லைஃப்ஸ்டைல்

உயிரிழந்த ஸ்வாதி சொல்லித்தருவது என்ன? ‘தாழ்த்தப்பட்டவர்கள் தப்பே செய்யக் கூடாது…’

ஸ்வாதியின் உயிர் கொன்றெடுக்கப்பட்ட நிகழ்வில் முன்வைக்கப்படும் சில பதிவுகளை நாம் கவனத்துடன் பார்க்கவேண்டி உள்ளது. ‘தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவனால் பிராமணப் பெண் கொல்லப்பட்டிருக்கிறாள்…’

வழக்கறிஞர் சி.பி. சரவணன்

ஸ்வாதியின் உயிர் கொன்றெடுக்கப்பட்ட நிகழ்வில் முன்வைக்கப்படும் சில பதிவுகளை நாம் கவனத்துடன் பார்க்கவேண்டி உள்ளது.

‘தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவனால் பிராமணப் பெண் கொல்லப்பட்டிருக்கிறாள்…’

‘உயர்ஜாதிப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி வாழ்வைச் சீரழிக்க வேண்டும்; வலையில் வீழாதவர்களை வெட்டி வீழ்த்த வேண்டும் என்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தொடர் திட்டமிடலாகும்…’

‘கொலையாளிக்குப் பொதுமக்கள் முன்னிலையில் இறப்புத் தண்டனை வழங்க வேண்டும்…’

‘கொலையாளிக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்…’

‘காதல் பிரச்னைகளால் கொல்லப்படுகிறவர்கள் யாவரும் எங்கள் ஜாதியினரே என்று கொந்தளித்து எழுகிற தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள், இப்போது மட்டும் ஏன் எங்கள் ஜாதியைச் சார்ந்தவன் கொலைகாரன் என்று சொல்லிக்கொள்ள முன்வரவில்லை?...’

மேற்படி கூற்றுகளும், வினாக்களும் சமுதாயத்தில் எழுவதை யாரும் தடுத்துவிட முடியாது.

கொலையாளியைக் கொலையாளியாகப் பார்க்காமல் பட்டியல் வகுப்பினராகப் பார்த்ததும், கொலையுண்டவரைப் பெண்ணாகப் பார்க்காமல் பிராமணர் என்று பார்த்ததும், 2000 ஆண்டுகளாக நிலவிவரும் வழக்கத்தின் தொடர்ச்சி.

ராம்குமாரால் ஸ்வாதி கொல்லப்பட்டிருப்பார் என்றால், அதற்கான காரணங்களாக ஊடகங்களால் சொல்லப்பட்டவை -

‘மதிப்பெண் குறைவாகப் பெற்றிருப்பினும், இடஒதுக்கீட்டினால் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்ததால் சரியாகப் படிக்கவில்லை. சரியாகப் படிக்காததால் பட்டம் பெற முடியவில்லை. பட்டம் பெற முடியாத காரணத்தால் வேலைவாய்ப்பை பெற முடியவில்லை. வேலைவாய்ப்பு சரியாக அமையாததால், தான்தோன்றித்தனமாகச் சுற்றியதால், பொறுப்பற்று இருந்ததால், தகுதி தராதரமில்லாமல் உயர்ஜாதிப் பெண்ணின் மீது ஒருதலைக் காதல் கொண்டார். இந்தக் காதலை அந்தப் பெண் ஏற்காமல் இவரை இழிவுபடுத்தியதால் கோபத்தின் உச்சிக்கே சென்று கொலை செய்துவிட்டார்…’

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது.

இளையராஜா எந்த இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொண்டும் உலகச்சாதனை படைக்கவில்லை.

அம்பேத்கர் எங்கேயும் இடஒதுக்கீடு பெற்றுக்கொண்டு உலக அறிவாளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கவில்லை.

ஆனால், இடஒதுக்கீடு என்ற ஒன்று இருப்பதால்தான், தகுதியற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு ராம்குமார் பயன்படுத்தப்படுகிறார்.

இடஒதுக்கீடு என்பது ராம்குமார் சேர்ந்த பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர்க்கு மட்டும் வழங்கப்படுவதில்லை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் யாவருக்குமே வழங்கப்படுகிறது என்பது மறைக்கப்பட்டுவிட்டது.

ராம்குமார் இந்தக் கொலையைச் செய்வதற்கான காரணங்களை ஆராய்வதற்கு முன்னர், இந்தக் கொலையை அவர் செய்யாமல் இருந்திருக்க என்னென்ன முன் ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

நம் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவன் காதலிக்கிறான் என்று தெரிந்தவுடன், அவனைச் சூழ்ந்திருக்கும் நண்பர்கள் கூட்டம் அவனைக் கொண்டாடுவதும், அவனுக்காக உயிரையே கொடுப்பேன் என்று திரை வசனங்களைப் பேசி உசுப்பேற்றுவதும், பெற்றோர் உறவினர்களைப் பிரித்தெடுத்துக் காதல் திருமணங்களுக்காகக் குரல் கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது.

அதே ஒருவன் படிப்பில் தடுமாறுகிறான் என்கிறபோதும், தேர்ச்சி பெறவில்லை என்கிற,போதும், அவனுக்காக உதவிட அறிவுரைகள் வழங்கிட எந்த நண்பர்கள் கூட்டமும் வருவதில்லையே ஏன்?

இங்கு நண்பர்கள் என்ற இடத்தில் சமுதாயத் தலைவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

பட்டியல்வகுப்பினர் / பழங்குடியினரின் மேம்பாடு என்பது கல்வியில் மட்டுமே தொடங்கமுடியும். ஏனெனில், வேறெந்த முதலீடும் அவனுக்கு இல்லை.

அந்தக் கல்வியைத் தொடங்குவதற்கும் முறையாகத் தொடர்வதற்கும் சமுதாயம் ஆர்வம் காட்டாத நிலையில், காதல்களை மட்டும் குறைசொல்லாமல் கொண்டாடுவது ஏற்புடையதா?

காதலித்து ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கான சிக்கல்கள் வரும்போது ஊர் ஊராக அணிதிரள்கிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் ஊர்களில் கல்விப் பயிற்சிக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவா என்ற கேள்வியைக் கேட்க யாருமே வரவில்லை.

கட்சித் தலைமைக்காக ஊர்தோறும் 100 பேர் ஒன்று திரள்வார்கள். ஆனால், அந்தக் கட்சித் தலைமையோ 100 பேருக்காக அந்த ஊரில் ஒரு பயிற்சி வகுப்பையும் நடத்துவதில்லை. மீனாட்சிபுரத்தில் ஒரே ஒரு பயிற்சி வகுப்பு இருந்திருந்தால், பட்டத்தை ராம்குமார் எளிதில் பெற்றிருப்பார்.

நடிகனுக்காக 100 பேர் ஒன்றுதிரண்டு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவுசெய்து பட்டாசு வெடித்துப் பதாகைகள் வைப்பார்கள். அந்த நடிகன் காதலிக்கக் சொல்கிறான், பெண் விரும்பாவிட்டாலும் விரட்டி விரட்டிக் காதலிக்கச் சொல்கிறான். “ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டைப் பாடி கறக்கணும்’’ - இதைத்தான் நம் நடிகர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுதான் ஹீரோயிசம் என்று நம்பவைக்கப்பட்டது.

எனவே, ஒரு பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவளைத் துரத்திச் சென்று ‘மடிய’வைப்பது என்பது சினிமா நாயகர்கள் சொல்லித் தந்த பாடம். இந்தப் பாடத்தை தப்பாமல் பின்பற்றுபவர்கள், வாழ்க்கைப் பாடத்தை மட்டும் பின்பற்றவேமாட்டார்கள்.

தருமபுரி இளவரசன் உயிரிழந்தபோதும், கோகுல்ராஜ் கொல்லப்பட்டபோதும், சங்கர் கொடூரமாக வெட்டப்பட்டபோதும் துடிதுடித்து எம் ரத்தம் என்று சொன்னவர்கள், ராம்குமாரையும் எம் ரத்தம் என்று சொல்வதில் தப்பு எப்படி இருக்கமுடியும்? அந்தத் தப்பு நிகழ்ந்தமைக்காகத் தலைதாழ்ந்து வெட்கப்பட்டு வருத்தப்பட்டு அழுவதுதான் மனிதத்தின் அடையாளம்.

உழைத்துத் தேய்ந்துபோய் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உரிமைக்குரலின் நியாயத்தைப் புரியவைக்கமுடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் தப்பே பண்ணக்கூடாது. அப்போதுதான் உரிமையைப் பற்றிப் பேசமுடியும். இப்படியான தப்பானவர்கள் உருவாகாமல் இருப்பதற்கு, ஊர்தோறும் கல்விப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதும், போட்டி தேர்வுப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதும், வேலைவாய்ப்புத் தேடலுக்கான வழிகாட்டுதல் வகுப்புகள் நடத்துவதும் இந்தக் காலத்தின் தேவையாகும். தனிமனிதச் சிக்கல்களுக்கு எல்லாம் ஜாதிச் சாயம் பூசினால், அதே சாயம் நம் மேலும் பூசப்படும்போது நாமும் தலைகுனிய நேரும்.

ஸ்வாதிக்காக நாம் தலைகுனிவதை அவமானமாகக் கருதாமல், ஒழுக்கச் சிதறலைக் கண்காணிப்பதற்கான வாய்ப்பாகக் கருத வேண்டும்.

கல்வியையும் ஒழுக்கத்தையும் திறனையும் மேம்படுத்த நாம் முயற்சிக்கும்போது, நம்மால் நல்ல சமுதாயம் உருவாகும். அதைத்தான் அம்பேத்கர் கனவு கண்டார்.

புகைப்பிடிக்கக்கூடாது என்றும், மது அருந்தக்கூடாது என்றும், விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், பெண்களை மதிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியவர் அம்பேத்கார்.

பெண்ணினத்தின் சமத்துவத்துக்காகப் போராடியவர் அம்பேத்கர். பெண்களுக்குச் சொத்தில் சமஉரிமை என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோது, தனது அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்திய அரசியல் சட்டத்தைத் தந்த அந்த மாபெரும் தேசியத் தலைவருக்கு அவமானம் தருகிற வகையில் மற்றவர்கள் பேசுவதற்கு இடம் தரவேகூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் தப்பே செய்யக்கூடாது.

இந்தக் கட்டுரையில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தை ராம்குமாரை மட்டும் குறிப்பிடுவது அல்ல. ஸ்வாதியையும் இந்தச் சொல் குறிக்கிறது. நிச்சயமாக ஒரு பெண் எந்த ஜாதியில் பிறந்தாலும், எந்த மதத்தில் பிறந்தாலும் அவள் தாழ்த்தப்பட்டவள்தான்.

நான் இந்த உயர்ஜாதியைச் சார்ந்தவன் என்று சொல்லிக்கொள்வதற்கு ஆணுக்கு உள்ள பகட்டு உரிமைகூட எந்தப் பெண்ணுக்கும் கிடையாது. பெண் என்பவள் எல்லா நிலைகளிலுமே ஆண்களின் அடிமை. அவள் எப்போதும் ஒடுக்கப்படுகிறாள், அடக்கப்படுகிறாள், உரிமைகள் மறுக்கப்படுகிறாள்.

அவள் எப்போதுமே ஒரு போகப் பொருள். பொருளுக்கு மட்டுமே உயிரில்லை. ஆனால், ஆணுக்கு மட்டும் உயிர் இருக்கிறது. எனவே, பெண் என்ற பொருளை அவன் மதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இந்த ஆணாதிக்கச் சிந்தனை எல்லா ஜாதிகளிலும் உண்டு. எல்லா மதங்களிலும் உண்டு.

கிறிஸ்தவ மதம் என்றாலும் கடவுளின் மகனாக ஓர் ஆண்தான். இஸ்லாம் என்றாலும் இறைத்தூதர் ஓர் ஆண்தான். இந்து மதம் என்றாலும் சிவனும் திருமாலுமே உச்சமும் உள்ளங்காலும்.

கன்னியாக இருந்து கடவுளுக்கு ஊழியம் செய்யப் பணிக்கப்படுபவள் பெண்... மதம் சார்ந்து மக்கள் தொகையைப் பெருக்கப் பிள்ளைபெறும் எந்திரமாகவும் பெண்…

பெண்கள் மீதான வன்முறைகள் எப்படியெல்லாம் கட்டவிழ்த்தப்படுகின்றன!?

அமில வீச்சு, மார்பறுத்தல், எரித்தல், வன்கலவி, குடும்ப வன்முறை, வரதட்சணை, ஆணவக் கொலை, உறுப்புச் சிதைப்பு, பெண்சிசுக் கொலை, கருக்கலைப்பு, தாமரைக்கால் (ஆண்களைவிட குள்ளமாகக் காட்டிக்கொள்ள கால்களை முடக்கிக்கொள்ளுதல்), கருவறுப்பு, கட்டாய மணம், விபசாரத்தில் ஈடுபடுத்தல், உடன்கட்டை ஏற்றுதல்…

வெட்டப்பட்டுக் கொல்லப்படும்போதும், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படும்போதும், பெண்கள் பற்றி ஊடகம் தெரிவிக்கும்போது ஒரு செய்தியாகத்தான் மக்களிடம் அது போய்ச்சேர்கிறது. ஆனால், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அந்த நொடியில், அந்த நிமிடத்தில், அந்த மணியில், அந்தப் பெண்ணின் உடல்படும் துன்பங்களை உணர்பவர் யார்? புலியும் சிறுத்தையும்கூட, தன் இரையை வேட்டையாடும்போது அந்த மானோ ஆடோ, தன்னிலை இழந்து நிகழும் வலியை உணராமல் உணவாகிவிடுகின்றன. ஆனால், பெண் அப்படியா? கிழிக்கப்படும் தசைநார்கள், குத்தி எறியப்படும் ரத்தக்குழாய்கள், இந்தத் துன்பத்தை ஒருத்தி ஏற்றுக் கண்ணீருடன் கதறும்போது, அந்தக் கதறலைச் சுவைக்க ஆசைப்படுபவனை ஆண் மகன் என்று சொல்வதற்குக்கூட நா கூசுகிறது.

இப்படியான துன்பம் எந்தப் பெண்ணுக்கு வரும்? எப்போது வரும்? நம்ம வீட்டுப் பெண்ணுக்கும் வருமா? உறுதியாகக் கண்டுபிடிக்க முடியாது. இந்த வேதனை யாவும் பெண்களுக்கு மட்டும்தானா? அந்தப் பெண்ணைத் தாயாக மதிக்கும், மனைவியாகச் சுவாசிக்கும், மகளாகக் கொஞ்சும், அக்கா தங்கையாக நேசிக்கும், தோழியாக விளையாடும் எந்த ஆண்மகனுக்கும் பொறுப்பில்லையா? நம்ம வீட்டுப் பெண்ணுக்கு இந்தத் துன்பம் வந்தால் நாம் பொங்கி எழமாட்டோமா? துன்பம் வந்துவிட்ட பிறகு என்ன செய்வது?

குடும்பச் சிக்கல் என்றாலும், நாடுகளுக்கு இடையே சிக்கல் என்றாலும், முதலில் தாக்கப்படுவது பெண்கள் மட்டுமே.

மன்னராட்சி நிலவிய காலத்தில்கூட, அந்தப்புரத்தில் அடைக்கப்பட்டிருந்த பெண்களுக்கு உயிருக்குக் கேடு இல்லாமல் இருந்தது. ஆனால், மக்களாட்சியைப் பேசுகிற இந்தக் காலத்தில், நடுவீதியில் நம்பிக்கையுடன் ஒரு பெண்ணால் நடமாட முடியவில்லையே!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பல பேர் முன்னிலையில் ஈவிரக்கம் இல்லாமல் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் ஸ்வாதி.

இன்னொரு ஸ்வாதி கொல்லப்படக்கூடாது அதற்கு என்ன செய்ய வேண்டும்?

காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்று சொல்லப்படுகிறது. இந்த மாயையை முதலில் உடைத்தெறிய வேண்டும். வீரம் என்பது ஆண்மகனுக்கும், காதல் என்பது பெண்மகளுக்கும் உரியவை என்று சொல்லி, ஆணாதிக்கத்தை விதைத்த இச்சமுதாயத்தைப் புரட்டிப்போட வேண்டிய காலகட்டம் இது.

காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்று சொல்லப்படுகிறதே?!! புலிப்பல்லைப் பிடுங்கி வருகிற வீரரும், ஜல்லிக்கட்டை அடக்கி வருகிற வீரரும் தற்போது காணாமல் போய்விட்ட பிறகு, கற்பைச் சுமந்துகொண்டிருக்கிற காதலிகள் மட்டும் தேவையா என்ன?

அறிவியலின்படியும் காதல் என்பது பொய்யானதே. ஆண் பெண் மீதான இருவருக்குமான ஈர்ப்பு என்பது பார்த்த உடன் உருவாகிவிடுவதல்ல. காதலில் ஒரு பெண் ஈடுபட்டால், அவளுக்கு ஒரே ஒரு ஆண் மட்டுமே துணையாக இருப்பான். காதலிக்காத பெண்களுக்கு 100 ஆண்களின் தோழமை கிடைக்கும். இந்த நட்பு நல்விதமாகத் தொடர்வதற்கு, காதலுக்கு எதிரான சிந்தனை உறுதிபடுத்தப்பட்டால்தான் சாத்தியமாகும்.

ஒரு பெண் பதின்வயதைத் தொட்டதும் காதல் தூதுகள் தொடங்கிவிடுகின்றன. பாலியல் கல்வி இல்லாத இந்தியாவில், பெண்கள் தாமாகவே முடிவெடுக்கும் திறன் உள்ளவர்களாக இருக்கமுடியாது.

சிறந்த பெண்ணியம் பேசிய படமாகக் ‘காதலும் கடந்துபோகும்’ படத்தைச் சொல்லாம். இந்தப் படத்தில், ஓரிடத்திலும் காதல்வயப்பட்டவளாகக் கதாநாயகி வாழ்ந்ததில்லை. இதை ஒரு காதல் படமாகப் பரப்புரை செய்து, ஆனால் கண்ணியமான படத்தைக் கொடுத்ததற்காக இயக்குநர் நலன் குமாரசாமியைப் பாராட்டலாம். இப்படியான கதை இந்தியாவில் இவருக்குக் கிடைக்கவே இல்லை. கொரியாவிலிருந்து தேடிக் கண்டுபிடித்தார். பெண்கள் இந்தக் கதையை உற்றுநோக்கினால், பெண்ணியத்தின் மேன்மையை உணரலாம்.

மற்ற படங்களில் எல்லாம், துரத்தித் துரத்திக் காதலைச் சொல்வது திரைப்படக் கதாநாயகர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடமாக இருக்கும். ‘அட்றா அவளை, வெட்றா அவளை’ என்று பாட்டு பாடினாலும் தணிக்கைத் துறை கண்டுகொள்ளாது.

எந்தக் கதாநாயகனும் எந்தக் கதாநாயகியும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கையடக்கத்தைப் பின்பற்றுகிறார்களா என்பதை உற்றுக் கவனித்தால், திரைப்படங்கள் தரும் காதல் மாயையிலிருந்து பெண்கள் விடுபடமுடியும்.

இன்னொரு ஸ்வாதி கொலை செய்யப்படாமல் இருப்பதற்கான வேர், காதல் ஒழிப்பே ஆகும். இந்த ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், விஷ்ணுப்ரியாவின் தற்கொலைகளும் நிகழாது.

காதல் என்ற சொல்லைப் புறக்கணித்து, ஒப்பந்தம் என்ற சொல்லைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். காதலில் வெறும் தன்னல வாழ்க்கை மட்டும் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஒப்பந்தத்தில் தனது எதிர்காலம், குடும்பத்தாரின் ஒப்புதல், சமுதாய அமைதி இவையாவும் ஒருங்கிணைந்து பார்க்கப்படும்.

காதல் என்பது பெண்ணடிமைத்தனத்தின் மூலக்கூறு என்று பெரியார் சொல்கிறார்.

காதல் என்பது பெண்ணின் லட்சியத்தைத் திசைதிருப்பிவிடும். சிறுவயதில் காதல் என்கிற மாயையில் சிக்கிக்கொண்டாலும் அதிலிருந்து மீண்டு வரவேண்டியது பெண்ணின் புத்திசாலித்தனம் என்பதே பெரியாரின் அறிவுரை.

தந்தை பெரியாரிடம் ஒருமுறை, நீங்கள் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் -

‘துரதிஷ்டவசமாக நான் முதலமைச்சர் ஆகிவிட்டால், நிதி ஒதுக்கீட்டின் 100 சதவீதத்தையும் பெண்கள் நலனுக்காகச் செலவிடுவேன். அவர்கள் முன்னேறினால் இந்த மாநிலம் முன்னேறிவிடும். ‘

பெரியார் எப்போதும் திராவிடக் கட்சிகளுக்கு நகைப்புக்குரிய பொருள்தான். அந்தப் பொருளைப் புறக்கணிப்பதே திராவிடக் கட்சிகளின் முக்கிய நோக்கமாகும். அவர் சொன்னதையெல்லாம் செய்துவிடமாட்டார்கள்.

தேர்தலுக்கு முந்தைய அதிமுக இணையதளத்தில், முதல்வர் ஜெயலலிதா விரும்புகிற தலைவர்களில் முதன்மையானவர் தந்தை பெரியார் என்று சொல்லப்பட்டிருந்தது. அந்தப் பெரியாரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, காதல் துரத்தல்களுக்கு எதிரான சட்டம் இயற்ற வேண்டும்.

இப்படியான சட்டம் வராவிட்டால், காதல் துரத்தல்கள் நியாயமாக்கப்படுவதைத் தடுக்கமுடியாது. காதல் என்பதே தேவையற்றது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடத்திட்டங்கள் எட்டாம் வகுப்பு முதல் கொண்டுவரப்பட வேண்டும்.

அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் சட்டம் கொண்டுவரட்டும், அல்லது சட்டம் கொண்டுவராமல் போகட்டும். மனித குலத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகிய பெண்கள், காதல் என்கிற கவனச் சிதறல் தப்பைச் செய்யவேகூடாது.

ராம்குமார் குற்றவாளி என்றோ, அவர் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர் என்றோ இந்தக் கட்டுரையில் நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், ஜாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தங்களது திறன் வளர்ப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்பதும், பாலின அடிப்படையில் தாழ்த்தப்பட்ட பெண்கள், காதல் என்பது பெண்ணடிமைத்தனத்தின் மூலக்கூறு என்பதை உணர வேண்டும் என்பதும்தான் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

சி. சரவணன் - 9976252800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT