தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்று சிலர் எண்ணெய் தேய்ப்பார்கள். தேங்காய் எண்ணெய் அல்லது வேறு எந்த எண்ணெய் தேய்ப்பதாலோ கூந்தல் அதிகமாக வளர்வதில்லை. அதற்கு முதலில் தலைமுடி போஷாக்குடன் இருக்க வேண்டும், தலைமுடிக்கு அடிப்படையாக ஆக்ஸிஜன் தேவை. இரண்டாவதாக சரியான ரத்த ஓட்டம் இருக்கவேண்டும். இந்த இரண்டும் சரியாக இருந்தாலே முடி உதிர்வது குறையும், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.
தலைமுடி அதிகமாக சிலருக்கு கொட்டும் அதற்குக் காரணம் ஊட்டச்சத்து போதாமை. இந்த அவசர யுகத்தில் பலரும் வெந்ததையும் வேகாததையும் ஜன்க் உணவுகளையும் சாப்பிட்டுவிட்டு பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு ஓடுகிறார்கள். சிலர் காலை உணவை அறவே தவிர்த்துவிடுகிறார்கள். அது முற்றிலும் தவறு. நல்ல சத்தான சமச்சீர் உணவு உண்பது தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவை. உலகிலேயே சீனப் பெண்களுக்குத் தான் விளம்பரங்களில் காட்டுவது போன்று ஆரோக்கியமான தலைமுடி. காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். சைவம் அசைவம் இரண்டையும் அவர்கள் சம அளவில் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வார்கள். உடலில் அசிடிட்டி சேராத உணவுப் பழக்கம் அவர்களுடையது. நம்முடைய உணவில் மிளகாயும், புளியும் அதிகம் சேர்க்கப்படுவதால் அசிடிட்டி உடலில் இருக்கும். அசிட்டி இருந்தால் உடல் ஆரோக்கியம் குறைவதுடன் தலைமுடியும் அதிகம் கொட்டும். எனவே நாம் உண்ணும் உணவில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும்.
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து பத்து உலர்ந்த திராட்சையும் இரண்டு ப்ரூன்ஸ் (இது உலர வைக்கப்பட்ட ப்ளம்ஸ்) சாப்பிட வேண்டும். இது உடம்பில் இருக்கும் டாக்கின்ஸ்களை நீக்கிவிடும். நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க உதவும். தலைமுடியும் பளபளப்பாக மட்டுமல்லாமல் உதிராமல் இருக்கும்.
தலைமுடியைப் பராமரிக்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். முடி கொட்டுகிறதே என்று கவலைப்படுவார்கள். விளம்பரங்களைப் பார்த்து ஏதோ ஒரு எண்ணெயோ ஷாம்பூவையோ வாங்கிப் பயன்படுத்தி பலன் எதுவுமில்லாமல் மீண்டும் அதே பிரச்னையில் அவதிப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை தலைமுடி, நம்முடைய தலைகுடிக்கேற்றவாறு பராமரிப்பு இருக்க வேண்டும்.
மண்டைப் பகுதியில் எண்ணெய் பசை அதிகம் கொண்டவர்கள் தினசரி தலைக் குளிக்க வேண்டும். கெமிக்கல் தவிர்த்து சீயக்காய் அல்லது முட்டை கலந்த ஷாம்பு உகந்தது. வறண்ட மண்டைப் பகுதி உடையவர்கள் மாயிச்சரைசிங் ஷாம்பு உபயோகிக்கலாம். எடுக்கவே கூடாத ஷாம்பு என்றால் கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய வால்யூமைசர் ஷாம்பு. தினசரி குளிக்கும் தண்ணீரில் 3 சொட்டு லாவண்டர் ஆயிலும், 3 சொட்டு லெமன் கிராஸ் ஆயிலும் கலந்து தலைக்குக் குளித்தால் உங்கள் கூந்தலில் சிடுக்கு உண்டாகாது. இயற்கையான பளபளப்பு வரும்.
100 மி.லி. ஆலிவ் ஆயில், 100 மி.லி. விளக்கெண்ணெய், 100 மி.லி. பாதாம் எண்ணெய் மூன்றையும் கலந்து கொள்ளவும். இதில் 50 சொட்டு ரோஸ்மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பே ஆயில் (பிரிஞ்சி இலையில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெய்), 50 சொட்டு சிடர்வுட் ஆயில் ஆகியவற்றைக் கலக்கவும். 1 வாரம் இந்தக் கலவையை அப்படியே வைக்கவும். 1வாரம் கழித்து இந்தக் கலவை எண்ணெயை தினமும் இரவில் தடவிக் கொண்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்கவும். இப்படிச் செய்தால் முடி உதிர்வது உடனடியாக நிற்கும். 1 மாதம் தினம் இப்படிச் செய்தால் கூந்தல் நன்கு வளர ஆரம்பிக்கும்.
மருந்துக் கடைகளில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் எனக் கிடைக்கும். 50 மி.லி. கெட்டியான தேங்காய் பாலில், 3 ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூலை உடைத்துக் கலக்கவும். நாட்டு மருந்துக் கடைகளில் பொடுதலைப் பொடி மற்றும் வில்வம் பொடி எனக் கிடைக்கும். இது இரண்டையும் அந்தக் கலவையில் சேர்த்துக் குழைக்கவும். முதல் நாள் இரவே தலையில் எண்ணெய் தேய்த்திருக்கிறீர்கள். மறுநாள் காலையில் இந்தக் கலவையை தலையில் தடவி பெரிய பல் கொண்ட சீப்பால் நன்கு வாரி விடவும். 1 முதல் ஒன்றரை மணி நேரம் வைத்திருந்து, நீர்க்கச் செய்த மைல்டான ஷாம்பு கொண்டு அலசவும். தினமும் தலைக்கு எண்ணெய் தடவவும். இந்த பேக் தடவுவதை மட்டும் வாரத்தில் 2 நாட்களுக்குச் செய்யவும். இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வளரச் செய்யும்.
தொடர்புக்கு - கீதா அசோக், கேர் அண்ட் க்யூர் 044 33055264
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.