முகப்பு
அழகிய இல்லம்

தங்க, வெள்ளி நகைகளைப் பராமரிப்பது எப்படி?

வாங்கி வைத்திருக்கும் தங்க, வெள்ளி நகைகளைப் பராமரிப்பது பற்றி..

Updated On : 24 மார்ச், 2026 at 5:30 AM
தங்க நகைகள்
பகிர்:

தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும், சுப காரியங்கள் என்று வந்துவிட்டாலே அனைத்து விசேஷங்களுக்கும் நகை வாங்குவது வழக்கம்.

முதலில் ஒரு சவரன் என்று பரிசளித்து வந்தவர்கள் தற்போது குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு கிராம் நகையாவது வாங்கி அன்பளிப்பாக எழுத வேண்டிய நிலை உள்ளது.

எது எப்படியிருந்தாலும் தங்கம், வெள்ளிப் பொருள்கள் வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். வாங்கும் அளவுதான் குறையலாம்.

அவ்வாறு மிகவும் சிரமப்பட்டு வாங்கும் நகைகளைச் சுத்தமாகவும் நீண்ட நாள்களுக்குப் புதிது போல் எப்படி பராமரிப்பது என்று பலருக்கும் தெரிவதில்லை.

அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்துவிடும்.

இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தரமான ஷாம்பு அல்லது சோப்புத் தூளால் தேய்த்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

தங்க நகைகளை ஏன் பெட்டிகளில் வைத்துக் கொடுக்கிறார்கள் என்பதே சிலருக்குப் புரிவதில்லை. காரணம், தங்க நகைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்றால், அதற்குரிய பெட்டிகளில்தான் வைத்திருக்க வேண்டும்.

அதாவது, எப்போதாவது அணியும் ஆரம், நெக்லஸ், கல் வளையல் போன்ற நகைகளை ஒன்றோடு ஒன்று உரசாமல் வைக்க வேண்டும்.

சின்ன சின்ன நகைகள் மற்ற பெரிய நகைகளுடன் சேர்ந்து நசுக்கி, வளையாமல் இருக்க, அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நகைப் பெட்டிகளில் தனித்தனியாக வைத்துகொள்ளுங்கள்.

வெள்ளி ஆபரணங்கள் வைத்துள்ள இடத்தில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால், வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.

ஒருவேளை, கருப்பாகியிருக்கும் வெள்ளி நகைகளை அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்கவிட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும்.

முத்துகள் பதித்த நகைகளை நீரில் அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும்.

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.