்கள் அறிந்து கொள்ளும். அதுமட்டுமின்றி எந்தெந்த திறமைகள் தேவை என்பதை வேலை தேடுவோர் ஒரே இடத்தில் அறிந்து கொள்வதும் எளிமையாகும்.

புதிதாக வளர்ந்து வரும் தொழில்களில் (Sunrise Sectors) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Research and Development) ஊக்குவிக்க ரூ.100 கோடி நிதி உருவாக்கப்படும்.

கடலோரப்பகுதியில் கடல்நீரிலிருந்து நன்னீராக்கும் ஆலைகள் உருவாக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜவுளித் தொழில் குழுமங்கள் உள்ள பகுதிகளில் சாயக்கழிவு நீரை நன்னீராக்கும் அமைப்புகளை உருவாக்கி செயல்படுத்திட ஒரு Viability Gap Fund – VGF ஏற்படுத்தப்படும். இதன் வாயிலாக அப்பகுதியில் வளம் குன்றாமல் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

தொழில்துறையினரின் தேவைக்கான தரப்பரிசோதனை ஆய்வகங்கள் (Advanced Quality Testing labs) அமைக்கப்படும்.

Additive manufacturing and metallurgical lab ஒன்று சென்னை தரமணியில், IIT சென்னையுடன் இணைந்து ஏற்படுத்தப்படும்.

சிப்காட் மூலம் 10 பெரிய தொழிற்பேட்டைகள் (Mega Plug and Play Parks) அமைக்கப்பட்டு தொழிற்சாலைகள் உற்பத்தியை உடனடியாக துவங்குவதற்கு ஏதுவாக அனைத்து கட்டமைப்புகளும் (Plug And Play) உருவாக்கப்படும்.

33. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-ஆவது இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில், சுமார் 40.56 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டிலுள்ள மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 9.4 விழுக்காடு ஆகும். கடந்த ஐந்தாண்டுகளில் இந்நிறுவனங்களுக்கு 10.7 லட்சம் கோடி கடனுதவி தரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

எம்எஸ்எம்இ துறைதான் அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் திறனுள்ள துறையாகும். இதனைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்படும் எம்எஸ்எம்இ குழுமங்களை நவீனப்படுத்த சிறப்புக் கவனம் செலுத்தப்படும். புதிய தொழில்நுட்பங்கள் மேம்பாட்டு மானியம் வழங்கி இத்துறை விரைந்து வளரவும் வலுப்பெறவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

மாறிவரும் தொழில்நுட்பத்தை எம்எஸ்எம்இ துறையில் இயங்கும் நிறுவனங்களும் கைக்கொள்ளும் வண்ணம் அதற்கான ஆலோசனைகள் வழங்கவும் பயிற்சி அளித்திடவும் ஒவ்வொரு குழுமத்திலும் (தொகுப்பு) பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

மாநிலத்திலுள்ள மேலும் தொழில்மயமாக வேண்டிய மாவட்டங்களில் வாழ்வாதார மையங்கள் அமைக்கப்படும். இவை வேளாண் அல்லாத உற்பத்தியில் (கயிறு தயாரித்தல், பனை ஒலை பொருட்கள், அப்பகுதிக்கான சிறப்புச் சிற்றுண்டிகள் தயாரித்தல், பால் பொருட்கள் போன்றவை) சிறப்புக் கவனம் செலுத்தும். இம்மையங்கள் பெண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர்களில் ஆர்வமும், திறனும் அமையப்பெற்றவர்கள் தொழில்தொடங்க முனையும்போது அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள், கடன் உதவி, மூலப் பொருள்களைப் பெற வழிவகை போன்ற சேவைகளை வழங்கும்.

தமிழ்நாட்டிலுள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களை உலக அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிகத் தளம் உருவாக்கப்படும். விற்பனைக்கான பொருட்களின் டிஜிட்டல் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தலை ஏதுவாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எம்எஸ்எம்இ நிறுவனங்கள் ஆண்டுதோறும் உலகளவில் புகழ்பெற்ற வர்த்தக மாநாடுகளில் பங்குபெற ஏற்பாடு செய்யப்படும். சீனாவில் நடைபெறும் கான்டன் வர்த்தகக் கண்காட்சி போன்ற உலகளவிலான சந்தை நிகழ்வுகள் நடத்தப்பட்டு தமிழ்நாட்டின் எம்எஸ்எம்இ பொருள்கள் காட்சிப்படுத்தப்படும். இதன் வாயிலாக வர்த்தக வாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படும்.

நீலகிரி தேயிலை, ஈரோடு மஞ்சள், கிருஷ்ணகிரி மாம்பழம் போன்ற தனித்துவமான பொருட்களுக்கென்று, தனித்தனி வணிகக்குறிகள் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.

எம்எஸ்எம்இ பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மண்டல அளவில் சோதனை தரச்சான்று மையங்கள் நிறுவப்படும். இத்தகைய மையங்கள் தமிழ்நாட்டின் பிற தொழில் குழுமங்களுக்கும் தனியார் – அரசு கூட்டு முயற்சியில் விரிவுபடுத்தப்படும்.

‘தமிழ்நாடு ஜிஐ மிஷன்’ என்ற தனி இயக்கம் ஏற்படுத்தப்படும். இது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜிஐ சாத்தியமுள்ள பொருட்களைக் கண்டறிந்து, உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டி, ஜிஐ அங்கீகாரம் பெற்றுத் தரும்.

வரும் 5 ஆண்டுகளில் 5 இலட்சம் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படும். ஒரு லட்சம் மகளிர் உட்பட மொத்தம் 2 இலட்சம் தொழில்முனைவோர் உருவாக்கப்டுவார்கள்.

கிராமப்புற கைவினைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுடுமண் சிற்பம், மரச்சிற்பம், கயிறு மற்றும் மூங்கில் போன்ற துறைகளில் 50 கிராமப்புறக் குழுமங்கள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் துறை சார்ந்த அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள உணவு பதப்படுத்துதல் குழுமங்கள் கள்ளக்குறிச்சி, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், கயிறு சார்ந்த குழுமங்கள் தென்னை அதிகம் விளையும் மாவட்டங்களிலும் வரும் 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் வாகன உதிரி பாகங்கள், தோல், மருந்து, மின்னணு, IT/ITES, பட்டு மற்றும் துல்லிய பொறியியல் உற்பத்தி போன்ற குழுமங்கள் கண்டறியப்பட்டு அதற்கேற்ப பொது வசதி மையங்கள் உருவாக்கப்படும். மேலும், சென்னையை ஒட்டிய பகுதிகளில் கருவிகள் குழுமம், திருவள்ளூரில் வாகன உதிரி பாக உற்பத்தி குழுமம், உணவு பதப்படுத்தும் குழுமம் மற்றும் இயந்திரத் தயாரிப்புக் குழுமம் ஆகிய குழுமங்களுக்கு பொது உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் மதிப்புக் கூட்டல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் போன்ற சவால்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கேற்ப பொருத்தமான குழுமங்கள் பொது பயன்பாட்டிற்கு அமைக்கப்படும். மேலும் நாமக்கல்லில் ஐவுளிக் குழுமம், தருமபுரியில் பேக்கிங் குழுமம் ஆகியவற்றிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தில் தொழில் வாய்ப்புகளைக் கண்டறிந்து தேவையின் அடிப்படையில் புதிய பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்படும். மேலும் திருவண்ணாமலையில் பட்டு நெசவு தொழிலுக்கு பொது உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

கடலூரில் தென்னை நார் உற்பத்திக்கும் கள்ளகுறிச்சியில் அரிசி ஆலை மற்றும் மரவேலைப்பாடுக்கும் குழுமம் உருவாக்கப்படும்.

நாகப்பட்டினத்தில் ஆபரணம், மயிலாடுதுறையில் அட்டைப்பெட்டி தயாரிப்பு, புதுக்கோட்டையில் இயந்திரத் தயாரிப்பு, திருவாரூரில் விவசாயப் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றுக்கு குழுமம் உருவாக்கப்படும்.

மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் உணவு பதப்படுத்துதல் மற்றும் பூட்டு உற்பத்தி ஆகிய தொழில்களின் தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப குழுமங்கள் அமைக்கப்படும்.

விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் பசுமைப் பட்டாசு உற்பத்தி ஊக்குவித்தல், அச்சிடுதலில் டிஜிட்டல் மாற்றம் மேற்கொள்ளுதல், உப்பு உற்பத்தியில் தரச் சிக்கல்கள் நீக்குதல் போன்ற தேவைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

திருநெல்வேலியில் வாழை நார் பொருட்கள் உற்பத்தி குழுமம் உருவாக்கப்படும்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் ஒருங்கிணைந்த பெருங்குழுமம் அமைக்கப்படும் மற்றும் பணியாளர்கள் தங்குவதற்கான தங்கும் விடுதி அமைக்கப்படும்.

ஆம்பூரில் ரூ.40 கோடி மதிப்பில் தோல் குழுமம் நிறுவப்படும்.

சென்னை சுற்றுச்சாலையை (CPRR - Chennai Peripheral Ring Road) ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு, ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.

மூலப்பொருளான தென்னை நார் ஏற்றுமதி மையயமாகத் தமிழ்நாடு உள்ள நிலையிலிருந்து மாற்றி, உலகளாவிய உயர் மதிப்பு கொண்ட தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி மையமாக உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உற்பத்தியைப் பரவலாக்கி, பதப்படுத்தல், கட்டமைப்பை வலுப்படுத்தி முருங்கை, மிளகாய், அரிசி, வாழை, மாம்பழம், தேங்காய், கடல் மீன், கொய்யா, தக்காளி, முந்திரி மற்றும் நிலக்கடலை ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த (Value Chain) மதிப்புச் சங்கிலிகள் உருவாக்கப்படும்.

உயர் மதிப்பும் - குறைந்த அளவும் (High Value Low Volume) உள்கட்டமைப்பை பொது-தனியார் கூட்டாண்மை (PPP) ஊக்குவித்து, 500 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பயனடையும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

34. புத்தொழில்

திராவிட மாடல் அரசு புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்த வாய்ப்புகள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் திட்டமிட்டது. அதனால் அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட ஆறு மடங்கிற்கும் அதிகமாக புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக ஒன்றிய அரசு தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறந்த புத்தொழில் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் 2018 ஆம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, நான்கே ஆண்டுகளில் பல படிகள் முன்னேறி 2022 ஆம் ஆண்டு முதல் இடத்துக்கு உயர்ந்தது. “ஸ்டார்ட்அப் ஜீனோம்” அமைப்பு வெளியிட்ட “உலகளாவிய புத்தொழில் சூழமைவு அறிக்கை 2024’’-ன்படி சிறந்த புத்தொழில் சூழமைவு கொண்ட இடங்களில், ஆசிய அளவில் 18-வது இடத்தில் சென்னை உள்ளது. நிதி ஆயோக்கின் கீழ் செயல்படும் அடல் இன்னோவேஷன் மிஷன் அமைப்பானது புத்தாக்க சூழமைவு சிறப்பாக உள்ள மாநிலங்களில் முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை அங்கீகரித்துள்ளது.

புத்தொழில் நிறுவனங்களின் முதலீடு திரட்டும் திறன் 2016 ஆம் ஆண்டு 1 மில்லியன் டாலராக இருந்தது. இப்போது 6 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என இன்க் 42 அறிக்கை தெரிவிக்கிறது. இது தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பெரு நகரங்களைத் தாண்டி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் 11 வட்டார மையங்களை அமைக்கப்பட்டு உள்ளது. இதுதான் இந்த சாதனைகளுக்கு அடிப்படை ஆகும். இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

தமிழ்நாட்டின் இளைஞர்கள் படித்தபின் வேலையில் அமர்வது மட்டுமல்லாது, அவர்களது கூர்த்த மதியினால் தம்மைச் சுற்றியுள்ள ஏதாவது ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாண முடியும் என்று தோன்றும் தருவாயில் அந்தக் கருத்தை புதிய தொழிலாக வளர்த்தெடுக்கத் தேவையான பயிற்சியை வழங்குவதற்கு மாவட்டம் தோறும் புத்தொழில் பயிலரங்கங்கள் தோற்றுவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களைச் செயற்கை நுண்ணறிவுத்துறையில் ஈடுபடச்செய்து, பிற துறைகளுக்குத் தேவையான நுண்ணறிவு சேவைகளை வழங்கும் திறன் உருவாக்கப்படும். குறிப்பாக, தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு பரவலாகும் போது, திசை தெரியாமல் தடுமாறுவதிலிருந்து காப்பதற்கு இம்முயற்சி பயனுள்ளதாக அமையும்.

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வேளாண்மையை மட்டுமே நம்பி இயங்கும் சூழலை மாற்ற, அங்கிருக்கும் ஆதாரங்களைக் கொண்டு புத்தொழில்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊரகப்பகுதிகளில் 5000 புத்தொழில்கள் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் என உயர்கல்வி வளாகங்களில் புத்தொழில் மையங்கள் அமைக்கப்படும். புத்தொழிலில் ஈடுபட ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனைகளை வழங்கி, கரம்பிடித்து தொழில் பயிற்றுவிக்கவும் இந்த மையங்கள் உதவும். இத்தகைய மையங்களின் செயல்பாடுகளால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு இலட்சம் மாணவர்களை புத்தொழில்களில் ஈடுபடுத்த தயார் செய்ய இயலும்.

புத்தொழிலுக்கான கருத்துரு எவருக்கும் தோன்றலாம். படித்து முடித்து ஏற்கனவே பணியில் இருப்போர், தொழிலாளர்கள் புத்தொழில் தொடங்க முயலலாம். இவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கும் வண்ணம் சமுதாய அளவில் புத்தாக்க தொழில் மையங்கள் உருவாக்கப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் 200 புத்தொழில் நிறுவனங்கள் பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களோடு இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் நடத்தி வரும் சிறுதொழில் நிறுவனங்களை புத்தொழில் நிறுவனங்களாக வளர்த்தெடுக்க இந்த நிதியம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை மானியம் வழங்கும். இந்த நிதியத்திற்கு தேவையான மூலதனத்தை மாநில அரசு வழங்கும். அடுத்த ஐந்தாண்டுகளில் பெண்கள் தொடங்கும் 500 புதிய புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.

ஏஐ துறையில் துவக்கப்படும் புத்தொழில்களுக்கு ஜிபியு கணக்கீட்டு வரவு வழங்கப்படும்.

35. திருக்கோவில் திருப்பணிகள்

திராவிட மாடல் ஆட்சியில் பக்தர்கள் மனம் குளிரும் வகையில் சிறப்பான திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

4,430 திருக்கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 1066 திருக்கோவில்களுக்குச் சொந்தமான ரூ.8 ஆயிரத்து 455 கோடி மதிப்பீட்டிலான 8,148 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 3 ஆயிரத்து 444 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. 12,931 திருக்கோவில்களில் ரூ. 8,100 கோடி மதிப்பிலான 29,479 திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோவில்கள் ரூ. 560 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 92 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள 5 ஆயிரம் கோவில்கள் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள 5 ஆயிரம் கோவில் திருப்பணிகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஒருகால பூசைத் திட்டத்திலுள்ள 18,000 திருக்கோவில்களின் அர்ச்சகர்களுக்கு முதல்முறையாக மாதந்தோறும் ரூ.1,000 மாத ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. பெரிய திருக்கோவில்களுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்யப்படும்.

திருக்கோவில்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 10 கோடி, ரூபாய் 25 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

தற்போது 770 திருக்கோவில்களில் நடைபெற்று வரும் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம், மேலும் 50 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

ஆயிரம் கிராம தெய்வத் திருக்கோவில்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பழமை வாய்ந்த திருக்கோவில்கள் கண்டறியப்பட்டு ஆண்டுதோறும் ரூ.100 கோடி செலவில் திருக்கோவில்கள் தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாக்கப்படும்.

தற்போது 14 திருக்கோவில்களில் நடைபெற்று வரும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம், பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் நாட்களில் மேலும் 10 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

இடவசதி உள்ள பெரிய திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான முறையில் மன ஒருமைப்பாட்டுடன் வழிபாடு செய்ய தியான மண்டபங்கள் அமைக்கப்படும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

பக்தர்கள் அதிகளவு கூடும் திருக்கோயில்களில் போதுமான சுகாதார வசதிகள், ஓய்வறைகள், குடிநீர் மற்றும் தரமான உணவு தடையின்றி கிடைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்படும்.

கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் எளிதில் தரிசனம் செய்ய ‘தனி வரிசை’ (Priority Queue) வசதி ஏற்படுத்தப்படும்.

அனைத்துத் திருக்கோயில்களிலும் முறையான கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

அனைத்துத் திருக்கோயில் திருக்குளங்களிலும் தூர்வாரி நீர் சேகரிப்பு அளவு உயர்த்தப்படும்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 2800-க்கும் மேற்பட்ட இளைய தம்பதிகளுக்கு, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70,000 மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. மேலும், கூடுதல் நிதியுடன் 5000 திருமணங்கள் இத்திட்டத்தின்கீழ் நடத்தப்படும்.

அதிகளவில் பக்தர்கள் வருகை தரும் திருக்கோயில்களில் தேவையின் அடிப்படையில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

36. சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள்

அதிகளவு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த மாநிலமாக இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்சி காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 கோடியாக இருந்த நிலையில் திராவிட மாடல் ஆட்சியில் 31 கோடியாக அதிகரித்துள்ளது. சுற்றுலாத் துறை மூலமாக தமிழ்நாட்டில் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்டங்கள் தீட்டப்பட்டது. தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 300-க்கும் மேற்பட்ட புதிய சுற்றுலா மையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை நமது தொல்லியல் கள ஆய்வுகளின் முடிவுகள் உலகிற்கு நிறுவியுள்ளன. இதனால், தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் மரபின் மீதான ஆர்வம் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது. எனவே, தமிழ்நாட்டின் தொன்மையை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நேரில் சென்று அறிந்து கொள்வதுடன், கண்டுகளிக்கும் வகையிலும் தொல்லியல் சிறப்பு மிக்க மையங்களில் பண்பாட்டுச் சுற்றுலாத் தொகுப்புத் திட்டம் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டின் பத்து முதன்மைச் சுற்றுலாத் தலங்களிலும் 100 அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களிலும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

சுற்றுலா மாநாடு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு இத்துறையில் முதலீடுகள் ஈர்க்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா ஆபரேட்டர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற விருந்தோம்பல் துறையில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களின் சேவைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரம்பரியச் சுற்றுலா, சூழலியல் சுற்றுலா, நலச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா என சுற்றுலாப் பயணிகளின் குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப புதிய சுற்றுலா வழித்தடங்கள் உருவாக்கப்படும்.

கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் கருத்தரங்கச் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

சுற்றுலாத்துறையில் புதிய சேவைகளை வழங்கி வரும் கேரவன் வாகனச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் முக்கியச் சுற்றுலாப் பகுதிகளில் அவற்றிற்கான சிறப்பு வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

37. விளையாட்டு மேம்பாடு

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கொள்கையுடன் அனைத்துத் திட்டங்களையும் தீட்டிச் செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு, விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாட்டின் எளிய சமூகப் பின்னணியைச் சேர்ந்த இளைய தலைமுறையினரை, உலகளாவிய போட்டிகளில் பங்கெடுத்திட ஊக்கமளித்திடும் வகையில் உன்னதத் திட்டங்கள் பலவற்றைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட், உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப், ஸ்குவாஷ் உலகக் கோப்பை, முதலமைச்சர் கோப்பை, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி, உலக அலைச்சறுக்கு லீக் QS 3000, HCL சைக்ளோத்தான், சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள், ATP சேலஞ்சர் 100 உலக ஆண்கள் டென்னிஸ் போட்டி, தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட், முதலமைச்சர் கோப்பை, சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர், 76-ஆவது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இது உலகத்தின் கவனத்தை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கும் வகையில் நடத்திக் காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் இதுவரை 680 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ. 17 கோடி அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வீரர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று 174 பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்குப் புகழ் தேடித் தந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

திராவிட மாடல் 1.0 அரசு 19 உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, தமிழ்நாட்டை உலக விளையாட்டு வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்தது. இதனைத் தொடர்ந்து தொய்வில்லாது நடத்தி, தமிழ்நாட்டில் அனைத்து விளையாட்டுகளும் தழைத்தோங்குவது உறுதிசெய்யப்படும்.

விளையாட்டுத்துறையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களுக்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் உண்டு உறைவிட விடுதிகளில் (Sports Hostels) உள்ள விளையாட்டு வீரர்களின் அறைகள் குளிரூட்டப்பட்ட அறைகளாக மேம்படுத்தப்படும். இந்தக் கூடுதல் வசதி செய்து தருவதன் மூலம் அவர்கள் பயிற்சிகளில் சிறப்பாக ஈடுபட்டு திறமைகளை மேலும் வளர்ப்பதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பதற்கும் உதவும்.

வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவித்திடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.

செஸ் விளையாட்டில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில், மேலும் நூற்றுக்கணக்கான செஸ் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் வகையில் மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்’ அமைக்கப்படும்.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 5 கோடி ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 2 கோடி ரூபாயும் வழங்கப்படும்.

ஒலிம்பிக் தனிநபர் போட்டிகளில் பங்குபெறத் தகுதிபெறும் வீரர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், குழுப் போட்டிகளில் பங்குபெறத் தகுதி பெறுவர்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்படும்.

அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உலகத் தரத்திலான 400 மீட்டர் Synthetic தடகள ஓடுதளங்கள் அமைக்கப்படும்.

கூடைப்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன், தற்காப்புக் கலை, வாள்வீச்சு விளையாட்டுகளுக்கான பல்நோக்கு வசதிகொண்ட உள்விளையாட்டு அரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதை உறுதி செய்யப்படும்.

இளைஞர்களின் விளையாட்டுப் பங்களிப்பினை ஊக்கப்படுத்திடும் வகையில் ஒலிம்பிக் தரத்திலான ஸ்கேட்டிங் பூங்காக்கள் நிறுவப்படும்.

நீச்சல் விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்கள் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளைப் பெற்றிடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நீச்சல் குளங்கள் அமைக்கப்படும்.

சிலம்பம், களரிப்பயற்று, மல்லர்கம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள், குத்துச்சண்டை, கராத்தே, டேக்வாண்டோ, ஜூடோ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளுக்கான பயிற்சிக் கூடங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்படும்.

இளம் குழந்தைகளின் விளையாட்டுத் திறமைகளை இளம் வயதிலேயே கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு ஆயத்தப்படுத்திடவும் 8 வயதுக்குட்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்டவர்கள் என வயது வாரியாக சிறுவர்களுக்கான போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுவதுடன் நீண்ட கால செயல்திட்டங்களும் உருவாக்கப்படும்.

தற்போது நடத்தப்படும் “இது நம்ம ஆட்டம்” திட்டம் மாநிலம் முழுவதும் மேலும் விரிவாக்கப்படும்.

கிராமப்புற மக்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்திட அனைத்து ஊராட்சிகளிலும் கட்டமைப்புடன் கூடிய விளையாட்டுக் குழுக்கள் நிறுவப்படும்.

SDAT விளையாட்டு விடுதிகளில் தங்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகள் நடத்துவதன் மூலமாகவும், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் மூலமாகவும் தமிழ்நாட்டை முதன்மை விளையாட்டு சுற்றுலா மையமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசு கூர்நோக்கு இல்லங்களில் உள்ளவர்களை விளையாட்டின் மூலம் நெறிப்படுத்தும் வகையில் அனைத்து கூர்நோக்கு இல்லங்களிலும் விளையாட்டுக் கட்டமைப்பினை ஏற்படுத்தி அவர்களுக்கென சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

38. கால்நடை வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு

உழவர்களின் நண்பனாகவும், வேளாண் பணிகளுக்கு உறுதுணையாகவும், வேளாண் தொழிலில் கூடுதல் வருவாயும் கொடுக்கும் கால்நடைகளின் பராமரிப்பிற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனப் பயிர் விதைகள், புல்நறுக்கும் கருவிகள், சிறிய நாட்டுக்கோழிப் பண்ணைகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, 26 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இம்முகாம்கள் மூலம் 2 கோடியே 41 இலட்சம் கால்நடைகள் பயனடைந்துள்ளன. ஒரு இலட்சத்து 63 ஆயிரம் கறவை மாடுகளுக்கு காப்பீட்டு வசதி வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

கால்நடைகள் எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம்.

அனைத்து வட்டாரங்களிலும் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் அமைக்கப்படும். இதன்மூலம் செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பில் அதிக அளவிலான விவசாயிகள் ஈடுபட்டு வருவாய் ஈட்டி பயனடைவர். ஆடுகளின் எண்ணிக்கையும் அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்படும்.

வேளாண் பெருங்குடி மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறும் வண்ணம் கூட்டுறவு வங்கிகள் வாயிலாகப் புதிய கறவை மாடுகள், ஆடு, நாட்டுக்கோழி, பன்றி, வாத்து முதலான கால்நடைகளை வாங்க, தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் மூலதனக் கடன் ரூ. 250 கோடியிலிருந்து ரூ. 1,000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், கால்நடைகளைப் பராமரிக்க தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் பராமரிப்புக் கடன் ரூ. 3,000 கோடியிலிருந்து ரூ. 5,000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

கோழி வளர்ப்புத் தொழில் ஆலோசனைகளை வழங்கிட ஒருங்கிணைந்த கோழி வளர்ப்பு மையம் உருவாக்கப்படும்.

பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை உயர்த்திடும் வகையில் அதிக பால் வழங்கக் கூடிய எருமை வளர்ப்பு மையங்கள் அமைத்து இனப்பெருக்க மேலாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்தி, அவற்றின் எண்ணிக்கையை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.

தமிழ்நாட்டின் வேளாண் பெருங்குடி மக்களின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு கால்நடைகளை வளர்ப்பதில் இருந்து பெறுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கால்நடை வளர்ப்பில் தீவனச் செலவு குறிப்பிடத்தக்கது என்பதால் செறிவான தீவனங்கள் போதுமான அளவில் கிடைத்தால் உற்பத்தி பெருகும். இதனை உறுதிசெய்திட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு உரிய பயிற்சி அளித்து, தகுந்த இடுபொருட்கள், தேவைப்படும் கடன் ஆகியவை கிடைக்க வழிசெய்து தீவன உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

தீவன உற்பத்திக்கான அலகுகளை நிறுவுதல், ஒரு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பை தீவன சாகுபடியின்கீழ் கொண்டு வருதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பசுந்தீவன உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை உறுதி செய்வோம்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக மாற்றப்படும்.

நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுகாதாரமான முறையில், ஏற்றுமதிக்கு உயரிய தரத்தில் இறைச்சிக் கூடங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பது உறுதி செய்யப்படும்.

தெருநாய்களால் பொதுமக்கள் அல்லலுறும் சூழல் நிலவுகிறது. இதனைக் கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்திடும் திட்டத்தை முழுவதுமாகச் செயல்படுத்த, கூடுதல் எண்ணிக்கையில் கால்நடை மருத்துவர்களை இப்பணியில் ஈடுபடுத்தி தெருநாய்களுக்கு கூடுதல் காப்பகங்கள் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிறுவி, சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் அச்சமின்றி நடமாடும் சூழல் உருவாக்கப்படும்.

39. பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாடு

திராவிட மாடல் ஆட்சி அமைந்த அன்றே ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் வழங்குவது தமிழ்நாட்டில் தான். அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கும் பல்வேறு நன்மைகளைச் செய்து தந்துள்ளோம். பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் பொருட்களை மின்னணு மூலமாக விற்பனை செய்ததில் இந்திய அளவில் இரண்டாவது இடம் என்ற பரிசை திராவிட மாடல் அரசு பெற்றுள்ளது. அரசு எடுத்த முயற்சியின் காரணமாக இந்தியாவில் பால் உற்பத்தியில் ஆறாவது இடத்துக்கு தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

பால் உற்பத்தியாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைக்கும் வண்ணம் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 5 உயர்த்தப்படும்.

ஆண்டுக்கு 1000 சிறிய பால்பண்ணைகளை உருவாக்கிட, அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 பால் பண்ணை தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும்.

ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் அனைத்து ஆவின் பால் பண்ணைகளும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களுடன் மேம்படுத்தப்படும். இதனால் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை அதிகரிப்பதுடன், நுகர்வோரும் பயன் பெறுவர்.

தேவையான கிராம ஊராட்சிகளில் பால் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்குவதுடன், அனைத்து பால் கூட்டுறவு சங்கங்களும் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கறவை மாடுகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தவும், நோயின் தாக்கத்தைக் குறைக்கவும், உற்பத்தித் திறனை உயர்த்தவும், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு தாது உப்பு கலவை ஒரு மாத்திற்கு ஒவ்வொரு கருவுறும் மாட்டிற்கும் ஒரு கிலோ வீதம் 50 விழுக்காடு மானியத்தில் ஓராண்டிற்கு வழங்கப்படும்.

பால் உற்பத்தியாளர்களின் பணிச்சுமை மற்றும் செலவைக் குறைக்கவும், பாலின் தரம் மற்றும் தூய்மையை மேம்படுத்தவும், ஆண்டுக்கு 3000 கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்களுக்கு மானியத்துடன் கூடிய பால் கறவை இயந்திரம் வழங்கப்படும்.

தற்போது நாள் ஒன்றுக்கு 3 கோடி லிட்டராக இருக்கும் பால் உற்பத்தியை 4.50 கோடி லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பால்பொருட்கள் ஏற்றுமதி ரூ. 450 கோடியில் இருந்து ரூ. 850 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

40. மீன்வளம் மற்றும் மீனவர் நலன்

மீன் பிடித்தல் என்பது தொழில் மட்டுமல்ல, அதுவொரு வாழ்க்கை முறை! நமது பண்பாட்டின் அடையாளம்!

கடந்த ஐந்தாண்டுகளில் 121 மீன்வள உட்கட்டமைப்பு பணிகள், 46 புதிய மீன் இறங்குதளங்கள், 29 மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகள், 11 புதிய மீன் பண்ணைகள், 14 மீன் பண்ணைகள் மேம்பாடு, 12 மீன் இறங்குதளங்கள் ஆய்வு, மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, வரி விலக்கு தரப்பட்டுள்ள டீசல் அதிகரிப்பு, மீன்பிடி கலன்கள் இயந்திரமயமாக்கல், மீனவர் வீடுகளுக்கு பட்டா, 20 ஆயிரம் மீனவர்க்கு நிதி உதவிகள், காணாமல் போகும் மீனவர் தம் குடும்பத்துக்கு உதவித் தொகை உயர்வு, புயல்கால நிவாரணங்கள், 49 மீனவர் கிராமங்களில் செயற்கை மீன் வளர்ப்பகங்கள், மீனவ மகளிருக்கு மானியங்கள், மீனவ மாணவ மாணவியருக்கு குடிமைப்பணித் தேர்வு எழுதப் பயிற்சி ஆகியவை செய்து தரப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ. 8,000-இல் இருந்து ரூ. 12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மீன்பிடி குறைவுகால சிறப்பு நிவாரணத் தொகை 6000 ரூபாயிலிருந்து 9000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி மீனவர்கள் தங்களின் வருவாயை பெருக்குவதற்குத் தேவையான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் அங்கு ஏற்படுத்தித் தரப்படும்.

கடற்பாசி வளர்ப்பை மீனவப் பெண்களிடையே ஊக்கப்படுத்தி அவர்களைத் தொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அவர்கள் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான வழிவகை ஏற்படுவதுடன் கடற்பாசி உற்பத்தியும் 30,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.

கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் மீன் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

கடல் கூண்டு மீன் வளர்ப்பை ஊக்குவித்து, உற்பத்தியை 200 டன்னிலிருந்து 400 டன்னாக உயர்த்துவோம்.

100 கோடி மீன் குஞ்சு உற்பத்தி செய்வதற்குத் தேவையான புதிய மீன் பண்ணைகள் அமைக்கப்படும்.

மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் விற்பனை அங்காடிகள் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்.

மீன் மற்றும் இறால் வளர்ப்புக் கொள்கை உருவாக்கப்பட்டு அதனடிப்படையில், மீன் மற்றும் இறால் வளர்ப்பு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் உள்நாட்டு மீன் உற்பத்தி, தற்போது உள்ள நிலையில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.

மீன் சில்லறை விற்பனை, கருவாடு சில்லறை விற்பனை, கடற்பாசி வளர்ப்பது போன்ற சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதின் விளைவாகத் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் என நமது மீனவர்கள் சொல்லொணாத் துயரத்தைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்கும் அதேவேளையில், இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இந்திய - இலங்கை ஒப்பந்தம் மீளாய்வுச் செய்யப்பட்டு, கச்சத்தீவை மீட்கத் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

41. ஊரக வளர்ச்சி மற்றும் தீவிர வறுமையை ஒழித்தல்

தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அதிக எண்ணிக்கையில் வழங்கிய குடும்ப அட்டைகளும், அவர் உருவாக்கிய நியாய விலைக் கடைகளும் தமிழ்நாட்டின் வறுமையை - ஏழ்மையை ஒழிக்கும் பெரும் முன்னெடுப்பாக அமைந்தது. இதைத் தொடர்ந்து திராவிட மாடல் அரசு உருவாக்கிக் கொடுத்த பல்வேறு திட்டங்கள் அனைத்தும், தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறது. நகர்ப்புற வசதிகளைக் கிராமப்புறங்களிலும் விரிவாக்கம் செய்து வருகிறது திராவிட மாடல் அரசு.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்கள் ஆகியவை இதில் முக்கியமானவை. இந்திய அளவில் வறுமைக் குறைவான மாநிலங்களில் கேரளம் முதலிடத்தையும், பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்... மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள தாயுமானவர் திட்டத்தின் மிக முக்கியப் பகுதியாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைத் தேவையின் அடிப்படையில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் தீவிர வறுமையில் எவரும் இல்லை என்ற நிலையை அடைவோம்.

கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் கிராமங்கள் வளர்த்தெடுக்கப்படும். கிராமச் சந்தைகள், விளையாட்டு மற்றும் நல வாழ்வுக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். கிராமப்புற நீர்நிலைகளைச் செம்மைப்படுத்தி காத்தல், கிராமங்களைப் பசுமையாக்குதல், வேளாண் சாராத கிராமப்புற வேலைவாய்ப்பினை வழங்குதல், குறைந்த அரசு செலவில் அதிக பயன்பெறுதல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய நோக்கங்களை அடைய உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சர் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூபாய் 10,000 கோடி மதிப்பீட்டில் சீர்செய்யப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 30,000 கி.மீ நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள், நீண்டகாலம் நிலைத்திருக்கும் வகையில் மேம்படுத்தப்படும். “ஊரகச் சாலைகள் பராமரிப்பு நிதியம்” தொடங்கி, அதன்மூலம் அனைத்துக் காலநிலைகளுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் கிராமப்புறச் சாலைகள் பராமரிக்கப்படும். விரைவான கிராமப்புற வளர்ச்சிக்கு இத்தகைய கட்டமைப்பு மேம்பாடு முக்கியப் பங்காற்றும்.

30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குப் பதிலாக 3 ஆயிரம் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் கட்டப்படும்.

மக்கள்தொகை அதிகமுள்ள 1000 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்குக் கிராமச் செயலகம் கட்டப்படும். கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், கூட்ட அறை, பொது விநியோகக்கடை போன்ற அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் சுமார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளால் கட்டப்பட்ட ஒரு லட்சத்து எண்பதாயிரம் பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள் உள்ளன. இவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கென விரிவான ஊரகக் கட்டடங்கள் பராமரிப்புக் கொள்கை வகுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டு இத்தகைய பொதுப்பயன்பாட்டுக் கட்டடங்கள் பராமரிக்கப்படும்.

கிராமப்பகுதிகள் அனைத்தும் முற்றிலும் தூய்மையாகப் பராமரிக்கப்படும் வகையில், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டங்கள் நவீனத் தொழில்நுட்பத்துடன், அறிவியல்பூர்வமான முறையில் செயல்படுத்தப்படும்.

2030-ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரக்கன்றுகளை நடவுசெய்து வளர்ப்பதன் மூலம் கிராமங்கள் பசுமையாக்கப்படும். ஆண்டுக்கு 2 கோடி மரக்கன்றுகளைச் சாலையோரம் மற்றும் திறந்தவெளிகளில் நடுவதன் வாயிலாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள் மட்டுப்படுத்தப்படும்.

நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளுக்கான சிறப்புத் திட்டம்: விரைவான நகர்மயமாதல் காரணமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் புறநகர் பகுதிகள் விரிவடைந்து வருகின்றன. இதனால், அந்தப் பகுதிகளின் அடிப்படைத் தேவைகளும், உட்கட்டமைப்பு வசதிகளின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. கிராம ஊராட்சியாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள இப்பகுதிகளில் விரைவான சிறப்பு நடவடிக்கைகள் மூலம், நகரங்களுக்கு இணையான வசதிகள், இந்த நகர்ப்புற ஊராட்சிகளுக்கு (நகர்ப்புறச் சார்ந்த பஞ்சாயத்துகள்) ஏற்படுத்தித் தரப்படும். குறிப்பாகச் சாலைகள், தெருவிளக்குகள், போதுமான அளவு திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, குடிநீர் ஆதாரங்கள், பசுமை வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் முறையான மழைநீர் வடிகால் அமைப்புகள் போன்ற வசதிகளை நகர்ப்புற ஊராட்சிகளும் பெற்றிருப்பது உறுதிசெய்யப்படும்.

42. நகர்ப்புற முன்னேற்றம்

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக இருப்பதற்கு சாலைகள், மேம்பாலங்கள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள்தான் மிகமுக்கியமான காரணம். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமும், ரூ.11,100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட 86 புதிய குடிநீர்த் திட்டங்களும் மக்களுக்கு மனநிறைவைத் தந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...

“உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்” என்ற நோக்கத்துடன் செயல்படுவோம்.

மாநகராட்சிப் பகுதிகளில் “முழுமையான சாலைகள்” அதாவது நடைபாதை, நிழல் தரும் மரங்கள் என எழில் மிகுந்த சாலைகள் நகரங்களில் உருவாக்கப்படும்.

வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு தினந்தோறும் குடிநீர் வழங்குவது உறுதிசெய்யப்படும்.

2030-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் நகர்ப்பகுதியில், 20 விழுக்காடு பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கழிவுநீர் முழுமையாகச் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, 30 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்படும்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் அனைத்துப் பெரிய மாநகராட்சிகளிலும் நவீன பண்பாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.

உயிர்-சிஎன்ஜி ஆலைகள், கோயம்புத்தூர், மதுரை, தாம்பரம், ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியில் மேலும் மூன்று உயிர்-சிஎன்ஜி ஆலைகள் அமைக்கப்படும்.

கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகள் சென்னை, தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் அமைக்கப்படும்.

அனைத்து மாநகராட்சிகளிலும் நகர்ப்புறக் கழிவுகளைப் பிரித்தெடுக்க பொருள் மீட்பு வசதிகள்(எம்ஆர்எப்) வசதிகள் அமைக்கப்படும். பிரிக்கப்பட்ட கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்.

பொதுக்கழிப்பறைகள்: பொதுமக்களின் வசதிக்காக அனைத்து மாநகராட்சிகள் மற்றும் முதல்தர நகராட்சிகளிலும் பொதுமக்கள் பெருமளவில் வந்து செல்லும் இடங்களில் பொது – தனியார் கூட்டு முயற்சி அடிப்படையில் பொதுக்கழிப்பறைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவுநீர் அனைத்தையும் சேகரிக்கத் தேவையான உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுநீரைச் சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

30 எம்எல்டி திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரத்தை மேலும் உயர்த்தும் வண்ணம் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இவை வேளாண்மை மற்றும் தொழில்துறையினரின் தேவைகளுக்குக் கூடுதலாகப் பயன்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

மறு சுழற்சியில் முழு வெற்றி கண்டுள்ள ஜப்பான் நாட்டின் Kamikatsu நகர மாதிரியை எடுத்துக்காட்டாகக் கொண்டு திடக்கழிவு மேலாண்மை முறை மாற்றியமைக்கப்படும்.

பழைய குப்பை மேடுகளும் உயிர் சுரங்கவியல் முறையில் அகற்றப்பட்டு, நகர்ப்புறங்கள் அனைத்தும் குப்பைகளற்ற பகுதிகளாக மாற்றப்படும்.

தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் வெள்ளநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும்.

அனைத்துப் பூங்காக்களிலும் வெள்ளநீரை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். நகர்ப்புற நிலங்களில் குறைந்தது 3 விழுக்காடு “கடற்பஞ்சு நகரம்” உட்கட்டமைப்பாக மாற்றப்படும்.

தமிழ்நாட்டின் நகர்ப்புறத்திலுள்ள முக்கிய சாலைகள் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்படும். இதன்படி அமைக்கப்படும் சாலைகள் அனைத்துப் பருவத்திற்கும் ஏற்றதாகவும், நீண்ட காலம் பயன்தரத்தக்கதாகவும் அமையும்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழிப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

நகர்ப்புறங்களில் உள்ள சாலை விளக்குகள் அனைத்தும் ஸ்மார்ட் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும்.

விளையாட்டுத் திடல்கள் இல்லாத பகுதிகளில் புதிய திடல்கள் உருவாக்கப்படும்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் புதிய மின் மயானங்கள் அமைக்கப்படும். அவற்றை சுற்றுப்புற கிராமத்தினரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

மாநிலத்தில் பரவலாக ஏற்பட்டுவரும் நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக வீடுகளுக்கான தேவைகள், தொழில் வணிக நிறுவனங்களுக்கான இடவசதி, பொது இடங்களின் தேவை ஆகியவை பெருகிவருகிறது. இவற்றுக்கான இத்தேவையை நிறைவு செய்ய நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள எப்ஐஎஸ் உள்ளிட்ட கட்டடக் கொள்கைகளை ஒப்பிட்டு உரிய புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும்.

திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பெரிய மாநகராட்சிகளில் மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளும் வேகமாக வளர்ந்து வரும் சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இம்மாநகராட்சிப் பகுதிகளின் அருகாமையில், நவீன உலகத்தரமான வசதிகளுடன் புதிய நகரங்கள் உருவாக்கப்படும்.

43. நெடுஞ்சாலைகள்

ஒரு மாநிலத்தின் உட்கட்டமைப்பின் சாலைகளே அழகு! மக்களின் பயணங்களை எளிதாக்குவதும் - இனிமையாக்குவதும் சாலைகளே!

கடந்த ஐந்தாண்டு காலத்தில் நெஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் சார்பில், 44 ஆயிரத்து 219 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, 8,730 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1815 பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் மாநிலத்தின் வளர்ச்சியை எதிரொலிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில், நவீனச் சாலைத் தொழில்நுட்பம், ஏ.ஐ. கண்காணிப்பு, அறிவுசார் போக்குவரத்து அமைப்புகள் ஆகியவற்றால் நம் பாலங்கள், சாலைகளின் தரம் மேம்படுத்தப்படும். விபத்துகள் குறைக்கப்படும்.

புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட்டு, உலகச் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் தரத்தில் அமைக்கப்படும்.

நகர்ப்புறம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சாலைகள் அகலப்படுத்தப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தேவைப்படும் நகர்ப்புறப் பகுதிகளில் சுற்றுச்சாலைகளும், பை-பாஸ் சாலைகளும் அமைக்கப்படும்.

சாலைகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை மேம்படுத்தி, சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதுடன், பாதுகாப்பான சாலைப்பயணம் உறுதி செய்யப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களின் பயன்பாட்டிற்காகச் சாலையின் இருபக்கங்களிலும் எரிபொருள் நிலையங்கள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், உணவகங்கள், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள், ஏ.டி.எம்.கள் போன்ற வழியோர வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

மூன்று புதிய பல்வகை போக்குவரத்து தளவாடப் பூங்காக்கள் உருவாக்கப்படும்: சாலை, இரயில், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து மையங்களை (பல்வகை போக்குவரத்து வலையமைப்பு) ஒருங்கிணைத்து தமிழ்நாட்டைத் தெற்காசியாவிலேயே முதன்மையான சரக்கு மேலாண்மை மையமாக 2030-க்குள் நிலைநிறுத்துவோம்.

பின்தங்கிய பகுதிகளிலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முக்கியத் தொழில் பகுதிகளை இணைக்கும் வகையில், தொழில்துறை வழித்தடங்கள் (தொழில்துறை வழித்தடங்கள்) ஏற்படுத்தப்படும்.

44. போக்குவரத்து

மக்களுக்கு மிகமிக அவசியமான, அன்றாடம் தேவையான ஒரு அரசின் சேவையாகப் போக்குவரத்து அமைந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் இட்ட முதல் கையெழுத்து பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் ஆகும். இதுவரை 898 கோடி பயணங்களைப் பெண்கள் மேற்கொண்டுள்ளார்கள். பெண்களின் சமூகப் பங்களிப்பை இது அதிகரித்துள்ளது. மாதம் தோறும் 1200 வரை சேமிக்கிறார்கள். இந்தியாவில் பல மாநிலங்கள் இத்திட்டத்தை பின்பற்றத் தொடங்கி உள்ளது.

8,836 புதிய பேருந்துகள் ஐந்தாண்டு காலத்தில் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. 3,673 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தாழ்தளப் பேருந்துகளும் மின் பேருந்துகளும் அதிகம் வாங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டு வந்ததும் திமுக அரசே. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் கழக அரசே. மேலும், கோவை, மதுரை நகரங்களிலும் மெட்ரோ சேவைக்காக வாதாடியும் போராடியும் வருகிறது திமுக. பேருந்துகள், ரயில்கள், விமானங்கள், துறைமுகங்கள் ஆகிய அனைத்து சேவைகளையும் ஒருசேர வளர்த்துள்ளது நமது அரசு.

இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்... திராவிட மாடல் அரசின் ‘விடியல் பயணம்’ திட்டம், தமிழ்நாட்டு பெண்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் புதிதாக நவீன வசதிகளைக் கொண்ட 10,000 புதிய பேருந்துகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவோம்.

பேருந்துப் போக்குவரத்தால் அதிக நெரிசல் ஏற்படக் கூடிய மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள்/முனையங்கள் அமைக்கப்படும்.

நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள முக்கிய பேருந்து நிறுத்துமிடங்கள் அனைத்திலும் பயணிகள் அமரும் வசதிகளுடன் கூடிய தரமான பேருந்து நிழற்குடைகள் (Bus Shelters) அமைக்கப்படும்.

குறுகிய அணுகு சாலைகள் கொண்ட கடைக்கோடிப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களும் பயனடையும் வகையில் சிற்றுந்து வசதிகள் விரிவுபடுத்தப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில் வழித்தடங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் ரயில் சேவைகளைப் பயன்படுத்திடும் வகையில் குறுகலான சாலைகளிலும் சிற்றுந்துப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்படும்.

இரயில்வே:

திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய அகலப்பாதைத் திட்டம்,

மொரப்பூர் – தருமபுரி புதிய அகலப்பாதை,

மதுரை – தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) புதிய அகலப்பாதை ஆகிய திட்டங்களை அறிவித்துவிட்டு பல ஆண்டுகளாக நிதி ஒதுக்காமல் இரயில்வேதுறை கிடப்பில் போட்டுள்ளது. இந்தத் திட்டங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

பின்வரும் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

விழுப்புரம் – பண்ருட்டி - கடலூர் – சீர்காழி – மயிலாடுதுறை – கும்பகோணம் – தஞ்சாவூர் – (Doubling) விரிவாக்கம் செய்யப்பட்ட வேண்டும்.

தாம்பரம் – செங்கல்பட்டு (4-ஆவது பாதை) விரிவாக்கப்பட வேண்டும்.

புதிய இரயில்வே திட்டங்கள்:

திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி புதிய அகலப்பாதை,

பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தை இணைக்கக்கூடிய செங்கல்பட்டு – அரக்கோணம் (காஞ்சிபுரம் வழியாக) அகல இரயில்பாதை இரட்டிப்பாக்குதல்.

எண்ணூர்/மீஞ்சூர் – சிங்கப்பெருமாள்கோவில் (சென்னை சுற்றுவட்ட புறவழிச்சாலையை ஒட்டி) புதிய அகலப்பாதை

கோயமுத்தூர் – கரூர் (பல்லடம் வழியாக)

கோயமுத்தூர் – அன்னூர் – கோபிசெட்டிபாளையம் – சேலம்

தூத்துக்குடி – திருநெல்வேலி (நேரடியாக)

அரியலூர் – தஞ்சாவூர்

கும்பகோணம் – அரியலூர்/ஜெயங்கொண்டம் – விருத்தாச்சலம்

ஈரோடு – பழனி

எம்ஆர்டிஎஸ் ரயில் சேவையைத் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தால், மெட்ரோ ரயிலுக்கு இணையான சேவையை மாநில அரசே வழங்கும்.

கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அனுமதிக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

விமானப் போக்குவரத்து

தொழில்துறை வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்து வரும் ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்குத் தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த முக்கியத் திட்டத்திற்கு உடனடியாக அனுமதி அளிக்க ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவையான நிலம் எடுப்பு உள்ளிட்ட அனைத்தும் மாநில அரசால் முடித்துக் கொடுத்த பின்னரும் ஒன்றிய அரசால் பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக இப்பணிகளைத் தொடங்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.

தென்தமிழ்நாட்டின் தொழில் தலைநகரமாக தூத்துக்குடி வளர்ந்து வருகிறது. இதற்கு அங்குள்ள துறைமுகம், இரயில், விமானப் போக்குவரத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். நவீன வசதிகளுடன் கூடிய விமான நிலையமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் சரக்கு விமானப் போக்குவரத்து முனையம் (Cargo Terminal) அமைக்க ஒன்றிய அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

துறைமுகங்கள்

துறைமுகம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 3 புதிய சிறு துறைமுகங்கள் அமைக்கப்படும். துறைமுகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். துறைமுகங்களின் இணைப்புகளும் மேம்படுத்தப்படும்.

நாகப்பட்டினம் மற்றும் கடலூர் துறைமுகங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்.

45. வீட்டுவசதி

அனைவருக்கும் வீடு என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் கிராமப்புற மக்களின் வீட்டுக் கனவை நனவாக்கியது. அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்தாண்டு காலத்தில் 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கி உள்ளோம். இலங்கைத் தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 7,674 வீடுகள் பழங்குடியினருக்கு கட்டி வழங்கப்பட்டுள்ளன. 1,14,470 கிராமப்புற வீடுகள் முழுமையாக புதுப்பித்துத் தரப்பட்டு உள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் 23.56 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் கட்ட திட்ட அனுமதி முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்... கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 5 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டம், நகர்ப்புற வீட்டு வசதி திட்டம், இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள், மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்டும் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

கலைஞர் கனவு இல்லம் திட்டம் தேவைக்கேற்ப பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

46. நிர்வாகத்தில் எளிமை

ஒற்றைச் சாளரத்தின் வழியே அனைத்துச் சேவைகளும் வழங்கப்படும். இருந்த இடத்தில் இருந்தபடியே, இணையத்தில் ஒரு சாளரத்தைத் திறந்து, தங்களுக்குத் தேவையான சேவையைச் சுட்டிச் சொடுக்கினால், அதற்கான தகவல்களுடன் விண்ணப்பப் படிவமும் வழங்கப்படும். அதனை நிரப்பிப் பதிவேற்றம் செய்தால், விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டதற்கான சான்று அப்போதே அளிக்கப்பட்டு, விரைவில், கோரிய சேவையும் நிறைவேற்றப்படும்.

கணினித் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு சேவை வழங்குவதை, இத்தகைய நடைமுறை மூலம் எளிமையாக்க உறுதியளிக்கிறோம். இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்... அரசு விதிமுறைகள், சான்றுகள் ஆகியவற்றில் எவை தற்காலத்தில் தேவையற்றவை என்று ஆய்வு செய்து, அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு வழங்க வேண்டிய சேவைகளில் மக்கள் சந்திக்கும் குறைபாடுகளை, கோரிக்கை மனுவின் நிலை ஆகியவற்றை ஒரே சாளரத்தின் வழியே எடுத்துக் கூறித் தீர்வுபெறும் நடைமுறை உருவாக்கப்படும்.

பொதுமக்களுக்கு அரசிடமிருந்து தேவைப்படும் சேவைகளை எளிமையாகப் பெறும் வகையில் ஒரு பெரும் செயலி (Super App) உருவாக்கப்படும். அனைத்துச் சேவைகளும் உங்கள் விரல் நுனியில் என்ற கனவு இதன் மூலம் மெய்ப்படும்.

பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுத்துறைகளிலிருந்து தேவைப்படும் பல்வேறு சேவைகளை எளிமையாக்கிடும் வகையில் 1000 அரசு சேவைகளின் நடைமுறை மாற்றியமைக்கப்படும். சான்றிதழ்கள், தடையில்லாச் சான்று உள்ளிட்ட அனைத்தும் இவற்றுள் அடங்கும்.

சான்றிதழ்களை இணையதளத்திலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் அரசின் இணைய சேவை மேம்படுத்தப்படும்.

மக்களுக்கான அரசுத் திட்டங்களின் செயல்பாடுகளைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளத் தேவையான தகவல்கள் அனைத்தும், தொடர்புடைய அலுவலகங்களில் மின்னணு தகவல் பலகைகள் வாயிலாக அறியும் வசதி உருவாக்கப்படும்.

அரசுத் துறைகளில் ஒவ்வொரு முறையும் சான்றிதழ் கேட்டுப்பெறும் முறை தவிர்க்கப்படும். பெறப்படும் சான்றிதழ்கள் ஒரு தொகுப்பாக DigiLocker போன்ற அமைப்பின் உதவியுடன் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். உரியவரோ, அல்லது அவரது அனுமதியுடன் தேவைப்படும் அரசுத்துறையோ அதனைப் பெறும் வசதி உருவாக்கப்படும். இதன்மூலம் நேரமும், மனித உழைப்பும் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

அரசின் சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அதிகம் அணுகக் கூடிய அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையும், சேவைகள் விரைவாகக் கிடைப்பதும் உறுதிசெய்யப்படும். கிராம நிர்வாக அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 100 விழுக்காடு மின்னணு அலுவலக நடைமுறை செயல்படுத்தப்படும்.

அரசுத்துறை மட்டுமே தரச் சான்றளிக்கும் முறை மாற்றியமைக்கப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த நபர்களைக் கொண்ட மூன்றாம் தரப்பு ஆய்வு செய்து சான்றளிக்கும் முறை அரசுத்துறைகளில் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்.

விதிமுறைகளை ஏற்று விண்ணப்பதாரர்கள் வழங்கும் சான்றிதழ்களை (Compliance Certificate) அரசுத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஏற்கும் முறை எல்லா சூழ்நிலைகளிலும் தேவையற்றது. பொதுமக்களே தாங்கள் விதிமுறைகளை ஏற்று இணங்கி நடப்பதாக வழங்கிடும் சுயசான்றுகளை (Self Certification) ஏற்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். தேவைப்படும் போது மட்டுமே அரசு கள ஆய்வு மேற்கொள்ளும். இவ்வகையில் நம்பிக்கை சார்ந்த ஆளுமை முறை மாநில நிர்வாகத்தில் வளர்த்தெடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்.

பொதுமக்களுக்கு இன்றியமையாத சேவைகளை வழங்கும் அரசுத் துறைகளான பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை போன்ற துறைகள் அனைத்தும் நவீனத் தொழில்நுட்பத்துடன் முற்றிலும் மாற்றியமைக்கப்படும். பொதுமக்கள், தங்களுக்குத் தேவைப்படும் சேவையைப் பெறுவது எளிமையாகவும் காலவிரயமின்றியும் நடந்தேற இம்முயற்சிகள் உதவும்.

47. பொது விநியோகம்

திராவிட மாடல் ஆட்சியும் ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதிநேர நியாய விலைக் கடைகளும் என மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.

2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளை அதிகரிப்பதுதான் ஒரு ஆட்சி மக்கள் மீது வைக்கும் உண்மையான அக்கறையாகும். இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்... ஆண்டுதோறும், புதிய குடும்ப அட்டைகள் முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்கப்படும்.

10,000 நியாய விலைக் கடைகள் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளுடன் புதுப்பிக்கப்படும்; தேவைப்படும் இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும்.

48. நிதி மேலாண்மை

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உடனேயே இரண்டு முக்கியமான தடைகள் தமக்கு உள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள். முந்தைய பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சீரழித்த அ.தி.மு.க. ஆட்சி என்பது ஒன்று. தமிழ்நாட்டின் வளர்ச்சியை அனைத்து வகையிலும் தடுக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு மற்றொன்று என்பதை மாண்புமிகு முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்கள்.

பத்தாண்டு கால அ.தி.மு.க.ஆட்சியின் சீரழிவுகளைச் சரிசெய்து, ஒன்றிய பா.ஜ.க. அரசின் தடைகளையும் வென்று இன்று தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் மாண்புமிகு முதலமைச்சர் வளர்த்தெடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்திய நாட்டின் வளர்ச்சியில் நூறில் பத்து விழுக்காடு பங்கை தமிழ்நாடு செலுத்தி வருகிறது. நிதிப் பற்றாக்குறை திறம்படக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடனின் விகிதம் குறையும் போக்கில் உள்ளது. நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழ்நாடு இரண்டாவதாக இருக்கிறது. பணவீக்கம் குறைந்து வரும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. 20 முக்கிய இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு எட்டாவது இடத்தில் - குறைந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கத்தைக் கொண்டுள்ள மாநிலமாக இருக்கிறது.

அனைத்து நிதியும் வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவு செய்யப்படுகிறது.கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட நிதிநிர்வாகம் சீராக இருப்பதே காரணமாகும். இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்... கடந்த 5 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு செயல்படுத்தியுள்ள முன்னோடி மக்கள்நலத் திட்டங்களையும், கட்டமைப்புப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளவும், இந்தத் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களைச் செயல்படுத்திடத் தேவையான நிதி ஆதாரங்கள் அனைத்தும் சிறப்பான நிதி மேலாண்மையால் உறுதிசெய்யப்படும்.

கடந்த 16 ஆவது நிதிக்குழுவின் அறிக்கையின் படியான நிதிப் பங்கீட்டு முறை தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 ஆண்டுகளில் சாதகமாக இல்லாத சூழலிலும், ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை விடுவிக்க மறுக்கும் நிலையிலும், தமிழ்நாட்டின் நிதி உரிமைகளை மீட்டெடுத்து நமக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய அனைத்து நிதிகளையும் போராடிப் பெறுவோம்.

தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதன் மூலமும், தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து நலத்திட்டங்களைச் செயல்படுத்தியும் உட்கட்டமைப்புப் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்தும், அரசு நிதியைச் சேமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கூறிய கடினமான சூழலிலும் நிதிப் பற்றாக்குறையைச் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவிற்கு உள்ளாகக் கட்டுப்படுத்தி, அரசின் பல்வேறு முயற்சிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உறுதிசெய்வோம்.

49. சிறப்புக் கவனப் பகுதிகள் வளர்ச்சித் திட்டம்

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் கொள்கையின்படி அனைத்துத் துறைகளின் வளர்ச்சி, அனைத்து மக்களின் வளர்ச்சி, அனைத்துச் சமூகங்களின் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என தமிழ்நாடெங்கும் உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டு 6045 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வடசென்னை வளர்ச்சித் திட்டமானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதே நோக்கத்துடன் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எல்லா மாவட்டங்களிலும் சீராகக் காணப்படும் வகையில், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மண்டல வாரியாக சிறப்புக்கவனச் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இதுவரை பெரிய முதலீடுகள் வரப்பெறாத மாவட்டங்களிலும் திராவிட மாடல் ஆட்சியில் பெரும் தொழில் முதலீடுகள் கடந்த 5 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்டுள்ளன. எனினும் இவை பரவலாக எல்லா மாவட்டங்களிலும் ஏற்பட வேண்டும். வளர்ச்சி விகிதங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எந்தெந்த மாவட்டங்களின் வளர்ச்சி மாநில சராசரியைவிட பின் தங்கியுள்ளனவோ, அவற்றுக்கெனச் சிறப்பு வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படும். அப்பகுதிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளான சாலைகள், போக்குவரத்து வசதி, வீடுகள், குடிநீர் வசதி போன்றவை போர்க்கால அடிப்படையில் உருவாக்கப்படும். கல்வி, மருத்துவம், போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி மனிதவளக் குறியீடுகளை இந்த மாவட்டங்களில், மாநில சராசரியின் அளவுக்கு உயர்த்துவோம். இவற்றுக்குத் தேவையான சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு பின்வரும் வகைகளில் சிறப்பு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்... மின்னணு மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, தொழிற்பூங்காக்கள் அமைப்பு, வேலைவாய்ப்புகளைப் பெருக்கக் கூடிய தோல் அல்லாத காலணி உற்பத்தி, காய்கறி, கனிவகைகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான உட்கட்டமைப்பு, இளைஞர்களுக்கான திறன் பயிற்சி, ஐ.டி. பூங்காக்கள் மற்றும் முழுமையான குடிநீர் திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்; தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க விரைவுச் சாலைகள் அமைத்தல், திருச்சியில் ஏற்றுமதிக்கு தேவையான உலர் துறைமுகக் கட்டமைப்பு . தூய்மை காவிரித் திட்டம்-2030 செயலாக்கம், ஒருங்கிணைந்த சுற்றுலா மேலாண்மைத் திட்டங்கள், வேளாண்மைக்கான நீராதார உட்கட்டமைப்பு தீவிர மேம்பாடு, கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்; வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான சிறப்புத் திட்டங்கள், குழாய்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து மேம்பாடு, சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான பொதுவசதி மையங்கள் அமைத்தல், சிறப்பு சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள், இளைஞர்களுக்கான திறன் வளர்ச்சி மையங்கள், கடலோர மாவட்ட சிறப்பு வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டம் ஆகியவை 20 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

2030-ஆம் ஆண்டுக்குள் மாவட்டங்களுக்கு இடையேயான வளர்ச்சி வேறுபாடுகள் குறைக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும்.

50. சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம்

மின் மோட்டார் உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, நெசவு, ஆயத்த ஆடைகள் உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வளர்ச்சி கண்டுவரும் மேற்கு மாவட்டங்களில் தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சி அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும். அந்த வகையில் நகரப்பகுதிகள் மேம்பாடு, நவீன முறையில் உயர் தொழில்நுட்ப நிறுவன முதலீடுகளை ஈர்த்தல், நவீன திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள், பல்வேறு வகை ஜவுளி ஏற்றுமதிக்கான உட்கட்டமைப்புகள், புதிய ஜவுளித் தொழில்நுட்பத்துடன் ஜவுளித் தொழிலை நவீனமயமாக்குதல், மாவட்டங்கள் சார்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான சிறப்புக் குழுமங்கள் அமைத்தல் மற்றும் கடனுதவி ஏற்பாடுகள், வேளாண்மை உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் தொழில்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு சிறப்புப் பெருந்திட்டம் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

summary

Regarding DMK Election Promises and 51 Highlights election manifesto

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.